top of page

வெளிச்சம்

ந்தியாவின் பல தீவுகளைப் போல அந்தத் தீவும் வங்ககடலின் பரப்பில் ஒரு ஓரமாய் யாரும் எளிதில் அறியா வண்ணம் அமைந்திருந்தது. அந்தத் தீவில் ஒரு அழகான சின்னக் கிராமம். அந்தத் தீவின் அழகும் ரம்மியமும் பிடித்துப் போக அங்குப் பயணமாக வந்தவர்கள் அங்கேயே குடியமர்ந்து உருவாகிய கிராமம் அது. ஊர் நிறைய மரங்கள், இயற்கையாகவே மழைத்தண்ணீர் கடலில் சேரும் அமைப்பு, அடுக்கு அடுக்காக வீடுகள். வீடுகளின் கூரைகளில் தாவரங்கள் படர்ந்து மலை குடைந்து வைத்த குகைகள் போலவும் அதே நேரம் வீடாகவும் அமைந்திருந்தது. விடிந்து மறையும் சூரியனின் காட்சிகள், இரவு நிலவின் வெளிர் வெள்ளை தொனியும், அந்த ஊரை இன்னும் அழகாகக் காட்டியது. அந்த ஊரில் யார் ஒருமுறை வந்தாலும் அந்த இடம் விட்டுச் செல்ல மனமே வராது. அப்படியொரு அழகும் அம்சமும்.


இவ்வளவு இயற்கை அழகு கொட்டி கிடக்கும் ஊரில் விசித்திரமாக ஊருக்குப் பொதுவாக ஒரே ஒரு தெரு விளக்கு மட்டும் இருந்தது. என்னது ஒரே ஒரு தெருவிளக்கா? அப்போ அங்கு வீடுகளுக்கு மின்சாரம் இல்லையா? ஆமாம், அங்கு மின்சாரம் என்பது அந்த ஒரே ஒரு தெருவிளக்கோடு முடிவடைந்தது. அந்த ஊருக்கு அந்த ஒற்றை தெருவிளக்கே தனித்துவமும், சிறப்புமாக அமைந்திருந்தது.


ஊரின் நுழைவாயில் பகுதியில் ஓங்கி நெடுக கெம்பீரமாக நின்றிருந்தது அந்த மின்கம்பம். சொல்லப்போனால் அது ஒரு கலங்கரை விளக்காகவும் படகு செலுத்துவோர் பயன் படுத்தும்வண்ணம் பிரகாசமாகவும், உயரமாகவும் இருந்தது. அதன் வெளிச்ச பரப்பு சாதாரண தெரு விளக்குபோல இல்லாமல் பரந்து விரிந்து அதிக பரப்பளவாக வெளிச்சம் தந்தது. அதன் ஒளி ஊருக்காகச் செய்யப்பட்ட ஒரு சிறு நிலவை ஒத்ததாய் இருந்தது. அது எவ்வாறு, யாரால் நிறுவபட்டது என்பது இன்றளவும் பல கதைகள் சொல்வார்கள், யாரும் இதுவரை சரியாய் சொன்னதில்லை.


அந்த ஊரில், மக்கள் எல்லோரும் அந்தி சூரியன் இமை அடைக்கத் துவங்கியதும், தங்கள் வீடுகளில் சமைத்த தின் பண்டங்களையும், இரவு உணவுகளையும் எடுத்து வந்து அந்தத் தெருவிளக்கின் பகுதியில் வைத்து விட்டு. பெரியவர்கள் கதைகள் பேசுவதும், பிள்ளைகள் ஒன்றாக விளையாடுவதும் என்று ஊரே ஒன்றாய் பொழுதைக்களிப்பர். பின் அதைப் பகிர்ந்துண்டு வீடுகளுக்குச் செல்வர். இது தினமும் அவர்கள் வழக்கமாக இருந்தது.


கிழவிகள் சேர்ந்தமர்ந்து பழைய கதை குசலங்களை சொல்லிப் பல்லில்லா பொக்கை சிரிப்பால் சத்தமில்லா சில்லறைகளை உதிர்த்துக்கொண்டிருப்பர். கிழவர்கள், மண் அரிப்பிற்காகக் கட்டப்பட்டிருந்த குட்டி தடுப்பு சுவரில் அமர்ந்திருந்து பாலிய கதையாடுவர், இளவட்டங்கள் தங்கள் ஜோடிகளைப் பார்ப்பதும், காற்றில் படம் வரைந்து பேசுவதும், இரவு நிலவைத் துணைக்கிழுத்து வர்ணனை செய்து கொண்டிருப்பர். மழலைகள் ஓடி ஆடிக் கற்களைப் பொறுக்கி அடுக்கி, வீதிகளில் தாழ்களை கிழித்தெறிந்து கடலின் ஓயா அலைபோல விளையாடுவர். அவ்வபோது பெரியவர்கள் தங்கள் கனத்த குரல்களால் குழந்தைகளை அதட்டி கட்டுபடுத்துவார்கள். படிப்பவர்கள் பலர் அந்த மின்விளக்கின் ஒளிஅருகே அமர்ந்து எதிர்கால நோக்கை கொண்டவர்கள்போல் கனவைக் கட்டிக்கொண்டிருப்பார்கள்.


எத்தனை கதைகள் எத்தனை இன்பமான நினைவுகளின் பகிர்தல், எத்தனை புதுப்புது செய்திகளின் பரிமாற்றங்கள், எவ்வளவு ஒற்றுமையான விருந்தோம்பல்கள், ஒரு கிராமம் என்று சொல்ல முடிவதில்லை. ஒரு வீடு என்று சொல்வதே பொருந்தும்.


அங்கு வாழ்ந்தால் எவ்வளவு இன்பம் என்று தோன்றி மனம் பொறாமை கொள்கிறதல்லவா. இப்படி யாரோ வைத்த கண்ணோ தெரியவில்லை. அந்த இன்ப நாட்கள் அங்கு வெகுநாட்கள் நிலைக்கவில்லை. ஒரு தேனி கூட்டில் கல்லெறிந்தது போல, சுகமாய் பெய்து கொண்டிருந்த மழை சட்டென்று நின்றது போல அந்த ஊரின் ஒற்றுமையும் கலையும் நாள் வந்தது.


என்றும் போல இன்றும் மாலையில் எல்லோரும் கூடி வந்திருந்தனர். எவரும் இந்த நாளில் வரும் கணங்களில் நடக்க போகும் விபரீதம் அறியவில்லை. எப்போதும் போலக் குறையா மகிழ்ச்சியில் எல்லோரும் அமர்ந்திருந்தனர். அப்போது வெளியூரிலிருந்து சிறிது நாட்களுக்கு முன்பு வந்த ஒருவர் அவ்வபோது தன்னை முன்னிலை படுத்துவதும், ஆகாரத்தில் தனக்கெனத் தனியாக எடுத்து வந்து யாரோடும் பகிர்ந்து கொள்ளாமல் உண்பதும் என்று சில வழக்கத்துக்கு முரணான காரியங்களைச் செய்து வந்தார். ஊர் மக்கள் புதியவர் ஆயிற்றே சீக்கிரத்தில் பழகிவிடுவார் என்று பார்த்தும் பார்க்காதது போல இருந்தனர். இன்று அவர் தனக்கு புத்தகம் படிக்க வேண்டும், தான் தான் இங்கு அதிகம் வேதங்கள் அறிந்தவன் என்றும், அவர்தான் சுத்த உணவு உண்பவர் தெய்வ வழிபாடு செய்யத் தகுதியுள்ள ஒரே ஆள் என்றும். அதனால் அவர் தான் உயர்ந்தவர் என்று தன்னை முன் வைத்து அருகிருந்த அந்த ஊரில் மண் வேலை செய்து வந்த ஒரு ஏழையின் மகளை, அவள் மின் விளக்கின் அருகிலிருந்து படித்துக் கொண்டிருந்தபோது, எழும்பச் சொல்லி, தூரமாய் போய் அமரச் சொய்தார்.


அந்தச் சிறு பெண் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல். ஏதோ தன் உள்ளுணர்வால் உந்தப்பட்டு ஒரு தாழ்வை உணர்ந்து தன் கண்களில் கண்ணீர் நிறைத்தாள், வெளியே சிந்தாமல் இமைஅடைத்து சேர்த்துக்கொண்டாள். அந்தச் சிறுமியுடன் அருகில் படுத்திருந்த நாய் ஒன்று அவரை முறைத்தபடி வாலையும் ஆட்டாமல் தனக்கு ஏதோ புரிந்தது போல அவரைப் பார்த்துக் குலைத்து விட்டு நகர்ந்து போனது.


அவர் இப்படி செய்ததும், மற்றவர்கள் என்ன செய்வது என்று சுதாகரிப்பதற்குள், மற்றொருவர் நான் தான் இந்த ஊருக்காக அதிக செலவு செய்கிறேன். ஏன் இங்குள்ள பராமரிப்பு செலவில் நான் தான் அதிக பகுதியைத் தருகிறேன். எனவே அப்படி என்றால் நானும் தான் உயர்ந்தவன் என்றதும். அவருடன் இருந்த அவர் உறவுகள் சேர்ந்து அப்போ எங்கள் குடும்பம் தான் உயர்வானது என்று சொன்னார்கள். அதனால் நாங்கள் தான் அந்தத் தெருவிளக்கின் அருகில் அமருவோம் என்றனர்.


இவர்களிடம் சிலர் கடன் உதவி பெற்றிருந்ததால் அவர்களை எதிர்த்து அவர்கள் பேசாமல் இருந்தனர். சிலர் நமக்கு எதுக்கு வம்பு என்னதான் நடக்கும் என்று வேடிக்கை பார்க்கலாம் என்று இருந்தனர்.


உடனே ஒருவர் “இந்த ஊரில் முதல் முதலில் குடியமர்ந்தது எங்கள் குடும்பம் தான். பரம்பரை பரம்பரையாக இருந்து வருகிறோம் அப்படி என்றால் எங்களுக்குத் தான் முன்னுரிமை என்றார்”.


சிலர் நாம் எப்போதும் இப்படி நடந்தது கிடையாது ஏன் நமக்குள் இப்படி பிரிவினை பார்கிறோம். நாம் ஒரு குடும்பம்போல் அல்லவா வாழ்ந்து வருகிறோம். இப்படி பேசுவதும் முறை அல்லவே என்று நியாயத்தைச் சொல்லி முடிப்பதிற்க்குள்,


தான் தான் உயர்ந்தவர் என்று சொன்னவர் முதலில் முண்டி அடித்து அமர, மற்றவர்கள் அவரைத் தொடர்ந்து அமர. இப்படி அடுக்கடுக்காகப் பிரிந்து அமர்ந்தனர். அதெப்படி நாம் இரண்டாம் இடத்தில் அமர்வது முதலிடத்தில் தான் அமர வேண்டும் என்று முணுமுணத்தார் செல்வந்தர்.


உடனே அவர் தமையன், “நமக்கு முன் இருப்பவர் ஒருவர் தான். நம்மைப் போல எல்லாரும் கேட்க நேர்ந்தால் இந்த இடமும் கிடைகுமோ என்னவோ. அமைதியாகவே இருப்பது நல்லது” என்று சொல்ல, அந்தப் பேச்சையே நிறுத்திவிட்டார்.


இப்படியே அடுத்தடுத்து அடுக்குகளில் இருந்தவர்களும் தங்கள் இடத்தைத் தக்கவைக்கவே முடிவு செய்தனர். வேடிக்கை பார்த்தவர்களும் நியாயம் சொன்னவர்களும் கடைசியாகத் தள்ளப்பட்டனர். எழுப்பி விடப்பட்ட சிறுமியும், நாயும் தூரமாய் இருட்டில் அமர்ந்தனர். எப்படி இவ்வளவு சீக்கிரமாய் இந்த மனிதர்களிடம் நஞ்சு பரவுகிறது என்று ஆச்சரியபட்டும், கோபப்பட்டும் இரண்டு முறை குரைத்து விட்டுக் கடலின் அலைகளைப் பார்த்தபடி படுத்துக்கொண்டது அந்த நாய். கடல் அலைகள் இப்போது கோபமாகக் கரையை இடிப்பதை பார்த்துத் தன் மனதின் அலையின் ஒற்றுமையை எண்ணிக்கொண்டது.


திடீரென்று ஒரு இருட்டு அந்த நாயின் பின்னாலே சூழ்ந்து கொண்டது. மனிதர்களின் மனதில் குடிகொண்ட இருட்டாகத் தான் இருக்க வேண்டும் என்று அந்த நாய் தன் முன் கால்களில் தலையை வைத்துத் தன் நாக்கை வெளியே விட்டு இரண்டு முறை நக்கி கொண்டு என்னமோ நடக்கட்டும் என்று படுத்துக்கொண்டது.


கூட்டத்தில் ஒரு சலசலப்பு, எங்கும் இருட்டு குடிகொண்டுவிட்டது, மக்கள் என்ன ஆச்சு, என்ன ஆச்சு எனத் தங்கள் அடுக்குகளில் உள்ளவர்களிடம் மட்டும் வினவிக்கொண்டனர். யாரோ ஒருவர் கூட்டத்துல் உரத்த குரலில்


“நீங்கப் பண்ண காரியத்துக்கு வெளிச்சம் ஒரு கேடா? இருட்டிலேயே சாவுங்கணு”


கத்தி எதிரொலியோடு அடங்கியது. கத்தியது யார் என்று தெரியவில்லை. நாய் மட்டும், “தன் மனதில் நினைத்தது வெளியில் எப்படி கேட்டிருக்கும்ணு” கொஞ்சம் தலை தூக்கி பார்த்து ஆச்சரியபட்டது.


எல்லோருக்கும் மின்கம்பம் தன் வெளிச்சத்தை நிறுத்திக்கொண்டது என்பதை சில நிமிடங்களில் புரிந்துகொண்டனர்.


“நான் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து இன்று வரை ஒரு நாள் கூட இந்த மின்கம்பம் ஒளிதராமல் பார்த்ததில்லை”


“புயல் மழை காலத்தில் கூட இது வெளிச்சம் தர மறுத்ததில்லை”


“என் மகன் பேரன் எல்லாம் இந்த மின்கம்ப வெளிச்சத்தில் தான் படித்து முன்னேறினார்கள்"


“இந்த மின் வெளிச்சத்தில் ஒரு நாள் கூட யாரும் பட்டினியாய் இருந்ததில்லை”


இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயங்களைச் சொல்லிக்கொண்டனர். மனதிலும் நினைத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாகக் கலைந்து தங்கள் வீடுகளை அடைந்தனர்.


அடுத்த நாள் காலை, சொல்லி வைத்தது போல், யாரோ அழைப்பு விடுத்தது போல் ஊரே திரண்டு மின்கம்பத்தை பார்க்க வந்திருந்தனர். சோகம் மட்டும் அத்தனை பேரின் மனதிலும் முகத்திலும் நிறைந்திருந்தது. எவரும் வேலைகளுக்குச் செல்லவில்லை. எல்லோரும் என்ன செய்ய எனக் குழப்பத்துடன் நின்றிருந்தனர். கூடவே நேற்று சரியாகச் சாப்பாடு கிடக்காத விரக்தியில் அந்த நாயும் நின்றிருந்தது.


நேரம் கடக்க நிழல்கள் திசை மாறி நகந்தது. மின் கம்பம் நகராமல் கோபித்துகொண்டு கையைக் கட்டி தலை குனிந்து நிற்க்கும் குழந்தைபோல் நின்றிருந்தது.


பகல் முடிந்து இரவு வந்தது. மக்களும் வந்தனர். மின் விளக்கு எரியவில்லை. ஒருவரை ஒருவர் முகத்தை முகத்தைக் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டனர். என்ன செய்வது, என்ன காரணம் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. நாய் மட்டும், அந்தப் புதிதாய் வந்த நபரை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து அந்தப் புது நபர் முன் வந்து,


“எல்லாரும் யார் எவர் என்று பார்க்காமல் தொட்டு அமர்ந்ததுதான் காரணம்” என்று சொல்லி. தான் வைத்திருந்த குவளையில் இருந்த தண்ணீரை தீர்த்த ஜலம் என்று சொல்லி அந்த மின் கம்பத்தில் தெளித்தார். பின் மூன்று முறை சுற்றி வந்து நின்று,


“கவலை வேண்டாம் தீட்டு கழிசுட்டேன்னு”


சொல்லிக் கையிலிருந்த மீத தண்ணீரில் கையைக் கழுவி சாப்பிட துவங்கினார். ஊர் மக்கள் ஒன்றும் பேசாமல் கலைந்து சென்றனர்.


நள்ளிரவில் யாரோ தனியாகத் தூரத்தில் நடந்து வருவது போல் இருக்க. நாய் குரைத்தது. மெல்ல மூக்கால் நுகர்ந்ததும் தெரிந்தவர்தானென அடையாளம் கண்டு அந்த நபரைப் பார்த்து ஓடியது. அது வேறு யாரும் இல்லை, அன்று எழுப்பி விடப்பட்ட அந்தச் சிறுமி தானென அறிந்து அவள் அருகில் வால் ஆட்டிக்கொண்டே அவளைச் சுற்றி வட்டம் அடித்து, அவளோடு நடந்து வந்தது. இருவரும் மின் கம்ப பகுதிக்கு வந்து சேர்ந்தனர். மேகமூட்டம் என்பதால் முழு இருட்டில் சிறிது வானவெளிச்சம் மட்டும் மிச்சம் இருந்தது. சிறுமி அருகிலிருந்த திட்டில் அமர, அவள் அருகில் நாயும் சென்று படுத்துக்கொண்டது. சிறுமி மெளனமாய் அண்ணாந்து பார்த்து ஒரு பெரும்மூச்சு விட்டாள். எல்லோருக்கும் அது வெறும் வெளிச்சமாய் இருந்திருக்கலாம் ஆனால் அவள் அந்த மின் விளக்கின் வெளிச்சத்தை தன் வாழ்க்கையின் வெளிச்சமாகவே பார்த்திருந்தாள். மனதிற்குள்


“நான் எதாவது தப்பு பன்னிருந்தா என்ன மன்னிச்சுக்க. நான் உன்ன தொடக்கூடாதாமே? நான் தள்ளியே இருக்கேன் கொஞ்சம் வெளிச்சம் மட்டும் தாயேன்”. என்று எண்ணி விம்மிக்கொண்டாள்.


தான் எடுத்து வந்த கொஞ்ச சாப்பாட்டை அந்த நாய்க்குக் குடுத்துவிட்டு வீட்டுக்குப் போகத் திட்டிலிருந்து கீழ் இறங்கி மின் கம்பத்தின் அருகில் சென்றாள். மின் கம்பத்தை அண்ணாந்து பார்க்க, அவளுக்கு அதைக் கட்டி அணைக்க வேண்டும் என்றிருந்தது, மெல்ல தன் களங்கமில்லா கரங்கள் எடுத்து மின் கம்பத்தை தொட அதன் அருகில் கொண்டு போனாள். மின் கம்பத்திற்க்கும் அவள் கைக்கும் ஒரு இறகின் இடைவெளியே இருக்க. தன் இதயத்தில் எதுவோ குத்தப்பட்டவளாய் தொடாமல் நிறுத்திவிட்டாள். தன் கைகளைக் கீழே இறக்கி விட்டு வேகமாக வீட்டிற்க்கு ஓடினாள்.


ஊரில் பிரிந்து போன கூட்டம் அவர் அவர்களுக்குத் தோன்றியது போல முயற்சிகளைச் செய்ய முடிவெடுத்தனர். ஒரு சில பிரிவுகள் சேர்ந்து மேலே ஏறி விளக்கைச் சரி பார்த்தனர் எல்லாம் சரியாகத் தான் இருந்தது ஆனால் வெளிச்சம் மட்டும் தரவில்லை. எல்லோரும் என்ன என்று அறியாது குழப்பத்தில் இருந்தனர்.


கூட்டத்தில் ஒருவர். “எல்லாம் சரியாகத் தான் இருந்தது இந்தப் புது நபர் வந்து நம்மைப் பிரிக்காதவரை” என்றார்.


“நமக்கு எங்க போச்சு அறிவு" என்றார் இன்னொருவர்.


“இவரை ஊரை விட்டே துரத்த வேண்டும்” என்றார் ஒருவர்.


“இல்லை இல்லை இந்தக் கம்பத்தில் கட்டி பலி கொடுக்க வேண்டும் என்றார்” ஒருவர்.


அந்த நாயும் ஏதோ சொல்ல வந்தது போல் அவரைப் பார்த்துக் குரைத்தது. அந்தப் புது நபர் தனக்கு எதாவது ஆகிவிடுமோ என்று பயந்து அங்கிருந்து வெளியேற எத்தனிந்தார். ஊரார் எல்லாரும் அவரைப் பிடிக்க முன் வந்தார்கள்.


அப்போது அந்தச் சிறுமி குறுக்கிட்டு “வேண்டாம்” என்று கத்தினாள்.


“அவரும் அறிவீனமாகச் செய்த காரியத்தை அவரை ஒதுக்கி வைத்து நாமும் செய்தால் அதுதான் நம்மைத் தாழ்வாக்கும். அவரை அவர் சுதந்திரத்திலும், நாம் நம் சுதந்திரத்திலும் இருப்பதே சிறந்தது. நான் அவரைவிடக் கீழானவள் என்று நம்பவில்லை. மேலானவள் என்றும் நம்பவில்லை. கீழும் மேலும் என்பது அவர் அவர் நடத்தையில் இருக்கிறது என்று நம்புகிறேன். அவர் இப்போது உயர்ந்தவரா தாழ்ந்தவரா என்பதை அவரே முடிவு செய்துகொள்ளட்டும். என்னைப் பொறுத்தவரை நாம் முன்பிருந்தது போலவே இருப்பதே சரி என்றாள்”.


ஊரார் அவள் பேச்சைக்கண்டு வியந்தும், சரியெனக்கண்டும். மனமுருகி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு சிறு பிரிவு கூட நம்மால் தாங்க முடியாது என்று எல்லோரும் மாறி மாறி உணவுகளை ஊட்டி, கட்டி அணைத்து மீண்டும் பழைய நிலைக்கு வந்தனர். அந்தி கடந்து இரவு வந்தது. அன்று முழுதும் மக்கள் ஒன்றாய் இருந்தனர், ஒருவரை தவிர.


மின் கம்பம் இன்றும் வெளிச்சம் தர மறுத்தது. மக்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல். ஒன்று சேர்ந்து மின் கம்பத்திடம் மன்னிப்பு கேட்டுக் கதறி ஓய்ந்தார்கள். கடலின் ஓசையும், காற்றின் இரைச்சலும் மட்டும் மீதமிருந்தது. எல்லோரும் சோகமாக வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தார்கள்.


அந்தப் புதிதாய் வந்த நபர், சிறுமி அருகில் வந்து. “நான் செய்தது பெரும் தவறு. உன் நடத்தையில் நீ நிரூபித்து விட்டாய் என்னைவிட மிகவும் உயர்ந்தவள் நீ என்று. தீட்டு பட்டவன் நான் தான் என்னை மன்னித்துவிடு தாயே” என்று மண்டியிட்டார்.


சிறுமியோ தன் முகத்தில் விரிந்த புன்னகையுடன் தன் கையிலிருந்த சர்க்கரை பொங்கலை அவரிடம் நீட்டினாள். அவரும் அதைச் சற்றும் யோசிக்காமல் வாங்கி உண்டு மக்களைப் பார்த்தார். மக்களும் அவரைத் தனக்குள் ஒருவரெனப் பார்வையிலே பதிலைத் தந்தார்கள்.


எல்லோரும் ஒன்றாய் கிளம்பி வீடுகளுக்கு நகர. சிறுமியோ மின்கம்பத்தின் அருகில் சென்று அண்ணாந்து பார்த்து உன்னை ஒருவாட்டி கட்டி அணைச்சுக்கிறேன் என்ற பாவையில். ஆசையாய் மின் கம்பத்தை கட்டி அணைத்தாள்.


மின் கம்பம் மீண்டும் வெளிச்சம் தந்தது. ஊருக்குப் பிடித்திருந்த இருட்டு மறைந்தது.




-லி

writerlivin@gmail.com

average rating is 4.5 out of 5, based on 150 votes, People love it
Comments

Share Your ThoughtsBe the first to write a comment.
bottom of page