வெள்ளை மலை
வெள்ளை மலை
கோப்பையில் விழுந்து
நினைவுகளாகக் கரைகிறது
நாளைப் புது மனிதன்
சட்டையை அணிய
இன்று நிர்வாணமாகிறேன்.
நாளையும் அமிர்த
தேனீர் வீழ்சியில்
எதிர் நீச்சலிடும் மீனும்.
மாறும் திட்டங்களும்
வெள்ளை மலையாக
கோப்பையில் கரைகிறது
-லி
உள்ளே வெளியே
அடைக்கப்பட்ட சாளரம்
வெளியே காற்று
பலமாக மோதுகிறது.
குளிரும், வெயிலும்
தூசியும், நினைவுகளும்
உள்ளே வரப் போராடுகிறது.
அடைபட்ட கதவுகளை
திறக்கக் கைகள் இல்லை.
உள்ளேயும் தூசியும்
சிலந்தியும், இருட்டும்
நினைவுகளும்
நிரம்பி இருக்கிறது.
-லி
இரவென்னும் பிசாசு
இரவென்னும் பிசாசு
ஏன் என்னை
சித்திரவதை செய்கிறது?
என் வெளிச்சத்தை
குடித்து என்னை
குருடனாக்குகிறது.
இரவு தினமும்
புதிய இருட்டின்
முகமூடி அணிகிறது.
நேற்றின் இருட்டு
இன்றின் இருட்டும்
வித்தியாசப்படுகிறது.
ஒரு தீக்குச்சித் தீயின்
கால அளவு போதும்
நான் தப்பித்துக்கொள்ள,
அது எரிந்துவிடாதபடி
இரவு புயலாடிக்கொண்டு
பிசாசாகி விடுகிறது.
-லி
தேநீர் நஞ்சு
ஒரு கோப்பை
தேநீரை மதுவென
தினமும் குடிக்கிறேன்.
அவளுக்கு மது
பிடிக்காது
விலக்கச் சொன்னாள்.
அவள் முகம்
தேநீரில் நஞ்சாக
நுரை கொள்கிறது
-லி
வண்ணங்களின் இழப்பு
வண்ணம் இழந்த
ஓவியன் ஒருவன்
வண்ணங்களைத் தேடி
அலைந்தான்.
வானவில்லிடம் கேட்டான்
வண்ணத்துப்பூச்சியிடம் கேட்டான்
காலைப் பொழுதிடம் கேட்டான்
இயற்கை எழிலிடம் கேட்டான்
எல்லாம் அவனுக்கு
இல்லை என்றதும்,
அவைகள் மீது
கறுப்பு வெள்ளை
ஊற்றி அழித்தான்
-லி
