
விரல் மை
இன்று இந்தக் காலை விடியாமலோ, இல்லை நான் கண்விழிக்காமல் இருந்திருந்தாலோ, நலமாக இருந்திருக்கும். எப்படியானாலும் இன்று என்னைக் கொன்று விடுவார்கள். பல மாதங்களாகப் பணத்தை திரும்பத் தராமல் இழுத்தடிக்கிறேன். அசலும் தர இயலவில்லை, வட்டியும் தர இயலவில்லை. என்ன செய்ய?
சில மாதங்களுக்கு முன் பிள்ளைக்கு நடந்த விபத்திற்கு அவசர மருத்துவ செலவுக்காகப் பத்து வட்டிக்கு பதினைந்தாயிரம் ரூபாய் சேகரிடம் வாங்கியிருந்தேன். சேகர் என்றதுமே மூத்திரம் முட்டிக்கொள்கிறது. பயம் தொண்டையை அடைத்துவிடுகிறது. அவன் இப்போது அரசியல் பிரமூகர் வேறு. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் எங்கள் தொகுதியில் வெற்றிபெற்றிருந்தான். ஊரில் அவன் சொல்வது தான் சட்டமாக மாறியிருக்கிறது. நேற்றுள்ள கட்ட பஞ்சாயத்துகளை முடித்து, குடித்து படுத்து எவன் இரத்த கறையுடனோ உறங்கியிருப்பான். அவன் விடியல் பதினோரு மணிக்குத்தான். இன்று அவனுக்கு விடியாமல் இருக்குமென்றால், இல்லை அவன் கண்விழிக்காமல் இருப்பான் என்றால் எனக்கு அது நல்ல நாளாக இருக்கும்.
மணி இப்போ காலை 6, நான் உயிர் வாழ இனி நான்கு ஐந்து மணி நேரம் தான் பாக்கி இருக்கிறது. அவன் விழித்தால் அனேகமாக இங்கு வந்து என் குடலைதான் வறுத்துக் காலை உணவாகத் தின்பான் என்று நினைக்கிறேன். முகமெல்லாம் வெளிறி நடுக்கத்துடனே எழுந்து முகக்கண்ணாடியில் என்னைப் பார்க்கிறேன். இன்னொரு முறை என்னைப் பார்க்க முடியாது என்பது போலத்தான் என் பிம்பமும் என்னைப் பார்க்கிறது.
ஏதாவது வழி பிறக்குமா என்று கண்ணாடியில் தேடியும் நூற்றுக்கு 99.9% இல்லை. யாரும் கடன் தரவில்லை, அடுத்த வேளை சாப்பாடுக்கே வழி இல்லை. என்னால் என் மனைவி பிள்ளைகளுக்கு ஏதாவது பிரயோஜனம் இருந்ததா என்றால் இந்தக் கடன் ரூபாயை வாங்கி பிள்ளை உயிரைக் காப்பாற்றியது தான். ஆனால் அதுவே அவர்கள் நிம்மதியை தினம் தினம் கெடுக்கும் என்று நினைக்கவே இல்லை. தினமும் வட்டி கேட்டு அடியாட்கள் வந்து மிரட்டுவதும் அவளைச் சீண்டுவதும், என்று மீதமிருந்த நிம்மதியும் பறி போய்த் தினமும் போராட்டம் தான்.
செத்து போயிரலாமெனப் பல முறை நாங்கள் நினைத்தும். என் புள்ளைய நினச்சா கொஞ்சம் வாழ ஆசையாத்தான் இருக்கும். என் புள்ள ராசாத்தி ஐந்தாவது படிக்குது பக்குவமான கெட்டிகார புள்ள எப்படியாச்சும் எங்கள காப்பாத்திரும் என்கிற நம்பிக்கைல ஒவ்வொரு நாளையும் அதன் ஒவ்வொரு நொடியையும் முடிந்தவரை தள்ளிக் கொண்டோம்.
நான் தினக்கூலி வேலாயுதம். இன்னவேலை என்று இல்லாமல் எல்லா வேலையும் செய்வேன். இலச்சுமி என் பொண்டாட்டி கூலி வேலைக்குப் போனப்போ சித்தாளா வந்திச்சு பேசிக் கட்டிவந்தேன். அவளைவிட எனக்கு இருபது ரூபாய் சம்பளம் அதிகமாக இருந்ததால என்னை ஆபிசர் கணக்கா பாத்திச்சு. வெவரம் இல்லாத பாசக்கார புள்ள. இப்போ பக்கத்து காலனில வாத்தியார் வீட்டுக்கு வேலைக்குப் போயிருக்கும். கூடவே பிள்ளையையும் கூப்டு போவா காலையில ஏதாவது மீதமிருந்தா குடுப்பாங்க. அப்படியே பக்கத்துல கவுர்மெண்டு பள்ளிகூடத்துக்கு அனுப்பிடுவா.
இன்று மதியத்துக்கு மேல அவங்க வாழ்க்கை இன்னும் நரகமாயிடும். இது என்ன வாழ்க்கை தானோ? என்னதான் உழச்சாலும் பணத்த எவனோ எடுத்திட்டு போயிடுறான். மிஞ்சுறது என்னமோ தண்ணி மட்டும் தான் அதுவும் கேனுக்கு முப்பது ரூபாய்க்கு மேல ஆயிடிச்சு. பழைய மேஸ்த்திரி கிட்ட பணம் கேட்டிருந்தேன் கிடைக்குதா பாக்கலாமென,
வேகமாக முகத்தை அலம்பி, சட்டைய போட்டுவிட்டு மிதிவண்டிய எடுத்திட்டு கிழம்பினார் வேலாயுதம்.
மேஸ்த்திரி கையை விரிதார், ஆயிரம் ரூபாய் மட்டும் இருக்கு என்று தந்து அனுப்பினார். அதை வைத்து என்ன செய்ய. சேகருக்கு அசலும் வட்டியுமாக இப்போ ஒரு லட்சத்து முப்பத்தி மூன்றாயிரம் ரூபாய். இதோ இந்த நொடியில் இன்னோரு முன்னூறு ரூபாய் அதிகமாயிருக்கும்.
என்று மேஸ்த்திரிவீட்டின் தெரு முனையில் இருந்த டீக்கடையில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன். எதிரே சாமியார் மாதிரி ஒரு வெள்ளைகாரன் அமர்ந்திருந்தார். முகமெல்லாம் மீசையும் தாடியும் தலைமுடியும் மூடி இருந்தது. கண்கள் மட்டும் எந்த மறைவும் இல்லாமல் நட்சத்திரம்போல முன்னிக்கொண்டிருந்தது, இல்லை இராஜ நாகத்தின் வைரம்போல இருந்தது. அதை என்னால் வார்த்தைகளில் சொல்ல இயலவில்லை. அழுக்கு சட்டையும், துண்டும், பல நிறங்களில் ஒரு தூக்குப்பையும் வைத்திருந்தார். காலில் செருப்பு அணுயவில்லை.
நான் வந்து அமர்ந்ததுமுதல் என்னை இமை அடையாமல் வேறெங்கும் திரும்பாமல் பார்த்துக்கொண்டு இருந்தார். நான் அவர் பார்வையிலிருந்து விலகிக் கொள்ள இடம் மாறியும் திரும்பியும் அமர்ந்து பார்த்தேன். ஒருகட்டத்தில் எழும்பிப் போகலாமென முடிவு செய்து இரண்டு மூண்று அடி எடுத்து வைத்திருப்பேன். எங்கே போவது? நேராகச் சுடுகாட்டிற்கு தான் செல்ல வேண்டும். மீண்டும் அதே வெள்ளைகார சாமியார் முன் சென்று அமர்ந்தேன்.
டீக்கடையில் யாரோ நேரம் கேட்க மணி பதினொன்றரை என்றார் கடைக்காரர். அருகே எங்கோ சங்கு சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கச் சாவு ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அது சேகரின் சடலமாக இருந்து விடாதா என ஆசைப்பட்டேன். சாமியார் என்னைப் பார்த்துச் சின்னதாகச் சிரித்தார். எனது அடுத்து வரப்போகும் மணிக்கூறுகளை அறிந்துகொண்டவர் போல இருந்தது. சேகர் எனனை கொல்வான் என்கிறாரா? இல்லை சேகர் செத்து போயிடுவான் என்கிறாரா எனச் சந்தேகம் வந்தது. நான் என்னையே அறியாமல் என் மார்பில் கையை வைத்து நானா என்பது போல் சைகை மொழி செய்து கேள்வி கேட்டேன். அதற்கு அவர் எதுவும் பேசவில்லை.
அவர் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் பொது, யாரோ என் தோளில் கைவைத்து தட்டினார்கள். சாவு தான் என்னை அழைக்கிறது என்பதை அறியாமலே திரும்பிப் பார்த்தேன்.
சாவு தான்.
சேகரின் கடன் வசூலிக்கும் சொக்கலிங்கமும், முட்டியும் நின்றிருந்தார்கள். முட்டி என்பது அவன் பெயரில்லை அவன் பெயர் எனக்குத் தெரியாது ஊரில் எல்லோரும் அவனை முட்டி என்றுதான் அழைத்தார்கள். கடைசியாகச் சாமி கும்பிட்டு போய்ச் சேர மனம் தயாரானது. இந்நேரத்திற்கு எங்கும் போக முடியாதே. எதிரே இருந்த சாமியாரை மீண்டும் என்னை அறியாமலே கையெடுத்து கும்பிட்டேன். அவர் என்னை அருகழைத்து ஏதோ தரப் பைக்குள்ளாகக் கையை நுழைத்தார்.
நான் முன்னிலையில் பக்தனாகவும், பின்னிலையில் பலியாடாகவும் நின்றிருந்தேன். பையிலிருந்து திருநீரை மூன்று விரல்களில் பேனா பிடிப்பது போலக் கிள்ளி எடுத்து எனக்கு முன்பாக நீட்டினார். நானும் அதைக் கையில் வாங்கி சிறிது நெற்றியில் இட ஆரம்பித்தபோது அவர் சைகையில் வாயை அகலமாகத் திறந்து காட்டி சாப்பிடும்படி கைகாட்டினார். நான் மொத்தமாக வாயில் இட்டு அதை என்னவென்று நினைப்பதற்குள். பின்னிலிருந்து இருவர் என்னை இழுத்து இரு சக்கர வாகனத்தில் நடுவில் அமரவைத்தார்கள்.
“உன்ன பாத்தவுடனே அறுத்துப் போடத்தான் சேகர் அண்ணன் சொன்னாரு. கடை தெருவில நின்னாதால உன்ன தொலைவுக்குக் கூட்டியாறோம். இத்தா ஒட கீட நினச்ச மவன எந்த மூலையிணாலும் கண்டுபிடிச்சு மூணு நாள் பட்டினி போட்டு அடிச்சே கொல்லுவோம் எது வேணும்ணு நீயே முடிவு பண்ணிக்க”
என்று பின்னாலிருந்த முட்டிச் சொன்னான்.
நான் எதுவும் பேசமுடியாத மந்த நிலையிலிருந்தேன். அறுக்கப் போகும் ஆடு, கழுத்தில் பிடி இறுகி கண் பிதுங்க, தன் நிலை அறிந்ததும் சில நேரம் அமைதியாவது போன்ற அமைதி. எதுவும் பேசவில்லை ஒன்றுமே நினைக்கவோ செயல்படவொ உடலில் தெம்பில்லாதது போல உணர்ந்தேன். அடிவயிறு பசித்து எரிவது போல எரிந்து கொண்டிருந்தது. வாந்தி வரும் போல, காது அடைபட்டு தண்ணீருக்குள் இருப்பது போல மாறியது. சாமியார் தந்த பொடி என்னமோ எனக்குள் செய்வதாகத் தெரிகிறது. உடல் முழுதும் மரத்துப் போனதுபோல உணர்ந்தேன். ஒரு நூறு மனிதர்களின் குரல் எனது கடந்த காலத்து நினைவுகளைக் காதில் கிசுகிசுப்பது போல இருக்க. சில பயமாகவும், சில அசிங்கமாகவும், சில சிரிப்பூட்டுவதாக இருந்தது. ஒருவேளை சாவுக்கு முன் இப்படித்தான் இருக்குமோ எனவும் எண்ணிக்கொண்டேன். அதில் ஒரு குரல் நான் அவசரமாக எதையோ செய்ய ஓடுவது போன்ற காட்சியைக் கண்முன் நிறுத்தியது. நியாபகத்தில் அந்தத் தினத்தின் நிகழ்வு தெழிவுபட்டதும். மற்ற குரல்கள் எல்லாம் மறைந்துபோனது. சிரிப்பு என்னை ஆக்கிரமித்தது.
சிறிது நேரத்தில் ஒரு தென்னந்தோப்பில் நிறுத்திக் கீழே தள்ளிவிட்டார்கள். நான் சிரித்துக்கொண்டே விழுந்தேன். கைகால கட்டிடு முட்டியெனச் சொக்கலிங்கம் சொன்னான்.
“இவனையா அவனே முட்டிப் போட்டு நிப்பான்” என்று சொல்லிக்கொண்டே, கீழே கிடந்த என் கால்களில் மிதித்தான்.
“சாவ போறவனுக்கு என்னல சிரிப்பு?” என மாற்றி மாற்றி மிதித்துக்கொண்டே கேட்டான். அதற்கும் சிரித்துக்கொண்டேன்.
சொக்கலிங்கத்தின் கைப்பேசியில் அழைப்பு மணி ஒலித்தது. “என்ன பணம் குடுத்தானா? இல்லணா ஆயிரம் ரூபாய் தான் இருந்திச்சு" வேற காசு எதுவும் வச்சிருக்கல, அந்தக் கூவ கிறுக்கன் மாதிரி சிரிச்சுகிட்டே கிடக்கான்"
எனச் சொல்லிக்கொண்டிருந்தான். முட்டி வேலாயுதத்த பிடித்து முழங்காலில் நிற்க வைத்துக்கொண்டிருந்தான்.
“என்ன சிரிக்கானா? பெரிய மயிரா அவன்?, அவன கடை குடோனுக்கு தூக்கிட்டுவா”
எனச் சேகர் கத்த சொக்கலிங்கம் முட்டியை நிறுத்தும் படி கையைக் காட்டினான். “சரிணா” என்று சொல்லிக் கைப்பேசியை அணைத்துவிட்டு.
“உனக்கு வந்த வாழ்வ பாரு அண்ணன் கையால சாவுற பெரும கிடச்சிருக்கு”
எனச் சொல்லி மீண்டும் வேலாயுதத்த வண்டியில் ஏற்றிக் குடோனுக்கு தூக்கி சென்றார்கள்.
ஆம் தூக்கித்தான் சென்றார்கள், இருவரும் சேகர் அண்ணனைத் திருப்திப்படுத்த வேலாயுதத்தை தோப்பில் வைத்து அடித்துத் துவைத்திருந்தார்கள். போதாததிற்கு அவன் சிரிப்பை நிறுத்தவுமில்லை. தெரு நாயை அடிப்பது போல அடித்தும் வேலாயுதம் அலறவில்லை, கத்தவில்லை. ரப்பர் போல மாறிக்கிடந்தான்.
வண்டியில், இருவருக்கும் நடுவில், பாதி உயிரோடு, வண்டி ஓட்டிக்கொண்டிருந்த சொக்கலிங்கத்தின் முதுகில் சாய்ந்து கிடந்தான். வாயில் இரத்தம் வடித்துக்கொண்டே எளனமாகச் சத்தம் இல்லாமல் சிரித்தான். முட்டிச் சொக்கலிங்கத்திடம்.
“அடிச்ச அடியில பைத்தியமாயிட்டன்னு நினைக்கேன் தாயோளி சிரிக்கான்"
எனச் சொல்லி வேலாயுதத்தின் பின் மண்டையில் கத்தியின் பின் பகுதிவைத்து இடித்து இரத்தம் வரப் பிளந்தான். வேலாயுதம் மூர்ச்சையுற்றான்.
கண் விழிக்கையில் சேகருக்கு சொந்தமான டாஸ்மாக் கடையின் பின் பகுதி குடோனில் நிற்வாணமாகக் கட்டி வைத்திருந்தார்கள். காயங்கள் இல்லாத உடல் பகுதியே இல்லை.
இரத்தகறை சீள் போலப் பிடித்து மூடியிருந்த கண்களைத் திறக்க இயலவில்லை. மெதுவாகக் கண்களுக்குப் பெலன் குடுத்து திறக்க முயர்சித்தான் மேல் இமை முடி இரத்த துளியில் புதைந்து உறைந்திருந்தது. இழுபட்டதும் முள்ளில் பிடித்துகொண்ட தோல் பொல வலித்தது. வலது கண் மட்டுமே அவனால் திறக்க முடிந்தது.
கண் திறந்தபோது இரவாகியிருந்தது. பகலெல்லாம் அடித்திருபார்கள் என அவனுக்கு யூகிக்க முடிந்தது. எலும்புகள் அங்கங்கே உடைந்திருப்பதை உணர்ந்தான். சொட்டு தண்ணீர் எங்கேயாவது கிடைக்குமா என நினைத்தான், அவனால் கேட்கவோ அதற்கு மேல் அதைத் தேடவோ முடியாத நிலை. இந்த நேரத்திற்கு எல்லாம் என்னை எரித்திருக்க வேண்டும். இல்லை புதைத்திருக்க வேண்டும். எப்படி உயிரோடு இருக்கிறேன்? ஏன் என் உயிரை மட்டும் விட்டு வைத்திருக்கிறார்கள்?, எப்படி தாங்கிக்கொள்கிறேன்? நிச்சயம் என்னால் தாங்கியிருக்க முடியாது, ஒருவேளை சாமியாரின் பொடி தான் காபாற்றுகிறதோ என்னவோ? என் உடலின் மரத்த நிலை மாறவே இல்லை. என் வலிகளின் கூடவே இவைகளை எண்ணிக்கொண்டிருக்கையில் யாரோ உள்ளே வருவது தெரிந்தது.
சேகர் தான்.
இன்று அவனுக்கு நான் தான் விருந்தாகியிருக்கேன் என நினைத்துக்கொண்டேன். சேகர் கால் செருப்பில், கட்சி கரை வேட்டியில் இரத்த கறை இருந்தது. அவன் என் அருகில் வந்து ஒரு பீப்பாவில் அமர்ந்தான்.
“உனக்கு நான் பணம் தரும்போதே என்ன சொன்னேன்? சரியா வட்டியும் அசலும் வந்து சேரலேணா கொன்னுடுவேன் அதுவும் அடிச்சே கொன்னுடுவேண்ணு சொன்னேன்ல. அப்புறம் என்ன ? என் மேல பயம் இல்ல அதானே. இவன் என்ன பண்ணிடுவான்னு பாத்திடலாம்னு நினைச்சிருப்ப, வீட்டில கக்கூஸ் கூட இல்லாத நாயி என்ன ஏமாத்த பாகுறல. ரேசன்ல ஓசி ஆரிசி வாங்கி தின்னுறல அந்தத் திமுரு தான். எல்லாம் கட்சிய சொல்லணும்”. எனச் சொல்லிக்கொண்டே காறி வேலாயிதத்தின் மேல் துப்பினான்.
“நீ திரும்பத் தரமுடியதுனு தெரிஞ்சும் ஏன் கொடுதேன் தெரியுமா? ஒரு நாள் என் நாய்களுக்கு வைக்கிற சோறுக்கு கறியா இருக்கட்டும்ணு தான்.
வேலாயுதம் எதும் பேசாமல் மீண்டும் சிரித்தான். சிரிக்க முடியாமல் வாய் தாடையும் உடைந்திருந்தது. ஆனாலும் அதையும் மீறிச் சிரிந்தான்.
சேகர் முழு வீச்சாக அவன்மேல் பாய்ந்து பிடித்து அவன் முக தாடியில் கையால் பல முறை குத்தினான்.
“சிரிக்கிற நீ சிரிக்கிற? ஏண்டா சிரிக்கிற? நான் உனக்குப் பாக்க எப்படி தெரியுறேன்? சர்கஸ் கோமாளி மாதிரி இருக்கேனா? மவன இனி நீ உயிரோட இருக்க வேணாம் டா? நீ எதுக்கு சிரிக்கிறண்ணும் எனக்குத் தெரியவேணாம். எனச் சொல்லிக்கோண்டே பின் இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை எடுத்துக் கையைப் பினால இழுத்து வேலாயுதத்தின் வயிற்றை பார்த்து இறக்கினான்.
வேலாயுதம் இம்முறை அவனால் முடிந்த அளவுக்குக் கத்தி சிரித்தான்.
“குத்த வந்த கத்தியை நிறுத்திவிட்டு. என்னங்கடா இவனுக்கு வலிக்குதா இல்லையா? எப்படி அடிசாலும் சிரிக்கிறான். எனச் சேகர் முட்டியை பார்த்து முறைக்க. முட்டி அவன் அருகில் வந்து எட்டி உதைத்தான்.
சேகர், மீண்டும் அந்தப் பீப்பாவில் அமர்ந்து பெருமூச்சு விட்டபடி அமர்ந்தான்.
“நீ எதுக்கு சிரிக்கிறணு மட்டும் சொல்லிடு, சொல்லாம செத்தா எனக்கு அதுவே மன அழுத்தமாயிடும். உன் பொண்டாட்டி பிள்ளைய தேடி போய்ப் பழி தீத்திடுவேன். நீ சொன்னண்ணா நீ காசு எதுவும் தர வேண்டாம். உன்ன வீட்டிடுறோம்” என மிரட்டிக் கேட்டான்.
இம்முறை என் மனைவி பிள்ளை நினைவில் வந்தார்கள், மீண்டும் ஒரு முறை வாழ ஒரு வாய்ப்பு கிடைக்குமோ எனச் சின்னதாய் ஒரு தூண்டிலின் புழுவை ருசிக்க நினைத்தது. அதைவிட நான் செய்த தவறு ஒன்றை சரி செய்யவாச்சும் வாழ வெண்டும் என நினைத்தேன்.
எதையோ முடிவு செய்தவனாக, கையைக் காட்டி தண்ணீ என்பது போலப் பெருவிரலால் சைகை செய்தான். சேகர் திரும்பித் தலை அசைக்க, சொக்கலிங்கம் தண்ணி பாக்கெட் எடுத்து வந்து பியித்து அவன் முகத்திலும் வாயிலும் பீச்சி அடித்தான்.
வேலாயுதம் வாயில் போன தண்ணீரை நுணைத்துவிட்டு மீண்டும் மெதுவாகச் சின்னதாகச் சிரித்துவிட்டு தன் உடைந்த குரலில்.
போன தேர்தல்ல… அவனால் பேச முடியவில்லை வாய் தாடை வலித்தது.
போன தேர்தல்ல நீங்க ஒட்டுக்கு காசு கொடுத்தப்ப நானும் வாங்கினேன்.
சிறிது நேரம் மூச்சை பிடித்தான் பேச அடிவயிற்றிலுருந்து காற்றை வெளியேற்ற இயலவில்ல.
தேர்தல் அண்ணைக்கு வேலைக்குப் போயிட்டு நேரம் முடியபோறப்போ தான் ஓட்டுபோட ஓடிவந்தேன். நான் தான் அந்தப் பூத்தில் பதிந்த கடைசி ஓட்டு.
கண் இமைகள் மூடி, மீண்டும் திறக்க முடியாமல் திறந்தது. எப்படியாவது இதைச் சொல்லிவிட்டுத்தான் சாக வேண்டும் என முயற்சித்தான்.
நான் ஒட்டு போட்டதும் தினத்தை முடித்துக்கொண்டார்கள். அண்ணைக்கு நான் உங்க சின்னத்தில தான் ஓட்டு போட்டேன். எனச் சொல்லும்போது உதடு சிரித்தது. பல் தெரிய, வாய் எல்லாம் இரத்தம் ஒழுகச் சேகரை பார்த்துச் சிரித்துவிட்டு சொன்னான்.
“என்னோட அந்த ஒத்த ஓட்டு பிச்சையில தான் நீ ஜெயிச்ச. என்ன கொன்னாலும் பரவாயில்ல நான் பண்ண பாவத்திற்கு தண்டனையா நினச்சுக்கிறேன்”.
சிறிது நேரம் யாரும் எதுவுமே பேசவில்லை. சேகர் எதுவும் சொல்லாமல் எழும்பிப் போயிவிட்டான்.
முட்டியும் சொக்கலிங்கமும் மாற்றி மாற்றிப் பார்துக்கொண்டனர்.
வேலாவுதம் உடைந்து திரும்பியிருந்த இடது கையின் ஆள் காட்டி விரலை நிமிர்த்து வைத்துக்கொண்டான்.
-லி
