
வழிபோக்கர்கள்
தனது தோள்பையில், அன்று அலுவலகத்திற்க்கு தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்தான் அறிவு, தங்களை பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு சாதி சங்கத் தலைவரின் மகன், இளம் மென்பொறியாளன். கல்லூரி படிப்பு முடித்து ஐந்தாண்டுகள் வேலை அனுபவம் ஆகியிருந்தது. அலுவலகத்தில் மேலாளருக்கு அடுத்த படியாய், தான் வேலை செய்யும் குழுவிலிருந்த நபர்களை முன் நின்று பயிற்சியளிக்கும் பொறுப்பில் இருந்தான். அவன் முதல் சம்பளம் வந்தவுடன் தவணையில் வாங்கின தன் இரு சக்கர வாகனமான, கறுப்பு நிற ராயல் என்பீல்ட் கிளாசிக் 350ல் செல்வது தான் வழக்கம்.
தவணை என்றதும் வீட்டில் தகப்பனாரின் உறுமல்கள் இருந்தன. அவர் முழு தொகையைத் தருவதாகச் சொல்லியும் தன் சம்பாதியத்தில் தான் வாங்குவேன் என்று தனக்குள் வகுத்திருந்த சுயத்தின் வெளிப்பாடாகத் தவணையிலேயே வாங்கியிருந்தான். தவணைகள் முடிந்ததும் கார் வாங்க எண்ணம்.
தன் மடிக்கணிணி, அதன் மின் செலுத்தி, அதைத் தொடர்ந்து, கைப்பேசி, சிறிய அளவிலான குறிப்பெடுக்கும் புத்தகம். எழுது கோல், தண்ணீர் டப்பா. கூடவே தான் படித்துக்கொண்டிருந்த அண்ணல் அம்பேத்கர் எழுதிய “இந்தியாவில் சாதிகள்” என்ற புத்தகத்தையும் எடுத்து வைத்து. பையை அடைத்துத் தோளில் போட்டுக்கொண்டான்.
மேசையிலிருந்த கைக்கடிகாரத்தை கட்டிக்கொண்டு, ஐந்து வருட பழக்கமுள்ள தன் பணப்பையை எடுத்துத் தன் கால்சட்டை பின்னால் வைத்துக்கொண்டான். வண்டி சாவியை எடுத்துவிட்டு. அருகிலிருந்த வாசனை திரவியத்தைத் தன்மீது பீச்சிவிட்டு. அடையாள அட்டையைக் கழுத்தில் அணிந்து. வேகமாகத் தன் அறையிலிருந்து வெளியே வந்து.
“நான் கிளம்பிறேன் மா” என்று வீட்டின் பின்கட்டில் நின்றுகொண்டிருந்த தன் அம்மாவிற்க்கு விடை சொல்லும்போதே, சேர்த்து நடுவறையில் சாப்பாடு மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த தகப்பனுக்கும் சொன்னான். அறிவு வீட்டின் முன் நிலை கதவைத் தாண்டி வெளியே வந்த அடுத்த நொடி, எழுந்து கையை அலம்பிக்கொண்டே,
“ஏன் உன் மவனுக்கு வேற சட்டை இல்லையோ? தெனமும் கறுப்பு சட்டை தானா? என்று கேட்டுக்கொண்டே தன் தோளில் கிடந்த தன் சாதி கொடியின் வண்ணம் பதித்த துண்டில் கையையும், முகத்தையும் துடைத்துக்கொண்டார் அந்தச் சாதி தலைவர்.
அவன் இப்போது தலையில் தலைக்கவசம் அணிந்து, தோள்பையை முதுகில் மாட்டிக்கொண்டு, வண்டியை இயக்கினான். அவன் வீட்டிற்கும் அலுவலகத்திற்க்கும் ஒன்பது மைல் தூரம் தான். பிரதான சாலைவழி சென்றால் நெரிசலும், மாசும் அதிகம் என்பதால். தன் வீட்டிக்கும் அலுவலகத்தையும் இணைக்கும் ஒரு கிராமபுற சாலை வழியாகவே தினமும் செல்வது வழக்கம்.
இந்த, கிராம சாலை வயல்களும், ஓடைகளும், நல்ல இயற்கை காட்சியும், அங்கங்கே சில வேகதடைகளும், சில குண்டும் குழியும், கதிர் அறுப்பு இயந்திரம் போன தடமும், தென்னைமர நிழலும், சாலையின் ஓரத்தில் விரிக்கப்பட்டிருந்த நெல் தானியங்களும், அடுக்கிவைக்கப்பட்டிருந்த மூட்டைகளும், சூரியகாந்தி தோட்டமும், இரண்டு ஆற்றுப்பாலங்களும், ஒரு சுடுகாடும், தூரமாய் தெரியும் மலைமுகடுகளும், சில மின்கம்பங்களில் புல் கட்டுகளுடன் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மிதி வண்டிகளும், நாய்களும், கோழிகளும், மாடுகளும், ஆடுகளும், மயில்களும், தோப்புகளிலும், அறுப்பு முடிந்த வயல்களில் வெள்ளையாய் தானியம் கொத்தும் நாரைகளும், கொக்குகளும், மின் கம்பிகளில் இருக்கும் காக்கைகளும், அங்கங்கு உலக இயக்க வேலைகளுக்காக நடமாடும் மனிதர்களுமாக எழிலின் உச்சமான சாலை அது. அந்தச் சாலையின் பயணத்தில் கிடைக்கும் மன நிறைவு நிலைக்காவே நான்கு மைல்கள் அதிகம் இருந்தபோதும் இந்தச் சாலையில் தான் தினமும் அலுவலகம் செல்லும் வழக்கத்தை வைத்திருந்தான்.
இன்று தன் வீட்டிலிருந்து ஒரு மைல் தூரத்தில் இந்தக் கிராம சாலை துவங்கும் பகுதியை அவன் நெருங்கியதும். வண்டியை இடது புறமாகச் சாலைக்குத் திருப்பினான். வளைவில் வண்டி மெல்ல முன்னேறிச் சாலை சிறுக சிறுக பார்வைக்கு தெரிய ஆரம்பித்ததும். யாரோ ஒருவர் கை மட்டும் நீட்டி வண்டியை நிப்பாட்டச் சொல்லும் சைகையைக் காட்டுவதுபோல் தெரிந்தது. பெரியவர் ஒருவர் தன் இடது கையில் சிறு பிளாஸ்டிக் பையைப் பிடித்துக்கொண்டு, வலது கையை நீட்டிக்கொண்டு நின்றிருந்தார்.
அந்தப் பெரியவரைப் பார்த்தவுடன், அறிவு வண்டியின் வேகத்தைக் குறைத்து, அவரை வண்டியில் ஏற்றலாமா வேண்டாமா? பின்னாடி தொங்கும் பையை முன்னாடி மாற்ற வேண்டும், அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது, யார் இவர்? எங்கு வரைக்கும் போவார்? என்ன செய்ய என்று யோசித்து முடிப்பதிற்க்குள் பெரியவரின் அருகில் வண்டி வந்தது. அருகில் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டான். அவர் வேறு யாருமில்லை, அவன் போகும் வழியில் அமைந்திருந்த சுடுகாட்டில் வேலை செய்பவர். இப்போ என்ன செய்ய நிப்பாட்டவா? வேண்டாமா? அவரை வண்டியில் ஏற்றுவது அப்பாவுக்குத் தெரிந்தால் என்ன நடக்கும். சற்று நேரம் யோசித்தவனுக்கு, அம்பேத்கரின் புத்தக வரிகள் அவனை அறியாமலயே அந்தப் பெரியவர் முன்பு தானாக வந்து நிற்கச் செய்தது.
வண்டி நின்றதும், அவருக்கும் இவனை அடையாளம் தெரிந்தது. ஏதோ தவறு செய்தது போல் சட்டென்று கையைக் கீழே இறக்கி ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்றார். அவனுக்கு அதைப் பார்த்ததும் தன்னை அவர் ஒதுக்கி வைத்தது போல் ஒரு உணர்வைக்கொண்டான். ஒருவேளை இப்படித்தான் ஒவ்வொரு முறையும் அவரும் உணர்ந்திருப்பாரோ என்று மனதில் சலனப்பட்டான். முதுகில் தொங்கிக்கொண்டிருந்த பையை எடுத்து அவனுக்கு முன் பக்கம் வைத்துக்கொள்ளும் தொனியில், ஏற அழைத்தான், சம்மதம் சொன்னான், அவரை அவர் அலுவலகத்தில் விடுவதாகத் தன் செய்கைகள் மூலமாகச் சொல்லிக்கொண்டான். அவரும் தயங்கி தயங்கி ஏதோ அவசரம் என்பது போல் வண்டியில் ஏறி அமர்ந்தார்.
வண்டி இப்போது இருவரது அலுவலகங்களுக்குப் போகும் பாதையில் சென்றுகொண்டிருந்தது. பெரியவரின் மனதில் இப்போது ஒரு பயம் கலந்த மரியாதையும், ஒரு அன்பும், ஒரு சகோதர உறவும் சின்னதாய் முளைத்திருந்தது. அவர் முகம் ஏதோ ஒரு பெரிய கனவின் பயணத்தைத் துவங்கியது போலப் பூரித்திருந்தது. அவனுக்கும் ஒரு பயம் கலந்த ஒரு புது உணர்வு ஏதோ அடைபட்டு கிடந்த பழைய வீட்டின் உடைபட்ட இடைவெளி வழி வந்த வெளிச்சம் போல ஒரு புதுமையை உணர்ந்தான்.
பெரியவருக்கு மனதில் அவன் தந்தைமூலம் நடந்த பல கொடுமைகள் மனதில் வந்து அவர்மீது பட்ட எதிர்காற்றில் மறைந்தது.
அவனுக்கு இப்போது அந்தப் பெரியவரிடம் எதாவது பேச வேண்டுமா? இப்படி மெளனமாக இருந்து விடலாமா? என்று மனது அடித்துக்கொண்டிருந்தது. வண்டி வழக்கமான பள்ளங்கள், வேகதடைகளை தாண்டி ஏதோ புரட்சியின் சின்னம்போல, கர்வமாக டுப்பு டுப்பு டுப்பு என்று காலச்சக்கரத்தை நகர்த்திக்கொண்டது.
தம்பிக்கு நல்ல மனசு, சாப்பிட்டாரானு தெரியல, இறங்கும்போது காப்பி சாப்பிட வாரியளானு கேட்டுக்கனும், வருவாரானு தெரியல, அவங்க நம்மகூடவெல்லாம் சாப்பிடமாட்டாங்க கேக்கவேணாம், வேலை நல்லா போய்கிட்டுருக்காணு கேட்டுபாப்போமா? கேக்கணுமேணு கேட்ட மாதிரி தான் இருக்கும் வேண்டாம், ஒரு வேளை கேட்டாலும் இந்தத் தலை கவசம் தாண்டி அவுரு காதுல விழுமோ என்னவோ? கேட்டாலும் பதிலு வருமோணு தெரியல. எப்படி வண்டில ஏத்தினாங்கணு தெரியலியே? நாம தான்ணு அவருக்குத் தெரியலயோ? நாமதான்ணு சொல்லிடலாமா? தெரியாம ஏத்திகிட்டு போறாருணு தான் தோணுது. இன்னைக்கு என் பொண்ணு பாத்தா எப்படி இருக்கும்? மொத முறையா பெரிய பைக்கில வாறேன். இது எல்லாம் நிசம்தானா? என்று எண்ணிக்கொண்டே இருந்தார்.
அவனும் மனதில் பெரியவரு அமைதியா வாறாரே. நல்லா இருக்கீங்களாணு கேக்கவா? எப்படி கேக்க அவங்க நல்ல இருக்கிறபடியா நாம வச்சிருக்கோம்?, அவருக்கு ஒரு பொண்ணு இருந்திச்சே? அவர் கூடச் சில நேரம் வேல பாக்குமே, அவர் பொண்ணு தானோ? அப்பா வேற இவங்கள அசிங்கமா நடத்திருக்காரே? பேசாம இப்போ மன்னிப்பு கேட்டிருவோமா? அட சீ என்ன சாதி கருமமோ?, யாரு இத உருவாக்கினது? அவரு, அவரு வேலைய பாக்கிறாரு, நான் என் வேலைய பாக்கிறேன். அப்போ அவருக்குப் பொறந்தா அந்த வேலை தான் பாக்கனுமா? இந்தச் சமூகம் அவங்கள சுயநலமா தானே வச்சிருக்கு, அந்த வேலைய செய்ய ஆளு வேணும்னு தானே அத மேம்படுத்தாம வச்சிருக்காங்க? எல்லா ஊருக்கும் மின்சார சுடுகாடு கொண்டு வந்து அத அந்த அந்தக் குடும்பமே எரிக்கிற மாதிரி பண்ணவேண்டியது தானே?.
சாவுல வேற சம்பிரதாயங்கள் செய்யணும்ணு சொல்லுவானுங்க. சாவு கையேடும் வழிபாட்டு முறைகளும் அச்சு போட்டுக் குடுக்கணும். இதுல பொதைக்கிற முறை வேற இருக்கு. ஆமா நான் ஏன் இதை எல்லாம் யோசிக்கிறேன்? அவரு இப்போ என்னப்பத்தி என்ன யோசிச்சுகிட்டு இருப்பாரு? அவரு பொண்ண பள்ளிக்கூட சீருடையில பாத்திருக்கிறேன். நல்லா படிச்சு என்னமாதிரி ஒரு வேலைக்குப் போகணும். எந்த வேலையும் குறஞ்ச வேலை இல்ல எந்த மனுசனும் தாழ்ந்த மனுசனும் இல்ல, சுய மரியாதையா அவர நடத்தும்போதே அவர் பாக்குற வேல உயர்ந்த வேலையாகிறது.
சுயமரியாதை இல்லாம நான் பாக்குற வேலைய பாத்தாலும் அது உயர்வா இருக்காது. இன்னைக்கு நான் அவர வண்டியில ஏற்றிக்கொண்டதால நான் ஒண்ணும் பெருசா புரட்சி பண்ணிடல. நாளைக்கு என் அப்பா இருக்கும்போது அவர யோசிக்காம இப்படி வண்டியில ஏத்திகிட்டா வேணா புரட்சியின் ஆரம்பம்ணு சொல்லலாம். என்று அவன் மனதில் அசை போட்டுக்கொண்டிருக்கும்போதே பெரியவர் வேலை செய்யும் சுடுகாடு வந்தது.
வண்டியை ஒரமாக நிறுத்தினான். பெரியவர் அவன்மீது கைவைக்காதபடி கவனமாகக் கீழே இறங்கினார். இப்போ அவருக்கு அவனிடம் நன்றி சொல்லனும். அவர் குனிந்த தலையை நிமிர்க்கவில்லை அங்கும் இங்கும் பார்த்தபடி எப்படி சொல்லலாம் என்று யோசித்தார். அவனிடம் தைரியமாகப் பேச அவருக்கு மனம் இன்னும் பக்குவபடவில்லை. அவன் இப்போது முதல் கியரை தட்டி வண்டியை நகர்த்த தயாரானான். அறிவு மனதிலும் பெரியவரிடம் ஏதாவது பேசிவிட விடயம் கிடைக்குமா என அலசிப்பார்த்து தோற்று போனான். எது நம்மைத் தடுக்கிறது என்று கூட அவனால் யூகிக்க முடியவில்லை. வண்டியை நகர்த்த கிளட்சை மெது மெதுவாக விடுவிக்க விடுவிக்க வண்டியின் டயர் மெல்ல நகர துவங்கியது. பெரியவர் வண்டியின் நகர்தலை உணர்ந்தவராய் மெல்ல தலையைத் தூக்கி அறிவை பார்த்தார். அவனும் நகர்தலின் வேகத்திற்க்கு ஒத்து தலையைத் திருப்பி அவரைப் பார்த்து “வரேன்" என்று சொல்லும் பாவனையில் தலையை ஆட்டி, வாய் திறக்காமல் உதடுகளை அகல நெடுக்கி மனதிலிருந்து புன்னகையை தந்தான்.
அந்தப் புன்னகையின் ஆயிரம் வார்த்தைகளைத் தன் கண்களால் கேட்டு மனதில் நெகிழ்ந்து. நெகிழ்வின் உந்துதலால் முகம் மலர்ந்து நின்றார் பெரியவர்.
இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஆனால் அவர்கள் மனதில், நாளை என்னும் துவக்கத்தின் முதல் புள்ளியில் நின்றிருந்தனர்.
-லி
