
மெட்டவெர்ஸ் உலகம்
மெட்டவெர்ஸ் உலகில் ஒரு நாள் மாலைப் பொழுது, நிஜத்தில் அது மாலைப் பொழுது அல்ல. அது கற்பனையால் உருவாகியிருந்த ஒரு அழகிய கடர்கரை. வானம் அழகிய இளம் சிவப்பு நிறத்தில் கடலோடு இணைந்து, ஊதாவோடு நீலமும் குளைந்த நீராய் அலைகளும், காணும் திசை எல்லாம் பரவிக் கிடந்தது. சூரியன் மறைவது போல் மிக ரம்மியமான காட்சி. கடலுக்கு மேலே வானத்தில் இரு டால்பின்கள் பறந்து கொண்டிருந்தன. இரு டால்பின்களும் ஒன்றுடன் ஒன்று விளையாடி இளம் காதலர்போல் உடலோடு உடல் ஒட்டி, உணர்வுகள் பருமாறி அந்த அழகு அந்தி மாலை நேரத்தை அனுபவித்து விளையாடிக் கொண்டிருந்தன.
இந்தக் கால நிகழ்வு எப்போதும் மறையாது வேண்டுமென்றால் நமக்கு வேண்டியது போல் தனிப்பயனாக்கலாம். சூரியன் மறையாமலும், வந்த அலைகள் மீண்டும் மீண்டும் கரையை தொட்டும். டால்பின்களின் விளையாட்டு மறையாமலும், மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டே இருந்தது. அங்கு அந்த அழகு ரம்மியத்தை அனுபவித்து காலத்தை நகர்த்த பல அவதார்களின் உருவில் மனிதர்கள் நிகழ்னிலையில் இருந்தார்கள், ஒவ்வொருவரும் அவரவர் நண்பர்களை, புதிய மனிதர்களை அறிந்து கொண்டும், தங்களின் தகவல்களைப் பகிர்ந்து கொண்டும்பொழுது களித்தார்கள்.
ராக்கிபாய்2034 பயனர் ஐடி, உள் நுழைந்ததும் அவனுக்கான அவதார்கள், உடைகள், தலைமுடி துவங்கி காலணிவரை அத்தனையும் பதிவிறக்கம் செய்ததும், மேம்படுத்த மேலும் நிறைய விடயங்களும் இருந்தன. தன் மனதில் தான் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசை இருந்ததோ, அப்படியொரு வடிவத்தை நிஜத்தில் தான் இருக்க முடியவில்லை, நிழல் உலகிலாவது இருப்போம் என்று வடிவமைதிருந்தான்.
தன் வயதை விடக் குறைவான வயது தெரியும் படியான அவதாரை எடுத்துக்கொண்டான், அவதாரின் இயல்புநிலை வடிவத்தின் பொருட்களை மாற்றி மற்றவர்களுக்கும் தனக்கும் வித்தியாசத்தைக் காட்ட ஆடைகளை மாற்றிக் கொண்டான், கண் கண்ணாடி, காலணி போன்ற சில பொருட்களைப் பணம் கொடுத்துத் தனியாகப் பதிவிறக்கம் செய்து அதின் நிறங்களை மாற்றித் தன் அவதாரை தனித்துவப் படுத்திக் கொண்டான். நடப்பதற்கு பதில் தரைமட்டத்தில் மிதந்து நகரும் ஒரு மிதவை பலகையை மாட்டிக் கொண்டு. அந்த மெய்நிகர் உலகின் ஒரு சிறு பகுதியான இந்தக் கடற்கரைக்குள் நுழைந்தான்.
கடற்கரையின் அழகு ரம்மியமும், அதன் ஓசையும் அவன் விழி செவிக்கு நல்ல உணர்வு போதையை தந்தது. மிதவை பலகையில் மிதந்த படி அந்தப் பகுதியைச் சுற்றி வந்தான். இதற்கு முன்பு இருந்த இலவச பகுதிகளைவிட இது அவனுக்குப் பிடித்திருந்தது. இலவச பகுதியில் பயனாளர்கள் அதிகமாய் இருந்தனர், அங்காங்கே இவன் வேறு வலைத்தளங்களில் பார்த்த, குறும் செய்தி அனுப்பிய, பேசிய காரியங்களைக் குறித்ததான விளம்பரங்கள் வைக்கப்பட்டிருந்தன. நேரக் கட்டுப்பாடு கொடுக்கப்பட்டிருந்தது, அடுத்தவருடன் உரையாடலாம், ஆனால் அவர்களின் விவரங்கள் மற்றும் அவர்களை நண்பர் வட்டத்திற்குள் சேர்க்கும் வசதிகள் தடுத்து வைக்கபட்டிருந்தது. இப்போது ராக்கி இருக்கும் தனிப்பட்ட சந்தா செலுத்தப்பட்ட பகுதியில் எல்லா வசதிகளும் இருந்தன.
சிறிது நேர சுற்றலுக்கு பிறகு, தூரமாய் ஒரு பெண் அவதார் நின்றிருந்தாள் அவள் கூடுதலாக வாங்கிய ஒரு சிறு ரக ரோபோவை போன்ற ஒரு நாய் குட்டியை அவளருகில் நிறுத்தி இருந்தாள். சுயவிவரம் அறியும் ஒரு பகுதியைத் தொட ஒரு சிறு சதுர வடிவ நிலை காட்டியை தூரத்திலிருந்து அவள் அவதாரின் மேல் படும் படி வைத்தான். உடனே இவன் முன்பு திரைபோல ஒரு கண்ணாடி வந்து, அவள் ஐடி பிரிட்டி_பேபி, பெயர், புகைப்படமும், மின்னஞ்சல் முகவரியும், இன்னும் சில பொதுவான தகவல்களைக் காட்டியது. வந்த தகவல்களைப் பார்த்துக் கொண்டே அவள் அருகில் போய் “உரையாடு” எனும் பொத்தனை தட்டப்போக அவளும் அவள் நாய் வடிவ பொம்மையும், மறைந்து போனார்கள். பிரிட்டி_பேபி வெளியேறினார் என்ற சிறு செய்தி குமிழி ஒன்று அவள் அவதார் நின்ற இடத்தில் வெளி வந்து மறைந்தது. அவள் தற்செயலாக வெளியேறி இருந்தாள்.
ஏமாற்றமடைந்த ராக்கி திரும்பி நகர்ந்து கொண்டே அவள் பயனர் ஐடிக்கு சந்திக்கும் கோரிக்கை கொடுத்தான். கொடுத்த மாத்திரத்தில் ஏற்றுகொள்ளப்பட்டு. மீண்டும் அவள் சற்று தொலைவில் உள்னுளைந்தாள். ஆச்சரியம் தாங்காதவனாய் வேகமாய் அவளை நெருங்கினான்.
அவதார்களுக்கு தோழமை பகுதி ஒன்று இரண்டு மீட்டர் வட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. அதனுள் ஏற்றுக்கொள்ளப்பட நண்பர்கள் மட்டுமே வர இயலும். அப்படி அவர்கள் வந்ததும் ஒரு வரவேற்பு நிகழ்வாய் சில இதய வடிவ, பூக்கள் வடிவ, புன்னகை வடிவ எமோஜீக்கள் வளையத்தைச் சுற்றி பறந்து மாயும். இப்படி அவன் உள் நுழைந்ததும் அரங்கேறியது. பார்ப்பதற்க்கு அனிமேசன் படங்களில் தலைவனும் தலைவியும் சந்தித்து கொள்ளும் காட்சிக்கு நிகராய் இருந்தது.
அவள் அவதார், திரும்பி அறிமுக கைஅசைவை காட்டியது. பதிலுக்கு இவன் தன் கையை உயர்த்த போகும் வேளையில். தொலைபேசி அழைப்பு மணி அடித்தது. அழைத்தது அப்பா, எடுக்கவா வேண்டாமா, கையைத் தூக்கவா? என ஒரு இக்கட்டான சூழலில் அழைப்பை ஏற்றான். அவன் அவதாரோ காத்திருப்பு நிலைக்கு மாறி அசைவற்று நின்றது. அவன் அருகில் உரையாடலில் உள்ளார் என்கிற ஒரு செய்தி குமிழி மிதந்து நின்றது.
சற்று ஏமாற்றத்துடன் அவள் வெளியேறிவிடலாம் என் முடிவெடுக்கும் நொடியில்.
“சாரி… சாரி அப்பா அழைத்தார்”
என்று வருத்தமுகமாய் சொன்னான். பதிலுக்கு அவள் புன்னகைத்தாள். இவர்கள் உரையாடல் அந்த இரண்டு மீட்டர் வட்டத்திற்குள் உள்ள நபர்கள் மட்டுமே கேட்க முடியும். அந்த வட்டத்திற்க்குள் வேறு நபர்கள் வரலாம் தடுக்காலாம் என்கிற வசதியும் இருந்தது. அவன் உள்ளே வந்ததும் அவள் அந்த வளையத்தை வேறு நபர்கள் நுழையாதபடி தடுக்கும் செயலைச் செயல்படுத்தினாள்.
மெல்ல இருவரும் மெளனமாக அலைகளுக்கு அருகில் நடக்கத் துவங்கினர். பறந்து கொண்டிருந்த டால்பின்கள் விளையாடிக்கொண்டே இவர்கள் அருகில் அவ்வபோது வந்து போனது. சற்று நேர உரையாடலுக்குப் பிறகு இருவருக்கும் இருவரை பிடித்துப் போக. அவளை எப்படியாவது கவர்ந்து விட வேண்டும் என்று. யாரும் இல்லா கடற்கரை என்னும் மேம்படுத்தப்பட்ட பகுதியை வாங்கி தன் சூழலை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தினான். அங்கு இருந்த மனித அவதார்கள் எல்லாம் காணமல்போய் இவர்கள் மட்டும் அந்த
கடர்கரையில் பொழுதைக் கழித்தனர்.
நிஜத்தில் அவன் தன் அறையில் அமர்ந்து கொண்டு, நிழலில் கடற்கரையில் மனதின் ஆசைகளை அனுபவித்து கொண்டிருந்தான்.
அந்த நிழல் கடலில் வீசப்பட்ட வலையில் விழுந்தது மீன்கள் மட்டும் அல்ல.
-லி
