
மீண்டு இயங்கிய உலகம்
நெற்கதிர்களின் மணத்தை காற்று மண்ணில் குழைத்து அது போகுமிடமெல்லாம் பரவவிட்டு சென்றுகொண்டிருந்தது. காற்றில் கதிர்கள் உரசும் சத்தம் எனக்கு இன்று எரிச்சலை தருகிறது, திடீர் திடீர் என்று தூரமாய் உரக்க கேட்கும் கட்டிட இடிபாடுகளின் சத்தம் எனக்குப் பயத்தை உண்டாக்குகிறது, என் அடிவயிறு முழுதும் அங்கலாயிப்புகள் நிறைந்து மூச்சும் திணறி, நான் அடக்க நினைத்தும் அது முடியாமல் வடிந்து கொண்டிருந்த கண்ணீரையும், விம்மலையும் இனி யார் துடைப்பார்கள்?
“நீ மட்டும் ஏன் என்னைச் சுற்றி கீச்சுகிறாய்? என் அனாதை நிலையைப் பரிகசித்துச் சிரிக்கிறாயா” என, அவனைச் சுற்றி பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவியை அருகில் கிடந்த சிறு கல்லை வீசி, துரத்தினான். “இனி நான் என்ன செய்வேன்? அடுத்து என் முன் வைக்கப்படும் ஒவ்வொரு நொடியும் என்னைக் குழப்பத்தின் பாதாளத்தில் விழச்செய்கிறது. ஒவ்வொரு இதயத்துடிப்பும் நான் இனி தனியாக என்ன செய்வேன்? என்ற கேள்வியை மட்டும் திரும்பத் திரும்ப என் காதுகளில் சத்தமே இல்லாத மொழியின் நடையில் கேட்கிறது.
அவன், தன் தகப்பனின் ஈரம் காயாத கல்லறையின் அருகில் அமர்ந்து, தன் தகப்பன் இறக்கும் தருவாயில் அவன் கையில் கொடுத்த சுருக்குப்பையை கையில் பிடித்தபடி விம்மி அழுது கொண்டிருந்தான். சட்டென்று ஏதோ தோன்றியவானாய் வேகமாய் தன் குடிசைக்குள் ஓடிக் கையில் வைத்திருந்த சுருக்குப்பையை தூக்கி வீசி எறிந்துவிட்டு, கட்டிலில் அமர்ந்து முடிவெடுப்பதும், அதைத் தடுப்பதும், மீண்டும் நினைப்பதும், அழுவதும் என என்ன செய்வதென்று தெரியாமல் அங்கலாய்த்துக்கொண்டான்.
அவன் வீசி எறிந்த சுருக்குப்பை அருகில் பறந்தமர்ந்தபடி எதையோ சொல்லியாக வேண்டும் என்பதுபோல் கீச்சு செய்தது. உணர்வுகளால் அடைபட்ட அவனுக்குப் பறவையின் மொழி புரியவில்லை.
அருகே இருந்த ஜன்னல் வழியே வந்த ஒளி கீற்று அவன் கண்களில் பட, அது வந்த திசையைப் பார்த்தான், அங்கு, தூரமாய் கண்ணாடியில் மின்னியபிரதிபலிப்பும், மலை புடைத்து எழுவது போன்ற விசித்திர சத்தமும் கேட்க. ஏதோ முடிவெடுத்தவனாய், வேகமாய் குடிசையின் கதவைச் சாற்றிவிட்டு அந்த ஒளி வந்த திசையைப் பார்த்து ஓடினான்.
அவன் இருந்த உலகம் சிறிய பரப்பளவில் தட்டையாக இருந்தது, 80 சதவிகிதம் கட்டிடகாடுகளும், மீதமிருந்த 20 சதவிகித வயல் நிலமுமாக இருந்த விசித்திரமான உலகம். ஒவ்வொரு நிமிடத்திற்க்கும் கட்டிடங்கள் எஞ்சி இருந்த நிலத்தை விழுங்கிக்கொண்டு புடைத்து எழுந்தன, அவ்வுலகில் அசுர வேகத்தில் வயல் நிலங்கள் தாமாகவே கட்டிடங்களாக மாறிக்கொண்டிருந்தது. ஒரே நாளில் ஒரு மரம் வளர்ந்துவிடுவதுபோல் கட்டிடங்கள் மண்ணை கிழித்துக்கொண்டு வளர்ந்தன. கட்டிடங்களுக்கு ஜன்னல் கதவுகள் இல்லை, பாதைகளில் மனிதர்கள் இல்லை, எங்குமே மரங்கள் இல்லை, அங்குச் செங்குத்து செவ்வக உருவம் கொண்ட கட்டிடங்கள் தவிர வேறு எதுவுமே அந்த நகர பகுதியில் இல்லை.
தன் வயல் நில பகுதியிலிருந்து ஓடி, நகர பகுதியான கட்டடகாடுகளின் முகப்பில் மூச்சிரைக்க ஓடி வந்து சேர்ந்தான். கட்டிட பகுதி விரிவடைவதை கண்டு ஆச்சரியப்பட்டு, தன் நிலத்தையும் கட்டிடங்களாக மாற்றும் வழியைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தவனாய், நகரத்தின் முகப்பில் நின்று திரும்பித் தன் வயல்வெளியின் திசையைக் கடைசியாய் ஒருமுறை பார்த்துக்கொண்டான்.
சிட்டுக்குருவி வேகமாய் அவன் முன்னே பறந்து அவனை உள்ளே போக விடாமல் தடுத்து எச்சரிக்கை செய்தது. அவன் அதைப் பொருட்படுத்தாமல் குருவியைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தான். சிட்டுக்குருவி படபடத்தப்படி நகரத்திற்கு வெளியே சத்தமாய் கீச்செரிக்கை செய்தபடி பறந்தது.
நகரத்திற்குள்ளே நுழைந்த அவன் மெல்ல நடந்து முன்னேறி யாரவது இருக்கிறார்களா என்று தேடிக்கொண்டிருந்தான். வெகுநேரம் கடந்தும் யாரும் தென்படவில்லை. நடந்து, நடந்து நகரத்தின் நடுவில் வந்து நான்கு பக்கமும் இருந்த தெருக்களில், எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் நின்றிருந்தான். எங்குப் பார்த்தாலும் ஓங்கி நின்ற கட்டிடங்கள். எதுவும் புரியாமல் நின்றிருந்தவனின் காலடியில் அந்த உலகின் பணத்தாள் ஒன்று காற்றில் அடித்துவரப்பட்டு பறந்து வந்து விழுந்தது. அதைக் கண்டதும் விழி விரித்து வேகமாக எடுக்கக் குனிந்தபோது எதிரே வேறொரு மனிதன் ஒரு மூட்டையுடன் வேகமாக ஓடி வருவதைக்கண்டான்.
அவன் இவனைப் பார்த்ததும் திடுக்கிட்டு, தன் கையிலிருந்த பணமூட்டையை பிடிங்கிவிடுவானோ என்று பயந்து மூட்டையை இறுக்கமாகப் பிடித்துக் கவனமாய் இடைவெளி விட்டு இவனைக் கடந்து போக முயன்றான். அவனிடம் தகவலைக் கேட்க இவன் முற்படுவதற்குள், அவன் பண மூட்டையுடன் இவனைக் கடந்து தூரமாய் ஓட்டம் எடுத்தான்.
பணம் இருக்கும் இடத்தை வேகமாக அடைந்துவிட வேண்டும் என்று முடிவு செய்து, கிழே கிடந்த பணத்தை கையில் எடுத்ததும் அவனை அறியாமலே அவன் நிலத்தில் புதிதாய் ஒரு கட்டிடம் புடைத்து எழும்பியது. அவன் எடுக்கும் பணத்திற்க்கு அவன் நிலம் கட்டடமாய் மாறும் என்பதை அறியாமல். பண மூட்டையுடன் வந்தவன் திசையை நோக்கி ஓடினான். வழியில் இவன் கையில் எடுத்த ஒவ்வொரு பணத்திற்கும் ஒவ்வொரு கட்டிடங்கள் அவன் நிலத்தில் முளைத்தன.
வெகுநேரம் ஓடி நகரத்தின் ஒரு மேடான பகுதியில் பண மரம் நிற்பதை கண்டான், மரத்தின் இலைகள் எல்லாம் பணமாக இருந்தது. மனமெல்லாம் மகிழ்ச்சி பெருக்கி, மேலும் கீழும் குதித்து ஒரு நொடி கூட வீணாக்காமல் பணத்தை அள்ளத்துவங்கினான். மரத்தின் அருகில் இருந்த கோணியில் அள்ளி நிரப்பினான். கோணி நிரம்பவே இல்லை. மரத்தில் இலைகளாய் இருந்த பணத்தையும் பறித்துக் கோணியில் நிரப்பினான். அவன் பணத்தை எடுக்க எடுக்க அவன் நிலம் எல்லாம் கட்டிடங்களாய் மாறியது. மரத்தில் ஒரு பணம் கூட மீதம் வைக்காமல் மூட்டைக் கட்டிக்கொண்டான். நகரம் இப்போது முழுவதுமாக விரிவடைந்து வயல் நிலங்கள் எதுவும் மீதம் இல்லாமல் முழுவதும் கட்டிடங்களாக மாறியிருந்தது.
அந்தத் தட்டை உலகமே வயல் நிலங்கள் அற்று கட்டிடங்களாக மாறி இருந்தது. எல்லா திசைகளிலும் கட்டிடங்கள், கட்டிடங்களைத் தவிர வேறு எதுவுமில்லை.
மூட்டை நிறைய பணத்தை தூக்கிக்கொண்டான், ஒரு முறை வயலையும், வீட்டையும் நினைத்துக்கொண்டு, வீடு சென்று நிம்மதியாய் இருக்கலாமெனப் பெருமூச்சு விட்டு, வந்த வழி பார்த்து நடக்க துவங்கினான். வழி நெடுக பணம் அவன் பையை மட்டும் அல்ல அவன் எண்ணங்களிலும் நிரம்பி இருந்தது. அதைச் செய்யணும், இதைச் செய்யணும், என்று மனம் அங்கலாய்த்து அலைந்து கொண்டிருந்தது. கால்கள் நடந்த நேரத்தையும், திசையையும் மறந்தவனாய் அந்தக் கட்டிட காடுகளுக்குள் நடந்து கொண்டிருந்தான்.
நேரம் கடக்க, அவன் எந்த இடத்தில் இருக்கிறான் என்பதை அவனால் யூகிக்க இயலவில்லை, எல்லா இடமும் ஒரே மாதிரியான தோற்றம் தந்தது. முன்பும், பின்பும், இடமும் வலமும், கண்ணுக்கு எட்டும் வரை பாதை நீண்டு கிடந்தது, இருபுறமும் கட்டிடங்கள் மட்டுமே கண்ணில் பட்டது. தொண்டை இப்போது வரண்டு தண்ணீர் கேட்டது. எங்கேயாவது தண்ணீர் கிடைக்குமா என அலைந்துகொண்டிருந்தான்.
எங்குமே இல்லை, எல்லா இடங்களிலும் கட்டிடங்கள். எங்கும் நிசப்தம், காற்றின் ஓலமும் அவன் இதய துடிப்பை தவிர அங்கு எதுவுமே கேட்கவில்லை.
மெல்ல தன் தனிமையை உணரத்துவங்கினான், விடியற்காலை குளிர் மெல்ல காது வழி நுழைவதுபோல் அவனுக்குள் பயம் மெல்ல நுழையத் துவங்கியது. துணைத் தேடியபோது வரும்போது பார்த்த மனிதன் நினைவுக்கு வர, அவனால் முடிந்த அளவுக் கத்தி கூவ, தாகத்தில் தொண்டை அடைத்துப் பாதி குரல் தான் வெளியேறியது, வெளியேறிய குரலும் எதிரொலியாய் அவனிடமே திரும்ப வந்தது.
பயம், குருவி வேண்டாம் என்று கீச்சிய சத்தத்தை நினைவுபடுத்தியது, எப்படியாவது வீட்டை அடைவது என முடிவெடுத்து ஓட்டமெடுத்தான், சிறிது நேர ஓட்டத்தில் அவன் கண்ட காட்சி அவனைக் கல்லாக உறைய செய்தது. அவன் கால்கள் ஓடாமல் நின்று நடுங்கிக்கொண்டே மெதுவாய் அடிமேல் அடி வைத்து நகர்ந்தது. சற்று தொலைவில் முன்பு மூட்டையுடன் பார்த்த மனிதன் இறந்து கிடந்தான்.
இவன் தன்னை சற்று சுதாரித்துக்கொண்டான். யாராவது அவனைப் பணத்திற்க்காகக் கொன்றிருக்கலாமென எண்ணி தன் பண மூட்டையை இறுக்கமாய் பிடித்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்து. அவனைக் கொன்றவர்கள் தன்னையும் கொல்லகூடும் என்று முன்னெச்சரிக்கையாய் சிறிது அருகே போனபோது மீண்டும் அதிர்ந்தான்.
காரணம் பணப்பை திருடு போகவில்லை, யாரும் அவனைக் கொலை செய்யவில்லை. அருகில் சென்று பார்த்தபோது தான் இவனுக்கு விளங்கியது. அவன் தாகத்தால், பசியால் உணவு கிடைக்காமல் தன் பணமூட்டையிலிருந்து பணத்தை உணவாய் உண்டு, அது மூச்சை அடைத்து இறந்துக்கிடந்தான்.
அடிவயிறிலிருந்து பயத்தின் அமிலம் சுரந்து உடல் எல்லாம் பரவுவதை உணர்ந்தான். ஒரு நொடி, மனித புத்தி செத்தவனின் பணப்பையை நோட்டமிட்டது. இரு மூட்டைகளையும் தன்னால் தூக்கி போக இயலுமா என மனதிலேயே தராசை நிறுத்திப் பார்த்தான். தண்ணீர் கேட்ட தொண்டையுடன் இப்போது பசியோடு வயிறும் ஒட்டிக் கொண்டது. சுற்றும் முற்றும் மறுபடியும் ஒரு நோட்டம் விட்டுச் சிறிது பணத்தை அள்ளித் தனது பையில் அடைத்துக்கொண்டு ஓட்டம் எடுத்தான்.
ஓடி, ஓடி மூச்சிரைத்து அந்தத் தட்டை உலகின் ஒரு முனைக்கு வந்து சேர, அது கண் எட்டும் தூரம்வரை பாதாளமாக இருந்தது. ஒரு நொடி அதில் குதித்து செத்துவிடலாம் எனும் அளவுக்குப் பசியும், தாகமும் எடுத்துக்கொண்டிருந்த்து. எங்குத் திரும்பிச் செல்வது என்பது தெரியவில்லை. பண மூட்டையையும் கீழே தள்ள மனம் இல்லை, வீட்டை அடைந்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்து, மறுபடியும் மூட்டையை தூக்கிக்கொண்டு ஓடி மறுமுனை வந்தடைந்தான் அந்த முனையும் பாதாளகவே இருந்தது. மீண்டும் ஓட்டம் இடுத்து அவனால் முடிந்தவரை எல்லா தெருக்களுக்கும் ஓடிவிட்டான், எங்கு இருக்கிறான் என்பதே அவனுக்குப் புலப்படவில்லை. சிறிது நேரம் ஓய்வெடுக்கலாமென அருகிலிருந்த ஒரு கல்லில் அமர்ந்தான். தாகமும், பசியும் எண்ணங்களைச் சிறை கொண்டுவிட்டது. என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து அமர்ந்திருந்தான்.
சட்டென்று தான் அமர்ந்திருந்த கல் தனக்கு பரிச்சயமான கல் என்று அறிந்து விலகி நின்று பார்க்க, அது தன் தகப்பனின் கல்லறைக்கல் என்பதை கண்டுகொண்டான். “ஓ” என்று கதறி கீழே விழுந்து புளுதி பறக்க உருண்டு உரக்க கதறி அழுதான். அவன் அழுகுரல் நான்கு பக்கமும் எதிரொலியாய் ஒரு பெரும் சோக அதிர்வைத் தந்தது. விழுந்து கிடந்து புலம்பி, தன் வீட்டை, தன் நிலத்தை, தன் குருவியை, தகப்பன் தந்த சுருக்கு பையை எல்லாம் இழந்தவனாய். ஒரு பிணனிலையாய் கிடந்தான். பண மூட்டையும் கிடந்தது.
சிறிது நேர அமைதிக்கு பிறகு கண் திறந்து தன் அருகே கிடந்த பணமூட்டையை பார்த்து நகைத்து கொண்டான். அவனுக்கு இப்போது புரிந்திருந்தது, அவன் தன் பார்வையில் தெளிவடைந்திருந்தான். அவன் எடுத்த ஒவ்வொரு பணத்திற்க்கும், தன் நிலத்தை, வீட்டைப் பெரிய கட்டிடங்களுக்கு இழந்துவிட்டதை நினைத்து மீண்டும் விம்மினான். பூமியிலிருந்து முளைத்த ஒவ்வொரு கட்டிடங்களும் யரோ ஒருவர் தன்னை போல் பணத்திற்க்கு ஆசை பட்டு நிலத்தை இழந்திருக்கிறார்கள் என்று அறிந்துகொண்டான்.
அந்தத் தட்டை உலகின் கடைசி மனிதன் அவன் என்பதையும் அனுமானித்துக்கொண்டான். இனி எங்கும் மரம் இல்லை, இனி எங்கும் விளை நிலம் இல்லை, இனி எங்கும் உயிர் இல்லை, இனி எங்கும் தண்ணீர் இல்லை.
தன் உடலின் எல்லா சக்தியையும் ஒன்று சேர்த்து பணமூட்டையை தூக்கிக்கொண்டு பணமரத்தை நோக்கி ஓட்டமெடுத்தான், பண மரத்தைக் கண்டதும் கையிலிருந்த மூட்டையை தூக்கி வீசி விட்டு,
அவன், “என் நிலத்தை எனக்குத் திரும்பத் தா” என
ஒரு பைத்தியகாரனை போலக் கத்தினான். எந்தச் சலனமும் இல்லாமல் மரம் அவனைப் பார்த்துச் தலையாட்டிச் சிரித்தது.
“அய்யோ” என்று அழுது, பணத்தை கிளை கிளையாக ஒட்டிப்பார்த்தான். எந்தப் பயனும் இல்லை. நிலத்தில் மண்டியிட்டு விழுந்து தலை குனிந்து அவனை நினைத்துப் பார்த்துக்கொண்டான். தன் சுயநலம், தன் பேராசை, தன் மடமை என்று நொந்து தரையில் விழுந்தான். இனி உயிர் இருப்பதை விடப் பிரிந்து விடுவது நல்லது என எண்ணிக்கொண்டான்.
தூரமாய் ஒரு கீச்சு சத்தம், அவன் குருவியின் சத்தம். அண்ணாந்து பார்க்கக் கூட வலுவிழந்து கிடந்த அவன் அருகில் பறந்து வந்து, அது வாயில் கவ்வி பிடித்திருந்த சுருக்குபையை அவன் முன்னே போட்டுவிட்டு, அதன் அருகில் வந்தமர்ந்து தன் வாயால் அதை அவன் அருகில் நகர்த்தி, அவனை அதை எடுக்கக் கீச்சு செய்தது.
மெல்ல சுய நினைவிற்கு வந்து, குருவியைப் பார்த்ததும், பிரிந்த உயிர் மீண்டு வந்து சேர்ந்தது போல, உடலெல்லாம் சிலிர்த்தது, மகிழ்ச்சியின் உச்சநிலை கடந்து, மெதுவாய் குருவியைத் தொட்டு பார்த்தான். இதை விடவா ஒரு மனிதனுக்கு உலகில் வேறேதும் வேண்டும். எவரும் அற்ற நிலையில் சிந்தனை துணை, சிந்தனையும் செத்த நேரத்தில் யாரவது தரும் ஒரு சொல்லோ, ஒரு தொடுதலோ தானே வாழும் அர்த்தம் தருகிறது என்று நினைத்துக்கொண்டான்.
குருவியும் விடாமல் சுருக்குபையை எடுக்கச் சொல்ல, சுருக்குப்பையை எடுத்துத் தன் உள்ளங்கையில் வைத்துத் திறந்து பார்த்தான். அதில் அப்பா சேமித்த பயிர்களின் விதைகள் இருந்தது. அதைத் தன் முகத்தோடு அணைத்து முகர்ந்து பார்த்தான். அவனுக்கு அதில் உயிரின் வாசம் வந்தது.
உலகம் மீண்டு இயங்க அதன் கால சக்கரத்தை நகர்த்தியது.
-லி
