top of page

பெருநிறுவன குரங்கு

தூக்கம் இல்லாமல் கண் வீங்கி, வலது கையில் மின்சாரத்தில் இயங்கும் பல் தேய்கும் பிரஸும், இடது கையில் பிதுக்கித் தேய்த்து எடுக்கப்பட்ட பேஸ்ட்டுடன் கண்ணாடி முன்பு சிந்தனையில் மூழ்கியபடி நின்றிருந்தார் வெற்றிராசன். அவருக்குமட்டுமான காட்சி அவர் மனதிலும் கண்ணாடியிலும் ஓடியிருக்க வேண்டும். கண் அடையாமல் சிந்தனையால் பார்த்துக்கொண்டுடிருந்தவரை,


“அப்பா அப்பா”

என இருமுறை கூப்பிட்ட தன் இளைய மகளின் குரல் கூட அவர் சிந்தனையைக் கலைக்கமுடியவில்லை. அரைகுறையாக “ம்ம்ம்” எனப் பதில் தந்தார்.


“நவுருப்பா காலேஜுக்கு நேரமாச்சு” என்று அவர் தொப்பையில் கைவத்து தள்ளிவிட்டுத் தலை வாரத் துவங்கினாள். சற்று விலகி 10 நிமிடம் மெதுவாக ஓடிக்கொண்டிருந்த சுவர் கடிகாரத்தை பார்த்ததும், டாப் கியரில் சிறி பாயும் வண்டிபோல் கட கட வெனப் பல் தேய்த்து, குளித்து, உடை மாற்றிக்கொண்டு.


“த் தே, என் ஐடி கார்ட் எங்க? என்று கத்தினார்.


“அது அங்க எங்கயாவது தான் கிடக்கும் எனத் தோசை கல்லில் மாவு ஊற்றும் சத்தத்தோடு மனைவியின் குரல் வந்தது.


வழக்கத்தைவிட இன்று கடுகடுத்தபடி, வீட்டில் எரிச்சலை கொட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டு, அவசர கோலத்தில் இரு தோசையை முழுங்கிக்கொண்டு, அதில் இரண்டு குறைசொல்லி கைழுவி, அலுவலகத்திற்க்கு தன் மகிழ்வுந்தை இயக்கினார்.


வெற்றிராசன் இந்த வருடத்தோடு அரை சதம் அடிக்கவிருந்தார், தலைமையால் செம்பு நிறத்தோற்றம் கொண்ட வெள்ளை முடிகள், தன் கால் கட்டைவிரலை தனக்கே பார்க்க முடியாதபடி வளர்ந்திருந்த தொப்பை, மாதத்தவணையில் வாங்கப்பட்ட, அடுக்குமாடி வீடு, மகிழ்வுந்து, டிஜிட்டல் வாச், மகளூக்கான மடிக்கணிணி, 45இன்ச் தொலைக்காட்சி பெட்டி, ரெக்கிளைனர் சோபா, கைபேசிகள் என்ற அத்தியாவசிய பொருட்கள், அவ்வபோது வரும் நெஞ்சுவலி, மன அழுத்தத்ற்க்கான மாதிரைகள், என்று எல்லாவற்றையும் வைத்திருந்தார்,


நேற்று நடந்த அலுவலக நிர்வாகிகளின் கூட்டத்திலிருந்து கசிந்த ஆள்குறைப்பிற்கான முடிவு அவரை அலைக்களித்துக்கொண்டிருந்தது. இப்போது சுடு தண்ணியில் கையைப் பிடித்து அழுத்தினாலும் உணர்ச்சி தெரியாதபடி மனமும், அறிவும் அடைபட்டு கிடந்தது. ஆள்குறைப்பில் தன் பெயரும் இடம் பெறலாம் என்று சந்தேகித்தார். காரணம் ஒன்று அவர் வயது, மற்றொன்று அவர் வாங்கிய அதிக ஊதியம்.


அலுவலகத்திற்க்கு மகிழ்வுந்தை இயக்கிக்கொண்டிருந்த வெற்றிராசன், ஒரு வேளை தன்னை வேலையிலிருந்து விடிவித்துவிட்டால் அடுத்த மாத கடன்களை அடைக்க என்ன செய்வேன், பிள்ளைகளின் படிப்புச் செலவு, அவர்கள் திருமண செலவிற்கெல்லாம் எங்கே போவது. ஒரு நிமிடம் மூச்சே நின்று விடும்படியாய் பெருமூச்சு வாங்கி உடல் வியர்வையால் நனைந்தது.


வண்டியில் குளிரூட்டியை அதிக படுத்திக்கொண்டு, எதைஎல்லாம் விற்க முடியும், என்றும் யோசித்துவிட்டார், கடன் அட்டையில் இனி பாக்கி இருக்கும் தொகையை யோசித்தார். பதினைந்து இருபது நாட்களுக்குள் வேறொரு வாழ்க்கை சூழலுக்குள் மாறிவிட வேண்டுமே, சொந்த பந்தங்கள் எவ்வளவு ஏளனம் செய்வார்கள், அவமானம் தான் மிஞ்சும் என்று நினைக்கும்போது கைபேசியில் அழைப்பு மணி அடித்தது.


யார் என்று பெயரைப் பார்த்ததும் பேயைப் பார்த்ததுபோல மாறிவிட்டர்.


“ஹலோ வெற்றி”


“ஹலோ சார்” குரல் உடைந்து வார்த்தை குளறி “யெஸ் சார் சொல்லுங்க” என்று தன் மேலாளருக்குப் பதில் தந்தார்.


“வெற்றி அர் யூ ஆண் த வே டூ ஆப்பீஸ்? (அலுவலகம் வந்திட்டு இருக்கீங்களா?)”


“யெஸ் சார் (ஆமாம்)”


“ஆப்பீஸ் வந்ததும் என்ன வந்து பாருங்க”, என்று மெளனமானார்.


வெற்றிராசனுக்கு அது “யூ ஆர் பையர்ட் (இனிமேல் வேலை இல்லை)” என்று தான் கேட்டது.


அதிர்ந்து, காதுகளில் குளிர் ஏறி உறைந்து மறு பதில் தர முடியாமல், சுய நினைவிழப்பதுபோலானார், பாதி நினைவில் சில வினாடிகள் சுயநிலை வந்தவராய்,


“சூர் சார் (கண்டிப்பாக)" என்று சொல்லிக்கொண்டே வண்டியை இடது புறம் வந்துகொண்டிருந்த இரு சக்கர வாகனத்தைப் பார்க்காமலே ஓரம்கட்டினார்.


இரு சக்கரத்தில் வந்தவர், கடன் காரர் திட்டுவதை போலத் திட்டிவிட்டு சென்றார்.


வெற்றிராசன், அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலில் என்றோ குடித்துவிட்டு மீதம் வைத்திருந்த தண்ணீரை குடித்துமுடித்தார். சூடாய் இருந்த தோசைக்கல்லில் கையால் தண்ணீர் தெளித்தது போல இருந்தது.


விடுப்பு கூட எடுக்க இயலாது, எப்படியானாலும் அலுவலகம் சென்றாக வேண்டும். அருகே மெட்ரோ தொடர் வண்டியின் சத்தம் கேக்க. தற்கொலை செய்து விடலாம என்றும் மனம் சில வினாடிகள் நினைத்துக்கொண்டது. தற்கொலை செய்தால் இன்சூரன்ஸ் காசாவது மனைவி பிள்ளைகளுக்குக் கிடைக்கும். நிச்சயமாய் கூடவே அவர்கள் வாழ நாள் முழுக்க தூக்கி சுமக்கும் ஒரு பெரிய பாரமும் கிடைக்குமே. வேண்டாம் என்று முடிவு செய்தார்.


மீண்டும் வாகனத்தை ஒரு நடைபிணம் போல அலுவலகத்திற்க்கு நகர்த்தினார். மனதில் பல்லாயிரம் கேள்விகள் ஒன்றை கோர்த்து மற்றொன்றும், அதைக் கோர்த்து பலவும் எனப் பாக்டீரியாக்கள் பரவுவது போல மனமெல்லாம் பரவியது.


வீட்டிற்கு அழைக்கலாமா? வேண்டாமா எனச் சில நேரம் யோசித்து இந்தச் சிக்கலான நிம்மதியற்ற சூழ்நிலையில் அவர்களை உள் இழுப்பது நியாயம் இல்லை என்று நினைக்கும்போது கைபேசி மறுபடி ஒலித்தது. வீட்டிலிருந்து மனைவியின் அழைப்பு. வாகனத்தின் ஹாண்ட்ஸ் பிரீயில் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.


“என்னங்க ஆப்பீஸ் போயாச்சா? “


“இன்னும் இல்ல சொல்லு” என்று சலிப்பாகப் கேட்டார்.


“ஒண்ணும் இல்ல, புரோக்கர் போன் பண்ணுனாரு அடுத்த வாரம் மாப்பிளை வீட்டாளூங்க வறாங்களாம், புதன் கிழமைக்கு லீவு சொல்லிடுங்க”


“இன்னையிலிருந்து வேலையே இல்ல இதுல லீவ வேற சொல்லணுமா? உன் கிட்டதான் சொல்லணும் என்று மனதில் நினைத்துக்கொண்டு. “சரி” என்று ஒரு சொல்லில் மட்டும் பதில் தந்தார்.


இதற்கு மேல் பேசினால் ஏதாவது சொல்லித் திட்டிவிடுவார் என்று அனுமானித்துக்கொண்டு “சரி பத்திரமா போயிட்டு வாங்க, பை” என்று அழைப்பைத் துண்டித்தாள்.


அலுவலகத்திற்கு இன்னும் 10 நிமிடங்களில் போய்விடலாம், ஆனால் மனம் போக மறுக்கிறது, வாகனத்தை மெதுவாகச் செலுத்தினார். ஒட்டிக்கொண்டே எப்படி எதிர்கொள்வது? எப்படி கெஞ்சுவது? மேலாளர் வயதில் சிறுவன் தான் ஆனாலும் பராவாயில்லை பேசாமல் காலில் விழுந்துவிடலாம். கேட்கமாட்டார்கள், ஊரே பார்த்து நிற்க, காவலர்களை வைத்து வெளியேற்றிவிடுவார்கள். அழக் கூடாது என்று மனம் நினைக்கும்போதே அழுகை முட்டி தொண்டை வலிக்கிறது. எல்லார் முன்பும் அசிங்கமாகிவிடுமோ? எப்படி தாங்கிக்கொள்வேன். அதற்கு முன் இதயம் நின்று இறந்து விட வேண்டும். வேலையோ, வருமானமோ இல்லாமல் எப்படி அடுத்த நொடி உயிரோடு இருப்பது? சொந்த பந்தங்கள் ஏளனப்படுத்துவார்களே, வெளியே எப்படி தலை காட்டுவது?


இப்பொது தான் மனைவியின் அழைப்பும், அவர்கள் சொன்ன சேதியும் நினைவில் வருகிறது, மூத்த மகளின் திருமணம் எப்படி நடத்தப்போகிறேன். வேலையை நம்பி கடன்வாங்கி விடலாம் என்று நினைத்தது எவ்வளவு அபத்தம். வீட்டில் தேவையானதும், தேவையற்றதும் என வாங்கி சேர்க்கும்போது, பார்த்துவிடலாம் என்று எவ்வளவு பெரிய முட்டாள் தனம் செய்திருக்கிறேன். இப்போது எப்படி பார்ப்பது, இரண்டு மாதங்களில் வீடே அடகு போய்விடுமே.


தன் வலது கையை ஓங்கி ஸ்டீரிங்கில் அடித்தார், மனதில் இருந்த வலிதான் அதிகமாக இருந்தது. சிக்னலில் வெளியே இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்து அவர் அருகில் நின்ற நபர் அவரையும், வாகனத்தையும் ஒரு நோட்டமிட்டு நாம என்னைக்கு கார்ல போவோம் என்பது பார்த்ததை தன் பக்கத்து கண்ணாடியில் பார்த்துக்கொண்டார். நம் நிலமை அவருக்கு எப்படி தெரியும், வேண்டாம் நண்பனே ஆடம்பர சுகபோகம் நிம்மதியை ஒரு நாளும் தராது என்று கண்ணாடியை இறக்கி சொல்லிவிடலாமா? அவனும் என்னைப் பைத்தியமாகத் தான் பார்ப்பான். விதி யாரை விடும். என்னை விடுவதற்கு இல்லை இந்த மனிதனை விடுவதற்கு.


சிக்னல் சமிக்கை பச்சை நிறமாக மாற, வண்டியை முன் நகர்த்த மறந்து அப்படியே நின்றிருந்தார், பின்னால் நின்ற வாகனங்களின் ஒலி பெருக்கிகள் கெட்ட வார்த்தைகளில் திட்டியதற்கு பின்னரே உணர்வு வந்து வாகனத்தை முன் செலுத்தினார்.


அலுவலகத்திற்க்கு அருகில் இருந்த, சேட்டா கடை முன்பு வழக்கமான டீ, தம் மற்றும் ஹால்ஸ்க்காக நிப்பாட்டினார். சில வினாடிகள் கடந்தே வெளியேறிய அவரது மனதின் படபடப்பு முகமெல்லாம் தெரிந்தது. மத்தளம் அடிக்கும்போது அதின் தோல் அதிர்வு எப்படி இருக்குமோ அப்படி தான் அவர் உடல் நடுக்கம் இருந்தது.


“சேட்டா, டீ”


சேட்டா எப்பொதும் அவர் வந்ததும் “வரணும் சாரே” என்று சொல்லி வரவேற்பார் இன்று எதுவும் சொல்லவில்லை, ஒரு நொடி மட்டும் பார்த்துவிட்டு அடுத்த வாடிக்கையாளருக்கு மீதி சில்லறை தரத் திரும்பிவிட்டார். அருகிலிருந்த வேறு நபர்கள் தங்களுக்குள் சிரித்துக்கொண்டது. இவருக்கு ஒரு நிமிடம் தன் இயல்பின் நடிப்பு எல்லாம் வீணாய் போனதோ என மனம் நோந்துபோக செய்தது. ஆயிரம் பார்வையாளர்கள் அவரைச் சுற்றி அமர்ந்த மேடையில் தவறு செய்து, எல்லாரும் ஒருமித்து சிரித்தது போல ஒரு உணர்வு.


இன்று சேட்டாவின் முகம் இறுகலாகத்தான் இருக்கிறது, எப்படியானாலும் அவருக்குத் தகவல் கசியாமல் இருக்க வாய்ப்பில்லை, நிச்சயமாய் அறிந்திருப்பார் பழைய பாக்கி தருவேனோ இல்லை அப்படி போய்விடுவேனோ என்று யோசிப்பார் தானே. வடை சூடாய் கண்முன் இருந்தும் கடன்கார கை எடுக்க மறுத்தது. சிகரட்டை கேட்டு வாங்க கை எந்தக் கூச்சமும் படவில்லை, வடையை விடச் சிகரட் இப்போது அவருக்கு அத்தியாவசிய தேவையாய் இருந்தது. டீக்குடித்து முடியும் வரை சேட்டா ஏதாவது கேட்பார் என்று காத்திருந்தார். சேட்டா இரண்டு முறை டீத்தூளை மாற்றினரே தவிர வெற்றிராசனை பார்க்கவில்லை. மற்றவர்களுக்குச் சரியாய் தெரிந்த சேட்டா இவருக்கு மட்டும் கோபமாக இருப்பதாகவே தெரிந்தார்.


டீ முடித்து, சிகரட்டை பஞ்சு வரை இழுத்து முடித்து அனைத்துவிட்டு, பழைய பாக்கியை முடித்துவிடலாமெனத் தன் கையியிலிருந்த 500ரூபாய் தாளைக் கொடுக்க.


எப்போதும் வாங்கிக்கொள்ளும் சேட்டா ஹால்ஸ் மிட்டாய் எடுத்துக் கொடுத்துக்கொண்டே, “இரிக்கட்டும் சாரே, பிறவு தந்நா போதும்” என்று சொல்லி அவர் பார்த்தது. கசாப்பு கடைக்குப் போகும் ஆடுக்கு கடைசியாகத் தண்ணி கொடுத்துப் பார்த்தைபோல் உணர்ந்தார் வெற்றிராசன்.


ஐடி கார்டை கழுத்தில் மாட்டிக்கொண்டு அலுவலகத்திற்க்கு உள்ளே நுழையும்போது பார்த்த காவலர்கள் அத்தனை பேரும் அவரைப் பரிதாபாமாகப் பார்தார்கள். செக் இன் நேரமாகிவிட்டதால் இரட்டிப்பு வேகத்தில் கால்கள் ஓடிக்கொண்டிருக்க, மனமோ விருப்பம் இல்லாமல் மெல்ல அடிமேல் அடி வைத்துப் பின்தொடர்ந்தது.


லிப்டில் பார்த்த சக ஊளியர்களும் ஆள் குறைப்பை பற்றி முணு முணுத்தார்கள். ஐடி கார்ட் இன்று உள் நுழைய உபயோகபடுத்தும்போது வேலை செய்யுமோ இல்லையோ?. வயிற்றில் தொடர்வண்டி ராட்டினம் போல ஓட்டிக்கொண்டிருந்தது. லிப்ட் கதவு திறந்தும் வெளியேற மனம் இல்லாமல் நின்றிருந்தார்.


வேறு எங்குப் போவது, எப்படி பார்த்தாலும் மேலாளரைப் பார்த்தேயாக வேண்டும், இந்த லிப்ட் பொத்தானை அழுத்தி வேறு தளங்கள் செல்வது போல வாழ்க்கையின் வேறு பக்கங்களுக்குச் சென்றால் எப்படி இருக்கும் என்று நினைக்கும்போது. கதவுகள் அடைபட துவங்கியது. வேகமாகப் பொத்தானை அழுத்தித் திறந்து வெளியேறி. மேலாளர் எங்கேயாவது இருக்கிறாரா என நோட்டமிட்டுக்கொண்டே நேராகத் தன் இடத்திற்க்கு சென்று பைகளை வைத்துவிட்டு. திரும்பிப் பார்க்காமல் கழிவறைக்கு ஓடினார்.


உள்ளே சென்று கதவைச் சாற்றி, வெஸ்ட்டர்ன் கோப்பையில் அமர்ந்து தன் கைபேசியை எடுத்து இரண்டு முறை அன்லாக் செய்து லாக் செய்து, ஏதாவது வழி கிடைகாதா கடவுளேயென நகங்களைக் கடித்து பிய்த்துக்கொண்டே, அலைகளித்தபடி இங்கேயே இன்று இருந்துவிடலாம், இங்கேயே தற்கொலை செய்வது எப்படி?, ஒரு சிகரட் அடிக்க முடிந்தால் எவ்வளவு நிம்மதியாய் இருக்கும், மேலாளர்க்கு எதாவது நடந்து இன்று போய்விட மாட்டாரா?


என்னோடு யார் யார் தலை உருளப்போகிறது தெரியலயே? எவ்வளவு நேரம் இப்படியே அமர்ந்திருக்க. இப்படியொரு பின் வாசல் இருந்தால் ஓடிவிடலாமே. ஏன் தான் இந்த வேலைக்கு வந்தேனோ? வேறு ஏதாவது பிசினஸ் பார்த்திருக்கலாம். சம்பாதித்த நேரத்தில் காசு மிச்சபடுத்தி சேர்த்திருக்கலாம். இந்த மொபைல் கருமம் 80000 ஆயிரம் ரூபாய், தேவையா எனக்கு. அடுத்தமாசம் சாப்பாடு ரேசன் கடை உதவி தான். அய்யோ இப்படியொரு நாள் வரும் என்று ஏன் தோனவேஇல்ல. பொழுதுபோக்காக வாழ்ந்தது எவ்வளவு அபத்தம். வெளியே கால் அடி சத்தம் கேக்குதே. செக்யூரிட்டி என்ன தேடிட்டு இருக்காங்களா? மேலாளரா?


“சார் இன்னைக்கு லே ஆப் இருக்காமே?”


“ஆமா சார் 30 பேருக்கு மேல இருக்கும்ணூ பேசிக்கிறாங்க" என்று வெளியே யாரோ பேசுவது கேட்கிறௌ. முப்பது பேரா என்பேரு தானே முதல்ல இருக்கும்.


சும்மா வந்து அமர்ந்த வெற்றிராசனுக்கு இப்பொது நிசமாகவே இயற்கை உபாதை தந்தது. தன் கழிவைப் போலத் தன் எண்ணங்களையும் கழித்தான். என்ன செய்ய எப்படியும் மேலாளரைப் பார்த்துதான் ஆக வெண்டும். இந்த நேரம் லாகின் பார்த்து, நான் அமரும் இடத்தில் தேடி இருப்பார்கள். யாராவது வந்து இங்கிருந்து அழைத்துப் போக நேர்ந்தால் அது இன்னும் பேசு பொருளாகிவிடும். போய்விடலாமெனக் கதவைத் திறக்க வெளியே கைகழுவும் இடத்தில் மேலாளர் நின்றிருந்தார்.


வெற்றிராசனை பார்த்ததும்


 “ஒ வெற்றி மீட் மீ இன் மைக்கேபின் நொவ்" (இப்போதே என் அறையில் வந்து பாருங்கள்) என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.


வெற்றிராசன் கண்ணாடியில் அவன் எண்ணங்களைப் பார்த்துக்கொண்டான். வேறு வழி இல்லை போய்விடலாம். என்று அசைவற்று நடந்து போனார்.


“மே ஐ கம் இன் சார்"


“ஓ வெற்றி யெஸ்யெஸ் கம் இன்” சம்பள உயர்விற்க்கும், விடை தருவதற்க்கும் இந்த ஆங்கிலத்தில் எந்த மாற்றமும் இல்லையே என்று நினைத்துக்கொண்டார்.


“பிளீஸ் பி சீட்டட், கிவ் மீ ஏ மினிட்" என்று சொல்லித் தன் கணிணியில் சில தரவுளை பார்த்துக்கொண்டார்.

வெற்றிராசன், மேலாளர் பீடிகை போடாமல் “யூ ஆர் பையர்ட்" என்று சொன்னால் அப்படியே வெளியே போய்விடலாம். என்று எண்ணிய அடுத்த நொடியே அய்யோ சொல்லிவிட கூடாது என்று மனதிலே இறைவழிபாடுகளை செய்யத்துவங்கினார்.


̀ இப்போது தான் கவனித்தார், இதே அறையில் தான் பல அண்டுகளுக்கு முன் வேலைக்குச் சேர நேர்காணல் நடந்தது, வேலைக்குச் சேரும்படியான கடிதமும் கிடைத்தது. எவ்வளவு மகிழ்ச்சியான தருணம், பாலைவனத்தில் தூரமாய் ஒரு நிழல் பார்த்த மகிழ்ச்சியை தந்த நினைவலைகளை மேலாளரின் இருமல் கலைத்தது.


வெற்றி, ஐ ரியலி இம்பிரஸ்ட் வித் யுவர் வொர்க்க்ஸ், உங்கள் வேலைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. நீங்கக் கடின உளைப்பாளி,


இந்த வரிகளுக்கு மேல் வெற்றிராசனின் காதில் எதுவும் கேட்கவில்லை, அறை குளிரூட்டியின் குளிரோ அடுப்பின் கனல் சூட்டை கக்குவது போல உணர்ந்தார், அறை அமைதியாகி ஒரு மாயானத்தின் நள் இரவின் திகிலாய் மாறிக்கொண்டிருந்தது. மங்கலாய் மேலாளரின் குரல் தண்ணீருக்குள் மெதுவாகப் பேசுவது போலக் கேட்டுக்கொண்டிருக்க, வாயில் இல்லாத எச்சிலை சேகரித்து தொண்டைக்கு இதம் தர முயற்சித்தார். அருகிலிருந்த மீன் தொட்டியின் மீன்கள் எதையோ பேசுவது போலவும் அதை உன்னிப்பாகக் கேட்க வேண்டும் போலவும் மனம் நினைத்துக்கொண்டிருந்தது. என்ன இங்கு நடக்கிறது, நான் என்ன செய்கிறேன், வேலை போயிடிச்சா? வேலை இல்லைணு சொல்லி முடிச்சிட்டாரா? ஒன்றும் புரியவில்லை. அவர் சிரிக்கிறார் ஏதுக்குணு தெரியல நாமளும் சிரிப்போம் என்று சேதி அறியாமலயே புன்னகையுடன் மேலாளருடன் சிரித்தார்.


சீ மிஸ்ட்டர் வெற்றி, ஐ ரியலி அப்பிரிசியேட் யூ. ஹோப் யூ அல்ரெடி னோ எபவுட் தப்போர்ட் மீட்டிங் டிசிசன். கம்பெனியின் தற்போதைய முடிவுப் படி இன்று பதினாறு நபர்களை வேலையை விட்டு நிறுத்தச் சொல்லியிருக்கிறார்கள்.


வெற்றிராசனுக்கு இதயத்தின் துடிப்பின் வேகம், ஜப்பானின் அதிவேக புல்லட் டிரெயின் போலத் துடிக்கதுவங்கீற்று, நெஞ்சு வலி லேசாக எடுப்பதாகவே உணர்ந்தார். ஒரு நிமிடம் மனைவி பிள்ளைகளை நினைத்துக்கொண்டார். இது இறுதி மூச்சாகக் கூட இருக்கலாம் என்று நினைக்கும்போது அவருக்குத் தலை உடல் எல்லாம் வேர்க்க துவங்கியிருந்தது.


“வெற்றி ஆர் யூ ஆல்ரைட்?”


“யெச் சார், ஆம் குட்.”


“ஆர் யூப்பாலோயிங் மீ?”


ஒன்றும் இதுவரை கேட்கவில்லை ஆனாலும், அவர் பேச்சைப் பின் தொடர்வதாகவே ஒப்புக்கொண்டார்.


“ஜஸ்ட் னீட் சம் வாட்டர் என்று மனதில் சொல்லிவிட்டு, வெளியில் அவரை ஆமோதிப்பதைபோலத் தலையாட்டிப் புன்னகை மட்டும் தந்தார்.


“சோ, இந்தாங்க இதில் பதினாறு பேரின் பெயரும் அவங்களோட விடுப்பு கடிதமும் இருக்கு. அவங்கள கூப்பிட்டு வேலையை விட்டு நிறுத்திட்டுங்க என்று கூறி சில பைல்களை நீட்டினார்.


வெற்றிராசனுக்கு புரிய சில வினாடிகள் பிடித்தது, முன்பை விட இப்போது மனம் வலித்தது. அய்யோ, காலையிலிருந்து என் மனம் போலத்தானே இந்தப் பட்டியலில்லுள்ள அத்தனை பேரின் மனமும் சூழ்நிலையும் இருக்கும், என்னால் என்ன செய்ய முடியும், நான் வேண்டாம் என்றாலும் இங்கு யாரும் கேட்கப் போவதில்லை. இந்தக் கடினமான நாளை நான் எப்படி கடப்பது என்று யோசித்தபடியே தரவுகளை வாங்கிக்கொண்டு வெளியேறினார்.


இரவில் வீட்டில் சாப்பிட்டு விட்டு அந்த ரெக்கிளைனர் சோபாவில் அமர்ந்து, அந்த நாளையும், அவர் வேலையிலிருந்து பிரித்து விட்ட ஒவ்வொருவரது முகத்தின் சோகத்தையும், கண்ணீரையும், அவர்களின் வாழ்க்கையை பற்றியும் அங்கலாய்ப்பையும் யோசித்து மனம் பிரயாசப்பட்டுக்கொண்டார்.


மனதை சரி செய்ய வேண்டும் என்ன செய்யலாம் என்று தன் கைபேசியில் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் செயலியைத் திறந்து முன்பு பார்த்துவைத்திருந்த பொருட்களின் மேல் கவனத்தை திருப்பினார்.


அலுவலகம் அடுத்த பட்டியலைத் தயாரிக்க துவங்கியிருந்தது.



-லி writerlivin@gmail.com

average rating is 4.5 out of 5, based on 150 votes, People love it
Comments

Share Your ThoughtsBe the first to write a comment.
bottom of page