top of page

பிள்ளை மனம்

ழை இரவின் இருட்டில் எங்கும் எதுவுமே தெரியாதபடி இருள் மூடிக்கிடந்தது. மின்னலின் ஒளி கீற்று இருளை கிழித்து அவ்வபோது அந்தக் கானகத்தின் அடர்த்தியும் மரப்பட்டைகளில் வழிந்த மழை நீரிலும், புல்லிலும், அருகிலிருந்த ஆற்று நீரின் நுரையிலும் பட்டு மின்னித்திளங்கி, பால் வண்ணத்தில் கணநேரத்தில் தோன்றி மறைந்தது. மழைஇரச்சல், இடியின் முழக்கம், காட்டு தவளைகளின் ஓலம், இன்னும் மனித காதுகள் கேட்காத பல சத்தங்கள் காட்டை நிரப்பியிருக்க. திடீரென்று வானம் பிளந்து தீப்பந்தம் போல ஒரு நீல நிற பந்து ஆற்றோரத்தில் இருந்த நெடுக வளர்ந்திருந்த மரத்தை இரண்டாகப் பிளந்துகொண்டு வந்தது.


மரம் கீறல் விட்டுக்கொண்டே அதன் வேரை நோக்கி வர, மரத்தினடியில் மழைக்காக ஒதுங்கிக் கிடந்த கொம்பு வைத்த புள்ளி மானின் அருகில் வந்து இரண்டாகப் பிளந்து விழுந்தது. அந்த நீல நிற உலோகம் வடிந்த இடமெல்லம் வெந்து போனது போல அடர் நீலமும், கறுப்பும் கலந்ததாக மாறி, பனிக்கட்டியில் வரும் பனிப்புகை போல மாறீற்று. உலோக பந்து உருண்டு மானின் முன்பு வந்து விழ அதை நுகர்ந்து பார்த்துப் புல்லோடு அதையும் சேர்த்து தின்றது.


தின்ற மாத்திரத்தில் அது உடல் நடுங்கி, கண்விழி நீல நிறமாக மாறி, வாய் வழி நுரையும் புகையுமாக வந்து, கைக்கால்கள் வெட வெடத்து, வலிப்பு வந்து விழுவது போல நடுக்கத்தோடு மயங்கி விழுந்தது செத்தது போலக் கிடந்தது.


காடு மூடியிருந்த இருள் போர்வையை வெளிச்சம் விலக்கிக்கொண்டு விடிந்தது. கீறி விழுந்த மரம் ஆற்றிலும் கரையிலுமாக இரு பகுதியாகக் கிடந்தது. நீல நிற உலோக பந்து நீராவியாக மறைந்து போயிருந்தது.


ஆழ்ந்த கனவில் ஏதோ நடந்து திடுக்கிட்டு விழிப்பது போல மான் பதறி விழித்து என்ன நடந்தது என்று அனுமானிக்க முடியாதபடி எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடிக்கொண்டு நின்றது, தன் உடலைச் சிலுப்பி தண்ணீரை உதறிக்கொண்டு ஆற்று நீரில் முகம் புதைக்க, ஆற்று ஓடையில் அது இப்போது நீல நிறத்திலும், கண்கள் நீல நீற ஒளி கொண்ட திரவக் கண்ணாடிபோல மின்னிக்கொண்டிருந்தது. அதன் கொம்போ இரும்பை போலக் கடினமானதாக மாறிப் பல மடங்கு பெலன் கொண்டது போலத் தலையினுள் வேர்பிடித்து இறங்கி இருந்தது. உடல் முழுதும் ஏதோ ஒரு மாற்றம் கொண்டதாய் மான் அதற்குள் எதுவோ ஒரு மாற்றத்தைப் புதியதாய் உணர்ந்தது.


நரம்புகள் எல்லாம் முறுகிக்கொண்டு எதையாவது முட்ட வேண்டும் என்று தோன்ற. தண்ணீருக்குள் தலையை விட்டு எடுத்து, வேகமாகத் தலையை ஆட்டித் தண்ணீரை மதம் கொண்ட யானை பீச்சி அடித்துக் காதைச் சுழற்றி ஆட்டுவது போல மான் தலையை ஆட்டித் தண்ணீரை தெறிக்க விட்டது. அதன் உடலெல்லாம் அனலாய் இருக்க உடலில் பட்ட நீர் திளைத்து நீராவியாக மாறிக் காற்றில் கரைந்தது.


மான் தன் கண்களை இறுக்க மூடித் திறக்க, அதன் முன்பாகப் பல வண்ணங்களைக் குழைத்த வண்ணத்துப்பூச்சிகள் பறந்து அதன் அருகில் வர, தன் ஒளி நிறைந்த கண்ணைத் திருப்பித் தலையைச் சரித்து அதன் வண்ணங்களைப் பார்த்து வியந்து தன் காதுகளால் கூர்ந்து அதன் இறகின் அசைவில் கிழிக்கப்பட்ட காற்றின் சத்தத்தை உணர்ந்து கொண்டது.


அடுத்தகணமே ஏதோ ஒன்று தண்ணீருக்குள்ளிருந்து தன்மேல் பாய்வதை உணர்ந்த மான். அரை வினாடிக்குள் தன்னை சுதாரித்துக்கொண்டு தன் கொம்புகளால் அதை உணவாக்க வந்த அந்த ராட்சச முதலையின் அடி கழுத்தில் குத்தி கிழித்தெறிந்தது. அந்த இடமெல்லாம் இரத்தம், முதலை சாய்ந்த அடுத்த நிமிடமே. தன் முதுகில் பாயந்த சிறுத்தையின் நகத்திலிருந்து விடுபடத் தன் உடலைத் திருப்பி உதறி, மேலே தாவியது. மானின் பெலனை சிறுத்தையால் ஈடு கொடுக்க முடியவில்லை. மான் தன் கால்களால் உதைத்து சிறுத்தையைத் தள்ளி அங்கிருந்து தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக மலை மேலே ஓடத் துவங்கியது.


வழியில் குறுக்கே வந்த மரங்கள், புதர்கள், பாறைகள், பெரிய வேர்கள் எல்லாவற்றையும் தன் கொம்புகளால் பெயர்த்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. இன்னும் மூன்று சிறுத்தைகள் சூழ்ந்து எல்லா பக்கங்களிலிருந்து பாய்ந்து மானைப் பிடிக்க முயற்சி செய்ய. மான் தன் மின்னும் கண்களால் அவைகளை எரிக்க முற்ப்படும்போது, கண்களிலிருந்த அந்த வெளிச்சம் சட்டென்று மறைந்தது, நரம்புகள் தளர்வுற்றது, கொம்புகள் கூட இப்பொது இரும்பாகத் தெரியவில்லை, ஒரு குளிர் உடலெல்லாம் படர்ந்து காதுகள் அடைபட்டு, மயங்கிக் கீழே விழுந்த பிள்ளைமனம் கொண்ட அவனைப் பிடித்துக்கொண்டனர் மன நல மருத்துவர்கள்.


மயக்க ஊசியால் அவனைத் தளர்வடைய செய்திருந்தனர். தரை எது, கல் எது என்று அறியாமல், தன் தலையில் கொம்பு இருக்கிறது என்று நம்பியவன் இடித்து நொறிக்கொண்டது என்னமோ அவன் தலையைத்தான். முதலையாக, சிறுத்தையாகப் பாய்ந்து பிடித்த மருத்துவர்களும் செவிலியர்களும் மூச்சிரைக்க அமர்ந்து கொண்டனர்.


மன நலம் பாதிக்கப்பட்ட அவனின் கைகளிலும் கால்களிலும் சங்கிலிகள் பொருத்தப்பட்டு ஒரு தனி அறைக்குள் அடைக்கப்பட்டான்.


நேரம் ஆற்றொழுக்கு போல ஓடிக்கொண்டே கூர்மையான கற்களைத் தேய்த்து கூளாங்கற்களாக மாற்ற முயல்வது போல அவன் மனக் கூர்மையை மழுக்கி ஓடிக்கொண்டே இருந்தது. மெல்ல உடலில் உணர்வுகள் திரும்பத் துவங்கியதும், வலி என்று கூடத் தெரியாமல் அதுவும் தன் உடல் உறுப்பு தானோ என்பதாய் அவனோடே இருந்தது.


மெதுவாகக் கண் திறந்து கானகத்தை தேடினான், மரமோ, மலையோ, பாறையோ, நீரோ எதுவும் இல்லை. கானகம் இப்போது காங்கிரேட் சுவராக மாறி இருந்தது. கைகளிலும் கால்களிலும் ஏதோ கவ்வி பிடித்திருக்கிறது போல உணர்ந்தவன் உற்று பார்க்கும்போது மலை பாம்பு கவ்வி பிடித்துச் சுற்றி வளைத்து வைத்திருப்பது போலக் கண்டான்.


கைகளையும் கால்களையும் உதறி தள்ளிப் பாம்பை அப்புற படுத்தப்பார்த்தான், அது பிடியை விட்டபாடில்லை. மனம் நொடிக்குப் பல ஆயிரம் காட்சிகளுக்குள் தாவிக்கொண்டிருந்தது. தன் கைவிரல்களை மடித்து மான் கொம்புபோலத் தன் தலையில் வைத்துக்கொண்டு தலையை, கையோடு சேர்த்து முட்டுவது போல அசைவு செய்தான்.


சில வீனாடிகளில் அவன் பல்லாயிரம் மின்னல்களை தனக்குள் வாங்கியவனாய் உடலெல்லாம் வேகம்பரவி சங்கலைகளை அறுத்து எறியும் பலத்தோடு ஓட முயன்றான். முடியாமல் அமர்ந்தவன் மனதை கொண்டு சுவர்களை இடித்து வெளியேறினான்.


கண்ணில் திரவத்தின் ஒளியோடு இப்போது பாலைவனத்தில் மானாக நின்றிருந்தான். கண் முன்னே வனாந்திரம் விரிந்து கிடந்தும் ஓடாமல் நின்ற இடத்திலேயே நின்று மூச்சிரைத்தான்.


வனாந்திரத்தில் பெரிய ஆறு உருவாகி அந்த இடம் முழுவதையும் தண்ணீராக நிரப்பி. பாலைவனம் இப்போது தண்ணீருக்குள் மூழ்கிக் கடலுகடியில் இருக்கும் நிலம் போலனது. மானாய் இருந்த அவன் இப்போது பெரிய மீனாக, உருமாறி தண்ணீரில் நீந்தத்துவங்கினான். மீனுக்கு மானின் கொம்பு இருந்தது. அவன் இருந்த அறையில் தரையில் பக்கவாட்டில் படுத்துக்கொண்டு தன்னை ஒரு மீனாக நினைத்தபடி தன் உடலை வளைத்து நீந்துவதுபோல அசைத்துக்கொண்டிருந்தான். கண்ணில் கண்ணீர் நிறைந்து பெருக்கெடுத்துக்கிடந்தது.


யாரோ மனிதர்களின் குரல் கேட்கிறது ஆனால் அந்தச் சத்தத்தின் அர்த்தம் எனக்குப் புரிவதில்லை, இவர்கள் ஏன் என்னை அவர்கள் நினைக்கும்படி இருக்க சொல்கிறார்கள். என்னால் இந்தப் பாம்புகளின் நடுவில் எப்படி இருக்க முடியும். நான் ஓட வேண்டும், இல்லை இப்போது நீந்த வேண்டும். இவர்களுக்கு நான் பல முறை சொல்லிவிட்டேன். என் குரலின் வடிவமும் இவர்களுக்குப் புரியவில்லை. ஒரு குமிழி பிறந்து நகர்ந்து அது உடைபடும் நேரத்திற்க்குள் அது எவ்வளவு தூரம் போய்விடுகிறது. எனக்கும் அவ்வளவு தூரம் போதுமே. இந்தப் பாம்புகளை எடுத்துவிடுங்கள் என் கைகளையும் கால்களையும் அவை விடுவதே இல்லை.


அடிவயிற்றில் போர் மூழ்கிறது. குடல்களும், மற்ற உறுப்புக்களும் சண்டை இடுகின்றன. அவைகளுக்கு கற்கள் வேண்டும். இந்த மனிதர்கள் தரும் கற்களை என் வாய் குகைவழி அவர்களுக்குக் கடத்திவிட்டால் அமைதியாவார்கள். ஏன் எனக்குக் கற்கள் தரவில்லை. கற்கள் வேண்டும் உடனே வேண்டும், கூச்சலிட்டு பார்க்கிறேன் யாரோ வருகிறார்கள். கற்கள் கொண்டு தான் வருகிறார்களா?


அவன் முன் வீசப்பட்ட ரொட்டி துண்டுகளை அவன் வேகமாகக் கையில் எடுத்தான். முழுவதுமாக வாய்க்குள் நுழைத்து ரொட்டிகளை பாதி மென்று விழுங்கினான்.


போர் மூண்ட உறுப்புகள் இப்பொது சண்டையை நிறுத்திவிட்டார்கள், கைகளை ஆடையில் துடைத்துவிட்டு அந்த அறையின் மூலையில் படுத்துக்கிடந்தான்.


அவனுக்கு இப்போது இரவாகிவிட்டது, காலமும் வெளிச்சமும், இடமும், பொருளும் அவனுக்குப் பொருட்டல்ல. அவன் நினைத்த நொடியில் இரவு வந்துவிடும், சில நேரம் இரவெல்லாம் பகல் கனவுகளுடன் விழித்துக்கிடக்கும்.


நேசன் தன் கண்களை மூடி உடலின் வலிகளை வெகுதூரம் விலக்கி வைக்க முயற்சித்தான் அவனால் அது முடியவில்லை, பாம்புகளிடம் “நான் தூங்க போறேன் நீங்களும் தூங்குங்க” என்றான். சங்கிலியைத் தடவிக்கொடுத்தான். மெல்ல மெல்ல இருட்டிற்குள் புகுந்தான்.


தூக்கம் அது மட்டுமே நிம்மதியான உலகம், எப்போது வரும் எப்போது கலையும் என்பது எனக்குத் தெரியாது, அனேகமாக ரொட்டி சாப்பிட்டவுடன் வருகிறது இந்த ரொட்டி தானோ அந்த இருட்டிற்கான சாவி. எனக்கு இருட்டு பிடிக்கிறது. இடிபோலச் சட்டென்று ஒரு சத்தமும் மின்னலும் இருட்டை கிழித்தது. அய்யோ வேண்டாம் எனக்கு இருட்டு வேண்டும் என்று காதுகளையும், கண்களையும் இறுக்கமாக மூடிக்கொண்ட்டான்.


பயம் என்னை ஏன் விடாமல் துரத்துகிறது. தண்ணீரின் அடியில் இப்போது சலனம் இல்லை ஆனால் இந்த வானம் எப்படி கடலுக்கடியில் இருகிறது என்று எவ்வளவு யோசித்தும் பதில் கிடைக்க வில்லை. இடியும் மின்னலும் தரையிலிருந்து வருகிறது போல வருகிறது. இவைகள் என்னை அணுகாதபடி வெகுதூரம் நான் நீந்திப் போக வேண்டும்.


உடலின் தூக்கம் அவனைச் சிறிது தேற்றிவிட்டது. ஆனால் இந்த மனம் தூங்குவதில்லை. தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்த மீனை இப்போது ஒரு வலை பிடிக்கப் பார்க்கிறது. பயத்தில் மீன் அங்கும் இங்குமாக நீந்த, அவன் நிசத்தில் அறைக்குள் படபடத்துத் துடித்துகொண்டிருந்தான். இந்த வலை எப்போதும் அவனுக்குள் ஏதோ ஒரு விசித்திர அனுபவத்தைத் தருகிறது.


வலையின் கயிறு கன்னிகைகளால் பின்னப்பட்டிருந்தது, கன்னிகைகள் வெள்ளை நிறத்தில் பின்னின நூல்களால் சுற்றப்பட்டிருந்த மிக மெலிந்த ஆடையை உடுத்தியிருந்தார்கள். அவர்கள் கைகளை அலைபோல் வளைத்து வளைத்து நடனமடிக்கொண்டிருந்தார்கள், ஒவ்வொரு கன்னிகைகளின் தலையும் காலும் வலையின் முடிச்சுகளின் இணைவைபோல ஒட்டி இருந்தது. அந்தப் பெரிய வலையில் கன்னிகைகளை எண்ண முடியவில்லை. வலை மெதுவாக அவனைச் சுற்றி கீழ்நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது.


வலை அவனை நெருக்க நெருக்கக் குளிர் நடுக்கம் கொண்டவனைபோல இன்னும் இறுக்கமாக உடலைச் சுருக்கி, அட்டை சுருள்வது போலச் சுருண்டான். அவனுக்கு அது வேண்டாம் என்பதும் ஒன்று தான், வேண்டும் என்பதும் ஒன்றுதான். இரண்டையும் அவனால் தேர்வு செய்யத் தெரியவில்லை, அல்லது தேர்வு செய்யும் அதிகாரம் அவனுக்குத் தரபடவில்லை.


கைகளைச் சங்கிலிகளில் தடவி தட்டி பாம்புகளிடம் உதவி செய்யக் கேட்பதை போல அசைத்துபார்த்தான். பாம்புகள் அங்கில்லை ஒரு பெரும் முல்லை கொடி பூத்து குலுங்கிக்கொண்டு அவன் கைகளிலும் கால்களிலும் பின்னப்பட்டிருந்தது. பூவின் மணம் அவனுக்கு இப்போது வேண்டாம் போலும், அதைச் சற்று வெறுப்பாகவே கருதினான். ஆனாலும் சிறிது வினாடிகளிலேயே அந்த மணம் அவனை மயக்கிக்கொண்டது. நீந்திக்கொண்டிருந்த தண்ணீரை காணவில்லை எங்கேயோ முல்லைகளால் ஆன காட்டு புதரில் அவன் அவனாகவே, மனித உருவமாகவே படுத்திருந்தான். வலையில் இருந்த கன்னிகள் இப்போது பூக்களின் இதழ்களை ஆடையாக அணிந்துகொண்டு காற்றில் வந்த மெல்லிசையில் ஒரே குரலாகப் பாடலை மூளினர்.


அவன் இவைகளுக்கு பயப்படவில்லை, இது அவனுக்கு முதல் முறை திகிலும் இல்லை அவனுக்கு இதை எல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது என்றும் தெரியாது. முற்றிலும் சரணடைந்தவனைபோலக் கிடப்பது மட்டுமே அவனால் இப்போது செய்யமுடிந்த ஒரே காரியம்.


மேகத்தை ஆடையாகக் கொண்ட பெண் ஒருத்தி அவனருகில் வந்து அவனின் அழுக்கு ஆடைகளையும், அவனையும் எந்த வித முக சுளிப்புமின்றி, எந்தவொரு தயக்கமும், வெறுப்புணர்வும் அதேனேரம் எந்த வித மோகமுமின்றி தொட்டு, அவளோடு அணைத்துக்கொண்டாள். அவளின் மேக ஆடையின் குளிரில் அவன் சுகம் உணர்ந்தவனாய் கண்கள் திறவாமலே குழந்தைபோல் கிடந்தான். ஆசை என்பது என்னவென்று நினைக்கத் தெரியாது, இதம் என்பதே வாழ்க்கையின் மொத்த தேவையாக மாறிப் போன மனது இப்போது இப்படியே இருந்துவிட கூடாதா என்று நினைக்ககூட தெரியவில்லை.


அவனுக்கு எதுவுமே நிலையில்லை, எதுவுமே அவனுக்கு நிரந்தரமில்லை, சிறு அசைவோ, ஒலியோ அவன் உள்ளுணரும் இந்த இத நிலையை, ஊசி பட்ட பலூனில் இருந்த காற்று காணாமல் போவதுபோலக் காணாமல் போய்விடும். பலூணுக்குள் இருக்கும் கற்றை அவனால் மட்டுமே காண முடியும்.


இந்த அச்சுதாளின் பின் திருப்புதல் கூட அவனைக் கலைக்க கூடும். இந்த உலகத்தால் அவனுக்கு இன்னும் ஒரு நொடி அமைதியை நீட்டித்துக் குடுக்க முடிந்தால் அதுவே போதுமானது.


-லி

writerlivin@gmail.com

average rating is 4.5 out of 5, based on 150 votes, People love it
Comments

Share Your ThoughtsBe the first to write a comment.
bottom of page