
பின்னலின் சிற்றலைகள்
காலையில் வேலைக்குப் போகும் அவசரத்தில் முறுமுறுத்தபடி சட்டை பட்டன்களை அவசரமாக அணிந்துக் கொண்டிருந்தேன். அடுப்பங்கரையிலிருந்து,
“என்னங்க போய், கொஞ்சம் காய்கறி வாங்கி குடுத்திட்டு போங்களேன்னு"
என் மனைவியின் இரக்கமான குரலின் கடைசி வார்த்தை முடிவதற்குள், கண்விழி பிதுங்கும் அளவிற்கு கோபம் கொப்பளித்து வந்தது. அருகில் குடித்துவிட்டு வைத்திருந்த காப்பி டம்பிளரை தட்டி வீசிவிட்டு வேகமாகச் செருப்பை அணிந்து வெளியே வந்தேன். பின்னாலே அவள் குரலும் வந்தது. இப்போது அப்படியே உக்கிர பாய்ச்சலாக மாறி இருந்தது.
“கோவம் மட்டும் பொத்துகிட்டு வருகுதோ? நாளைக்கு வெறும் கடை தயிரும் ஊறுகாயும் தான் திங்கணும் அதுவும் வாங்கினா மட்டும் தான், நான் மட்டும் இங்க…” என்று அவள் காலி பக்கெட்டில் திறந்து விட்ட தண்ணீர் போல வார்த்தைகளை ஊற்றுகிறாள்.
நான் என் இருசக்கர வாகனத்த்தை எடுத்துச் சாவியை விட்டு இயக்கினேன். எரிபொருள் காட்டும் முள் சிகப்பு நிற கோட்டிற்க்கு கீழ் இருந்தது. மார்க்கெட் போய்த் திரும்பி, பெட்ரோல் போட்டுக் கடைக்குப் போவதற்கு. நேரமும் இல்லை, கையில் போதிய பணமும் இல்லை, வண்டியில் பெட்ரோலும் அவ்வளவாக இல்லை.
நான் 2கிமீ தாண்டி இருக்கிற பஜாருல செருப்பு கடையில வேலை பாக்குறேன். நான் வறுமை கோட்டிற்க்கு கீழும் இல்லாமல், மேலும் இல்லாமல் வறுமை கோட்டிலேயே வாழும் ஒரு மனிதன். இந்த நிலைமையை நினைத்து நான் நொந்துகொள்ளவில்லை. இது அன்றாடம், இது பழக்கப்பட்டது. என் மூளை இதைத் தினமும் பார்க்கும் கவனிக்காது. இன்னமும் என் மனைவி இரண்டு வருடத்திற்க்கு முன்னால் நடந்த ஒரு சண்டையைப் பற்றித் தன் நியாயத்தை உலகறிய தனியாகக் கத்திக்கொண்டிருக்கிறாள். நான் வண்டியை இயக்கி நகர்த்தி செல்லச் செல்லச் சிறிது சிறிதாக அவள் சத்தம் குறைந்து கொண்டே வந்தது. மனிதன் பேசும் ஒலியின் பயண தொலைவைவிட அதிகமாகக் கடந்துவிட்டேன். ஆனாலும் அவளின் சண்டை குரல் வார்தைகள் காதில் கேட்டுக்கொண்டே தான் இருந்தது.
அந்தத் தெரு முழுவதும் அவசரம் அவரமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளும் மனிதர்களும் உண்டு. நானும் இதில் ஒருவன் தான். இப்படி என் அவசரத்துக்கு நடுவில் இவர்களது அவசரங்களை பார்க்க எனக்கேது நேரம். இருக்கும் சில நிமிடங்களுக்குள் ஒரு டைம்பாம் வெடிக்காமல் தடுக்க ஓடுவது போல் ஓடுகிறேன். மனதில் இப்போ வண்டி நின்றுவிடுமோ? கடைக்கு நேரமாகிவிடுமோ? இருக்கிற காசில காயும் பெட்ரோலும் போட முடியுமோ? கடைக்கு லேட்டானா என் மனைவியைவிட பத்து மடங்கு அதிகமா முதலாளி கத்துவாரே? அவரு என்ன மூடுல இருக்காரோ? இப்படி மார்க்கெட் போகும் வழி எல்லாம் கேள்விகாளாகவே மனசு நிறஞ்சு இருந்திச்சு, இன்னைக்கு பரவால்ல கொஞ்சம் நிம்மதி தான், கையில செலவுக்குக் கொஞ்சம் பணம் இருக்கு. மாச கடைசில சில நாள் வரும் அதுக்கு இது எவ்வளவோ மேல். என்று எண்ணிக்கொண்டே காய்கடைக்கு வந்திட்டேன்.
எப்பவும் வாங்குற கடை தான். அதனால் அதிக விலை சொல்லமாட்டார், அதனால வீணா காசு போயிடாதுனு ஒரு எண்ணம். கடைகாரர் என்னைப் பார்த்ததும்,
“வாப்பா இந்தா என்ன வேணும் அள்ளிப் போடு” என்று ஒரு நீல நிறத்தில் பரந்த பிளாஸ்டிக் கூடையை முன் இருந்த கேரட் கூடை மேல போட்டார்.
முந்தானாள் பழைய பாக்கிய குடுத்திட்டேன். இல்லேனா அவன் முகமும், பேச்சும் எப்படி இருக்கும்னு நினச்சு பாக்கிறேன். அந்தப் பிளாஸ்டிக்கூடையை கையில எடுத்து ஒவ்வொரு காயா எடுத்துப் போட்டுகிட்டே யோசிக்கிறேன்.
நியாபகம் வந்திச்சு ”காச குடு இல்லணா காயில கைய வைகாதனு” சொல்லிட்டே பக்கத்தில படுத்திருந்த மாட பாத்தமாரி. “களவாணிக்கு பொறந்தது, இங்க வந்து என் உசிர வாங்குதுனு” மறைமுகமா திட்டினான்.
அப்படி இருந்தும் ஏன் இங்க வாங்குறேன். ஒண்ணு, காசில்லாத நேரம் இவன் தான் கடன் தரான். இரண்டு, என்னதான் ஆனாலும் என்னய நேரா திட்டமாட்டான், கேவலத்திற்க்கும் மரியாதைக்கும் நடுவுலே கோடு பிடிச்ச மாதிரி நிப்பாட்டிடுவான். சில நேரம் திட்டு வாங்காம இருக்க கூட்டமா இருக்குற நேரத்துல வந்திடுவேன். ஆள் கூட்டத்தில முறைப்பானே தவிர திட்டமாட்டான். நானும் ஒன்னும் புரியாத மாதிரி வாங்கிட்டு போயிடுவேன்.
இன்னைக்கு பழைய பாக்கி கொடுக்க வேண்டியது இல்லாததுனால நானும் இந்த வெண்டகாய் முத்தலா இருக்கு, கத்தரிக்காய் வாடிப் போய்க் கிடக்கு. காலிபிளவர் வாங்கவே மாட்டேன், ஆனாலும் கடையில் இல்லை என்பதை பார்த்துக்கொண்டு காலிபிளவர் இல்லையா என நக்கலாய் கேட்டுக்கொண்டேன். இதில் எனக்கு ஒரு திருப்தி. அவனையும் அசிங்கபடித்தினமாரி ஒரு நினைப்பு.
“இந்தாங்க எவ்வளவு ஆச்சுணு சொல்லுங்கனு” கூடைய அவர்ட்ட நீட்டினேன். அவன் என்ன பாக்காம என் பின்னால யாரயோ பார்த்துக்கொண்டிருந்தான்.
போலீஸ்காரர் ஒருத்தர் அவர் இருசக்கர வண்டியிலிருந்து இறங்கி, கையில் ஒரு பையுடன் நேராக நான் நின்று கொண்டிருந்த கடைக்கு வந்தார். அவர் வருவதற்க்கு முன் கடைக்காரர்
“இந்தா ஓசி நாயி வந்திடிச்சுல்லனு” வாய்க்குள்ள முணு முணுத்துக்கொண்டிருந்தவன்.
அவர் பக்கத்துல வந்ததும் “அடடே வாங்க சார், எப்படி இருக்கீங்க” என்று அப்படியே முகத்தையும் பேச்சையும் மாற்றிக்கொண்டான்.
என்னால நம்ப முடியாமல் அவரையே வெறித்துப் பார்த்துக்கொண்டே நின்றேன். அவர் போட்டிருந்த வெள்ளை சட்டை அவரைப் போக்குவரத்து டிப்பார்ட்மென்ட் என்று காட்டியது. நான் என்கிற ஒரு மனிதன் அப்படி அவரைப் பார்தபடி அங்கே நிற்கிறேன் என்பதே அவருக்கு நினைப்புமில்லை, பொருட்டுமில்லை. நேராக வந்தவர் சட சட வெனப் பை நிறைய காய்களை அள்ளிக்கொண்டார். எப்படியும் என் கணக்குபடி ஒரு 150ரூபாய் மதிப்பிருக்கும். காயை எடுத்துவிட்டு தன் கால்சட்டை பையிலிருந்து 50ரூபாயை எடுத்துக் கடைகாரரிடம் தந்து விட்டு.
“சரியா இருக்குமா?” என்று பேச்சுக்குத் தன் மன சாந்திக்கு கேட்பது போல் கேட்டுக்கொண்டார்.
கடைகாரனும் “இருக்கட்டும் சார்” என்று வேண்டாம் என்று சொல்வது போல் சொல்லி, கிடைத்தவரைக்கும் லாபம் என்று கையை வேகமாக நீட்டிப் பணத்தை வாங்கிக்கொண்டான்.
50 ரூபாய் குடுத்தது என்பது அவர் நீதி தவறாதவர் என்று அவர் மனதை நம்பவைக்கவே. இவன் பணம் கேட்காதது. லோடு வரும்போதும், போகும்போதும் தடையில்லா போக்குவரத்திற்கு இப்படி கவனித்து கணக்கைச் சரி செய்யவே.
நானும் “என்னைத் திட்டின உனக்கு இது வேணும்டா” என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டேன். “யப்பா நேரமாச்சு, எவ்வளவு ஆச்சுனு பாத்து சொல்லேன்னு என் காய் தட்டைக் காட்டினேன். ஏதோ வெறுப்பில் எடுப்பது போல் தராசில் நிறுத்தி, உருட்டி உருட்டி ஒரு துண்டு தாளில் கணக்கை எழுதி 80ரூபாய் என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.
என்னது 80ரூபாயா. என் மதிப்புக்கு ஒரு 40 அல்லது 50 ரூபாய் தான் இருக்கும். “என்னப்பா விலை அதிகமா இருக்கும் போல இருக்கு” என்று கேட்டேவிட்டேன். அதற்கு அவன். “ஆமாயா, எல்லாருக்கும் தானமா குடுத்திட்டு நான் என் குடும்பமும் நான்டுகிட்டு சாகட்டுமா?” என்று எரிச்சலாகச் சொன்னான்.
நான் எதுவும் பேசாமல், காலிபிளவர் கேட்காமலே இருந்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டே 80 ரூபாயை கொடுத்துவிட்டு, இந்தப் போலீஸ்காரனுக்கு என்ன குறச்ச. இவன் புடுங்கிட்டு போறதுக்கு என் தலைல காசு புடுங்கிறான் இவன். எல்லாம் என் நேரம். அய்யோ நேரமே இல்லையே என்று வேக வேகமாக வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்க்கு ஓட்டினேன்.
வீட்டு வாசலில் பையை வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல், மீண்டும் வேகமாக வண்டியை எடுக்கத் திரும்பும்போது. மனைவியின் குரல் இறங்கியபடி மீண்டும் கேட்டது. “என்னங்க கொஞ்சம் நில்லுங்க" என்று. எரிச்சலாக “என்ன” என்று கத்தினேன். “கொஞ்சம் மோர் தரேன் இருங்க” என்று மோரை வேகமாக உப்பு போட்டுச் சொம்புக்கும் கப்புக்கும் மாற்றி மாற்றி ஆற்றி. ஒரு டம்பிளர் மோர் குடுத்தாள். நான் ஒரே மடக்காக அதைக் குடித்துவிட்டு உணர்ச்சி இல்லாத குரலில் “வரேன்” என்று ஒற்றை வார்த்தையில் விடை சொல்லிக்கொண்டேன். மனதில் காலையில் வீசிய டம்பிளர் சண்டை ஒரு மோர் டம்பிளரில் முடிவுக்கு வந்ததை நினைத்துச் சிரித்துக்கொண்டேன்.
நாங்க அப்படித்தான், இந்த மோரும், அந்த ஒரு வார்த்தையும் தான் எங்க காதல் காவியம். உணர்ச்சி இல்லாத வார்த்தைகள் என்றாலும் அதிலும் இந்தச் சமூகம் பார்க்காத அக்கறை ஒளிந்திருக்கும்.
வேகமாக வண்டியை எடுத்துக்கொண்டேன். அவசரமாகக் கிளம்பியதால் தலைக்கவசம் எடுக்க மறந்து விட்டேன். கையில் இருந்த இருனூறு ரூபாயில், எண்பது ரூபாய் காய் வாங்கிட்டடேன், மீதம் இருக்கும் நூற்றி இருபது ரூபாயில் 100ரூபாய்கு பெட்ரோல் போடுவோம் என்று எண்ணிய படி. கடைக்குப் போகும் வழியில் இருந்த பங்கிற்குள் நுழைய.
முன்பு மார்க்கெட்டில் பார்த்த போக்குவரத்து காவலர், பெட்ரோல் நிரப்பிவிட்டு தன் இருசக்கர வாகனத்தில் வெளியே வந்துகொண்டிருந்தார். என்னிடம் தலைக்கவசம் இல்லாதது அவரைப் பார்த்ததும் மீண்டும் நியாபகத்திற்க்கு வந்தது. அப்போது தான் கவனித்தேன் அவரும் தலைக்கவசம் அணியவில்லை.
நான் அவரைப் பிடித்து நிறுத்தி, சாவியை வண்டியிலிருந்து எடுத்து, அபராதம் வசூலித்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். என்னிடமும் தலைகவசம் இல்லையே நான் சரியாக இருந்தா தானே இன்னொருவரை கேட்க முடியும். அவரு போனால் போகட்டும் என்று எண்ணும் போதே. என் எண்ணத்தைக் கலைக்கும்படி. பெட்ரோல் பங்க் ஊழியர் கை அசைத்து அவர் அருகில் வர அழைக்க. நேராக அவரிடம் சென்று வண்டியை நிறுத்தி, “நூறு ரூபாய்க்கு போடுங்க” என்றேன். பெட்ரோல் எவ்வளவு காசு ஏறுது இறங்குது என்பது எனக்குத் தெரியாது, என் சூழல் என்னைச் சிந்திக்க வைக்காது, ஒருவேளை சிந்தித்திருந்தால் இந்த நிலமையில் இருந்திருக்கவும் மாட்டேனோ? இத ஆராயவும் இப்போ நேரம் இல்ல. இப்போதும் அளவு ரிசர்வை தாண்டல. அதை வைத்துப் பெட்ரோல் விலை கூடியிருக்கு என்று நொந்துகொண்டேன். எத்தன பேரு தான் கொள்ளை அடிப்பானுங்க என்று நினைத்துக் கொண்டே வண்டியைக் கடைக்குச் செலுத்தினேன்.
எப்போதும் போலச் சாலை பரபரப்பாக இருந்தது, சற்றும் எதிர்பாரமல் ஒருவர் வண்டிக்கு, குறுக்கே வேகமாக வந்தார். நான் பின்னாலிருந்து வந்த வண்டிகளில் விழுந்துவிடாமலும், அவரையும் இடிக்காமலும், பிரேக்கை மிதித்து. லேசான சாய்வோடு வண்டியை நிறுத்தி நிமிர்ந்து பார்த்தபோது. அவர் அதே வெள்ளை சட்டை போக்குவரத்து காவலர்.
என்னிடம் எதுவுமே அவர் கேட்கவில்லை நேராக வண்டியை நிறுத்திச் சாவியை எடுத்துக்கொண்டு, “ஓரமா வச்சிட்டு பேப்பர்ஸ் எடுத்திட்டு வா” என்று சாவியுடன் சற்று முன்பு நடந்து சென்றார்.
அப்போதும் கூட நான் தலைக்கவசம் அணியவில்லை என்பது நினைவில் வரவே இல்லை. வண்டியின் முன் பையில், கண்ணாடி தாளில் மடித்து வைத்திருந்த பேப்பர்களை எடுத்துபோனேன். போன மாதம் இன்சூரன்ஸ் இல்லாமல் மாட்டிக்கொண்டு பணம் கட்டினதால், காய் கடை காரருக்கு குடுக்க வைத்திருந்த பணத்திற்கு இன்ஸுரன்ஸ் எடுத்தேன், அவருக்குப் பணம் இந்த மாதம் தான் தர முடிந்தது. இப்போ தரவுகள் சரியாகத் தான் இருக்கே என்று கொஞ்சம் திமிராத்தான் நடந்துப்போனேன்.
கையிலிருந்த தாள்களைச் சரிபார்த்துவிட்டு, எல்லாம் சரி தலைகவசம் எங்கே? என என்னைப் பார்க்க. அப்போது தான் எனக்கு நியாபகமே வந்தது. அய்யோ, அபராதம் கட்ட பணம் இல்லையே என்ன செய்ய. “சார் கடைக்கு நேரமாச்சுணு வேகமா வந்ததுல மறந்திட்டேன் சார். ஒரு வாட்டி விட்டிருங்க சார் என்று என் திமிர் மறைந்து கெஞ்சிகிட்டு இருந்தேன்”.
“உன் உயிர் போககூடதுனு தானே தலைகவசம் போடச் சொல்றாங்க. அந்த அறிவு கூட இல்ல. நீ அபராதம் கட்டு” என்று அவர் சொல்லிமுடிக்கும்போது,
நான் அவர் வண்டியைப் பார்த்துக் கொண்டு திரும்பி அவரைப் பார்த்து. “உனக்கு மட்டும் அறிவிருக்கா? உன் கெல்மெட் எங்க? என மனதில் நினைத்துக்கொண்டேன்". என் முகத்தின் மாற்றத்தை வைத்தே என் எண்ணத்தை அறிந்து கொண்டார். அடுத்த கணமே அங்க போய் ஓரமா நில்லு” என்று சொல்லிக்கொண்டே அடுத்த வண்டியைப் பிடிக்கத் தாயாரானார்.
“சார், சார், சார் பிளீஸ் சார், கடைக்கு நேரமாச்சு சார்” கால்ல விழாத குறையா கெஞ்சினேன்.
“உன் பார்வ சரியில்லையே” கொஞ்சம் முன்னாடி நீ நக்கலா பாக்கல?. போய் நில்லு மதியானம் போலாம். என்றார்.
“ஆமாண்டா நான் நக்கலாத்தான் பாத்தேன். போலீஸ்காரன் நீ. நீயே ஒழுங்கா இல்ல இதுல என்ன வேற ஒழுக்கமானு கேக்குற”. யுனிபாம் போட்டவுடனே திமிறு ஏறுது. கொப்பன் உன்ன படிக்கவைக்காம கண்ட கடைக்கும் வேலைக்குப் போண்ணு மிதிச்சு அனுப்பியிருந்தா இன்னைக்கு எவனுக்கோ முன்னாடி கைய கட்டிட்டு நிண்ணு கெஞ்சிருப்ப. யூனிப்பாம் போட்டு மட்டும் என்ன புடுங்கிட்ட, காலைல காய்கடைகாரண்ட பிச்ச தானே எடுத்த. நீயே ஹெல்மட் போடாம வண்டி ஓட்டுர. என்ன கேக்க உனக்கு என்ன யோக்கியத இருக்கு?” அப்படினு மனசுல திட்டிகிட்டே வெளிய கெஞ்சிகிட்டிருந்தேன்.
“சார், சார், பிளீஸ் சார், வேல போயிடும் சார்” அவர் இன்னொருவர் தலைக்கவசம் அணியாமல் வருவதை பார்த்ததும்.
“அப்படினா இருக்குறத குடுத்திட்டு போ” என்று அதிகாரமாகப் பிச்சை கேட்டார். நானும் என்னிடம் மீதி இருந்த அந்த இருபது ரூபாயை குடுத்துவிட்டு. அந்த இடத்தைவிட்டு வேகமாகக் கடந்து போனேன்.
அன்று முழுவதும் இந்த நிகழ்வுகள் என்னை வருத்திக்கொண்டிருந்தன. என் இரு நூறு ரூபாயை. என் சக மனிதன், அரசாங்கம், அதிகாரம் எப்படி பறித்துக்கொள்கிறது என்று வருந்தினேன். எத்தனைமுறை எண்ணியும் எனக்கு அதன் விடை புலப்படவே இல்லை. கடைக்கு வந்த வாடிக்கையாளர்களைக் கூட நான் சரியாகக் கவனிக்க முடியாதபடி என்னில் இந்த எண்ணங்கள் கொதி நிலையில், குமிழிகள் பொங்க அடி மனதிலிருந்து வந்துகொண்டே இருந்தது. இதை நான் யாரிடம் கொட்டிதீர்ப்பது? விவாதிப்பது?
நானும் இந்த மனிதர்களைப் போலச் சுயநலம் உள்ளவன் தானே. பின்ன ஏன் நான் கவலைப்பட வேண்டும். யாருக்கும் எதுவும் செய்யாமல் இருப்பதும் ஒரு சுயநலம் தான். என்னிடம், இருப்பதை தா என்று அதிகாரமாகக் கேட்ட அந்தக் காவல் அதிகாரி தான் காலைக் காய்கடைகாரரிடம் இருப்பதை தந்தார். அதனால் அந்தக் காய்கடைகாரன் என்னிடம் இருப்பதை விலை அதிகம் வைத்து வாங்கினான்.
யாருக்கும் இது தவறாய் படவில்லை. சுயமாய் அது சரியென அவர்கள் எண்ணிக்கொள்கிறார்கள். எப்படி நான், தலைகவசத்திற்கான நூறு ரூபாய் அபராதத்தை தராமல். இருபது ரூபாய் கொடுத்தால் எண்பது ரூபாய் லாபம் என்று சுய கணக்கு போட்டுக் கொடுத்துவிட்டு. அந்த அதிகாரியை நான் ஒரு சமூக கேவலத்தின் அடையாளமாகப் பார்க்கிறேன். நானும் ஒரு விதத்தில் சமூக கேவலத்தின் அங்கம் தானே?.
நாளைக்கு காய் வாங்க என்ன செய்வேன். ஒரு வேளை பெட்ரோல் லிட்டர் நாற்பதாக இருந்திருந்தால். அறுபது ரூபாய் கையில் இருந்திருக்கும். எப்படியும் நியாயமாகத் தலைக்கவசத்திற்கான அபராதத்தை கட்டியிருக்கலாம். என் செயலுக்கு அரசும் ஒரு காரணம் தானே?.
இப்படி எல்லாம் நிமிடத்துக்கு நிமிடம் என் மனம் இன்று இடைவிடாமல் அலைமோதிக்கொண்டே இருந்தது. என் மனசாட்சி என்னைக் கொன்றுவிடும் போல் இருந்தது. இதை நான் சரி செய்தே ஆக வேண்டும். கடை முதலாளியிடம் நூறுரூபாய் கெஞ்சி கடன் வாங்கிக்கொண்டேன். வீட்டிற்கு போகும் வழியில் அந்தக் காவலரைச் சந்தித்து அபராதம் செலுத்த முடிவெடுத்தேன்.
வேலை முடித்து இரவு என் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்க்கு போகும் வழியில் இரண்டு தெரு தள்ளித் தெருமுனையில் அந்தக் காவலர் வீடு இருக்கிறது என்று அறிந்து. அந்தத் தெருவை நெருங்கும்போது, அந்த வீட்டில் கூட்டமாக ஆட்கள் நின்றிருக்க “அய்யோ” வென ஒரு பெண்ணின் ஒப்பாரி சத்தம் கேட்டுகொண்டிருந்தது. என்ன என்று வண்டியை நிறுத்திவிட்டு சென்று பார்த்தபோது அதிர்ந்துவிட்டேன், காலையில் நான் பார்த்த அதே காவலர் மரணமடைந்திருந்தார்.
அருகில் அவர் மனைவி கதறி அழுது மாரில் அடித்துப் புலம்பி. அய்யோ, நான் என்ன செய்வேன், ஹெல்மட் எடுத்துப் போங்கனு சொன்னென் கேட்டீங்களா? இந்தப் புள்ளய நான் இனி எப்படி வளப்பேன். ஊன பட்ட குழந்தையாச்சே, அய்யோ” என அவள் அழும் சத்தம் என் மனதில், என் உடம்பில் என்னமோ செய்தது. அந்தக் காவலரின் தலை அருகில் அந்த முடமான குழந்தை தன் அப்பாவின் மரணம் அறியாமல். கையில் ஒரு இருபது ரூபாய் பலூனை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது.
ஒரு நொடி கூட என்னால் அங்கு நிற்க முடியவிலை. நேராக வீட்டிற்கு வந்துவிட்டேன். இப்போது கட்டிலில் என் மனைவி அருகில் கண்களை மூடிப் படுத்திருக்கிறேன். அந்தக் குழந்தையின் முகம் என் கண்முன்னே அந்த இருபதுரூபாய் பலுனுடன் வந்து சில நொடிகளுக்கு உறைந்து நிற்கிறது.
சட்டென்று அந்தக் குழந்தை முகம், அந்தக் காய்கடைகாரன் முகமாக மாறி, காந்தியின் முகமாக மாறி என்னைப் பார்த்துச் சிரித்தது.
-லி
