top of page

பட்டுப்பாவாடை சட்டை

தேரோடும் வீதியிலிருந்த அக்கிரகாரத்திற்கு நான்கு மையில்கள் கடந்து இருந்தது இராஜாபுரம் கிராமம். விவசாயமும், கூலித் தொழிலுமாகப் பாமர குடிகளின் உறைவிடம். அரசாங்கமும் அதிகாரங்களும், இந்தக் கிரமத்திற்கு இதுவே போதும் என்று எண்ணியும், ஓட்டு எண்ணிக்கைக்காக மட்டும் செய்து கொடுக்கப்பட்ட சில அடிப்படை வசதிகளுமே கொண்ட ஊர். பள்ளிக்கூடம் மருத்துவம் எல்லாம் பல மயில்களுக்கு அப்பால் எட்டாக்கனியாகவே இருந்தது.


தேரோடும் வீதியில் இருந்த பெரியக்கோவிலுக்கு பல கிடுபிடிகள் இருந்ததாலும், பணக்கார சாமி என்பதாலும் ஊர்மக்கள் ஒன்று கூடி தங்களுக்கென எளிமையாக ஊருக்கு நடுவில் சின்னதாக ஒரு கோவிலும், ஏழை தெய்வமும், அதற்கு உள்ளூர் பூசாரியும் வைத்துக்கொண்டனர்.


அக்கிரகாரத்தில் குடியிருந்த பெரியவர் முற்போக்கு சிந்தனையாளர், ஊருக்கு வெளியே விடப்பட்ட இந்த மக்களை நினைத்து அங்கலாய்த்துக்கொள்ளுபவர். பல சமூக தேவைகளை இராஜாபுர மக்களுக்கு யோசிக்காமல் செய்பவர். புரட்சி கர சிந்தனைகள் மூலமும், அவர் கண்டுபிடித்த பல புது தொழில்நுட்பங்கள் மூலமும் அநேக விருதுகளையும், செல்வங்களையும் சேர்த்தவர். பல நல்லகாரியங்களை செய்பவர். அதில் ஒரு பகுதியாக இராஜாபுரத்திற்கு ஒரு சிறு பள்ளிக்கூடம் கட்டி அதில் தானும் ஆசிரியராகப் பணி செய்து வந்தார்.


அவரின் இந்த நற்செயலுக்கும் செல்வாக்கிற்கும் அரசு பல கெளரங்களைத் தந்திருந்த்தது. அரசின் பல்வேறு முக்கிய பிரமூகர்கள் நண்பர்களானார்கள். அதில் ஆட்சியரும் ஒருவர். அந்த மாவட்ட ஆட்சியர் ஒருமுறை பெரியவர் ஊரில் கட்டியிருந்த பள்ளிகூடத்திற்கு வந்து சந்திக்க விரும்பித் தேதியும் முடிவு செய்தார்கள்.

.

பள்ளிக்கூடமும், ஊரும் பரபரப்பானது தங்கள் ஊருக்கு மாவட்ட ஆட்சியர் வரப்போகிறார் என்னும் செய்தி வானவேடிக்கை போலப் பரவியது. பள்ளிக்கூடத்திலும், கோவிலுக்கு அருகில் இருந்த மேடையிலும் கலை நிகழ்ச்சிகள் ஏற்ப்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதற்கான முன் தயாரிப்புகள், பயிற்சிகள் துவங்கியது.


அக்கிரகாரம் அவர்கள் பகுதியிலும், ஊர் பிள்ளைகள் பள்ளிகூடத்திலும் பயிற்சிகள் செய்துகொண்டார்கள். சிறுபிள்ளைகள் அணிவகுத்து நின்று ஆட்சியரை வரவேற்பது என்பது நிகழ்வின் ஒரு பகுதியாக முடிவு செய்யப்பட்டு. ஊர் பள்ளிக்கூட பிள்ளைகளுக்குப் பயிற்சிகள் தரப்பட்டன. அந்த நிகழ்வுக்குப் பயிற்சி பெற்ற பிள்ளைகள் பட்டுப்பாவாடை சட்டை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு. அதில் சேர்ந்த எல்லா பிள்ளைகளிடமும் பட்டுப்பாவாடை சட்டை வாங்கிக்கொள்ள சொல்லிவிட்டார்கள்.


அந்தச் சிறுபிள்ளைகள் கூட்டத்திலிருந்த மலர் தலை கால் புரியாத அளவுக்கு மகிழ்ச்சியடைந்தாள். வெகுநாட்களாக ஆசைபட்ட பட்டுப்பாவாடை சட்டை கனவு இப்போது நிறைவேறிவிடும் என்று மனதில் எண்ணிக்கொண்டாள். இதுவரை ஆட்சியர் வருவது அவளுக்கு மகிழ்ச்சி தர வில்லை. பட்டுபாவடை சட்டை என்றதும் மனதிலேயே வரும் ஆட்சியரை முன்னதாகவே வரவேற்றாள்.


மலர் அந்த ஊர்கோவிலில் நியமிக்கப்பட்ட பூசாரியின் மகள். குடும்பமே அவரின் சொற்ப வருமானத்தில் பிழைத்துக்கொண்டிருந்தது. மலருக்கு இன்னும் ஒரு தங்கை இருந்தாள் இப்போது தான் நடக்க பழகிக்கொண்டிருந்தாள்.


இன்று பயிற்சி முடித்ததும், வேக வேகமாகத் தன் காலணிகளைக் கூட அணியாமல் நேராகக் கோவிலுக்கு ஓடினாள். கோவிலில் அப்பா விளக்குகளை எரியவிட்டு அந்தி பூஜைகள் செய்துவிட்டு வாசலில் அமர்ந்திருந்தார். ஓடிச் சென்று

“அப்பா நான் ஆட்சியர் ஐயா வரும்போது பூப்போட நிக்கேன்ல, அதுக்கு டீச்சர் பட்டுபாவடை சட்டை போட்டு வரச் சொல்லிடிச்சுப்பா, எனக்கு வாங்கி தருவே இல்ல?”


என்று மூச்சிரைத்தபடி ஒரே மூச்சாகச் சொல்லிவிட்டு அப்பாவின் முகத்தின் எதிர் பாவனையைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.


அப்பா அரை நொடிக்குள் வரப்போகும் செலவைக் கணக்குபண்ணிக்கொண்டார், நிரந்தரமான உத்திரவாத வருமானம் இல்லை, தினம் சாப்பாடு நடக்கிறதே ரேசன் புண்ணியத்தில். பள்ளிக்கூடத்துல சாப்பாடு போடுறாங்கணு தான் மலரைச் சேர்த்திருந்தார். இரண்டாம் பிள்ளையின் பிரசவ செலவுக்குப் பண்ணையிடம் வாங்கிய பணத்தை திரும்பத் தர வழியக்காணோம். ஊர் மக்கள் தருகிற சில்லறைக்கும், பொருளுக்கும் வாழ்க்கைய தள்ள முடியாம தவிச்சு நிக்கிறோம், இதுல மருந்துக்குப் போய்வாற செலவு, விசேச செலவு, மளிக பாக்கி என்று எல்லா பகத்திலும் குத்திக்கொண்டிருந்த பொருளாதர முள்ளின் வலியைச் சிறிது கூடக் கண்ணில் காட்டிக்கொள்ளாமல்,


“அப்படியா சேதி, என் ராசாத்திக்கு புது பாவாடை சட்டையா வாங்கிடலாமே” என்று அணைத்துக்கொண்டார்.


வீட்டை நோக்கி ஒரே ஓட்டமாக ஓடினாள். கையில் கிடைத்த பொருட்களால் புறம்போக்கு நிலத்தில் மறைவு ஏற்படுத்தி வைக்கப்பட்ட குடிசை என்று சொல்லிக்கொள்ளக்கூட முடியாத வீடு. முன் முற்றத்த்தில் விளையாடிக்கொண்டிருந்த தங்கையின் மொட்டைப் போடாத பூனைமுடியை தடவிக்கொண்டு, காய்ந்த துணிகளைக் கொடியிலிருந்து எடுத்துக்கொண்டிருந்த அம்மாவிடம்,


“அப்பா எனக்குப் புது பாவாடை சட்டை வாங்கி தாறேன்னு சொன்னாங்களே” என்று குதித்துக்கொண்டே சொன்னாள்.


கொடியிலிருந்து தனக்கென இருந்த ஒரே மாற்று ரவிக்கையை எடுத்துக்கொண்டே அதிலிருந்த நைய்ந்து போயிருந்த ஓரங்களைப் பார்த்து ஒருமுறை முறைத்துவிட்டு. கணவன் போட்ட அதே கணக்குகளை மனதில் எண்ணிக்கொண்டே கூடுதலாய் இளயதுக்கு காதுவேற குத்தனும்னு எண்ணிக்கொண்டே


“எதுக்கு இப்போ உனக்குப் பட்டுப்பாவாட”? என்று தவிப்பு கலந்த கோபத்தில் கேட்டாள்.


“ஆட்சியர் ஐயா வர்ராரில்லமா, அதுக்கு நான் பூப்போடுறேன் ல அதுக்கு போட்டு நிக்க பட்டுபாவாட சட்ட தான் போடணுமாம் டீச்சர் சொல்லி அனுப்பினாங்க”.


“சரி போ, உள்ள சீனிக்கிழங்கு வேக வச்சு வச்சிருக்கேன் எடுத்துச் சாப்பிடு” என்று சொல்லிவிட்டு.

கணவனை நினைதுக்கொண்டாள் அவர் கோவில் சுவரில் சோகமாய் சாய்ந்திருக்கும் காட்சி மனதில் வந்து போனது.


இரவுணவு முடித்துப் பிள்ளைகள் தூங்கிவிட்டனர். இளையதை பால் குடுத்து மடியில் கிடத்தியிருந்தாள். பேசினால் எழுந்துவிடுவாள் என்று. சைகையில் கோவமாகவும், எரிச்சலாகவும் மலரைக் காட்டி, பின் தன் பாவடையை காட்டி “எப்படி வாங்கபோற?” என்பதை கையிலேயே வரைந்து கேட்டாள்.


அவன் “பொறு பொறு நான் பாத்துக்கிறேன்” என்று அப்பா என்னும் ஆளுமை என்பதுபோல் தன் மார்பில் கைவைத்து காட்டினான்.


அவள் “இதுக்கொண்ணும் குரைச்சல் இல்ல என்று தாடையை ஆட்டிகாட்டினாள். சின்னதுக்கு காது குத்தணும் என்று குழந்தையின் காதைப் பிடித்துக் காட்டினாள்.


“சரி, சரி பண்ணலாம்” என்பதுபோலக் கையைக் காட்டி விட்டு. தன் துண்டை எடுத்து உதறி தோளில் போட்டுவிட்டு வெளியே வராந்தையில் வந்து படுத்தார். கவலைகள் ஆயிரம் இருந்தாலும், அதுவா நடந்திடும் என்றோ, இல்லை எப்படியாவது பண்ணிடலாம் என்றோ ஒரு குருட்டு நம்பிக்கை தூக்கத்தை வர வைத்தது.


காலையில் மலரின் அம்மா முணு, முணுத்தபடி அடுப்பில் கஞ்சி பொங்கிக்கொண்டிருந்தாள். கணவர் பின்னால் வந்து நின்று


“எவ்வளோ ஆகும்?” என்று கேட்டார்.


“நாணூறு ரூபா மேல ஆகும்” என்றாள்.


“சரி நான் பண்ணையிடம் கேட்டுப் பாக்கிறேன் அடுத்த மாசம் திருவிழா காசு வரும் அத வச்சு குடுத்திடலாம்னு கேக்கிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.


பண்ணை வீடுவரை வேகமாக நடந்த கால்கள் இப்போது மெதுவாக நடக்க துவங்கியது. ஏற்கனவே வாங்கிய கடனை இன்னும் தர முடியவில்லை இதை எப்படி தருவேன் என்று எப்படி சொல்வது. எல்லாத்திற்கும் வரும் திருவிழா தான் பதில் என்று மனதில் எண்ணிக்கொண்டே உள்ளே வந்து பண்ணையாருக்கு வணக்கம் சொன்னான்.


தலையைச் சொறிந்துக்கொண்டே “நானூறு ரூபாய் வேணுமுங்க, இதுவும், பழய பாக்கியும் அடுத்த மாதம் திருவிழா முடிந்ததும் தாரேன், உதவியாயிருக்கும்” என்று கும்பிட்டார்.


“என்னல செத்த மூதி, நான் ஏமாந்த பயணு நினச்சிருக்கியா?” என்று கடினமாகக் கத்தினார்.


இதை எதிர்பாத்தது தான்,


“நானூறு ஓவாக்கு என்ன அப்படி தல போற காரியம் வந்திட்டு”னு கேட்டார்.


பாவடைக்குன்ணு கேட்டா கிடைக்காது என்று தெரியும் என்பதால். என்ன சொல்வது என்று முழித்துக்கொண்டே


“திருச்சந்தூர் போறேங்க அதான். திருவிழா வசூல் சரியா இருக்குங்க கடைசி தேதில மொத்தமா கொடுத்திடுவேன். பழய பாக்கி அறுனூறு சேத்தா ஆயிரம் வருதுங்க, கூடுதலா வட்டிங்க” என்று சொல்லித் தலையைக் குனிந்தார்.


திருச்செந்தூர் என்பதை பண்ணை அம்மா உள்ளே நின்று கேட்டுக்கொண்டிருதாள், கொஞ்சம் இங்க வாங்க என்று பண்ணையை அழைத்துப் புண்ணியம் தான் வரும் கொடுத்து விடுங்க என்று காதில் சொல்லி அனுப்பினாள். பண்ணை பணத்தை தந்து.


“இந்தா பாரு, கடைசி திருவிழா அண்ணைக்கு என்ன பாக்காம போன மவன, பூசை செய்யக் கை இருக்காது பாத்துக்க” என்று மிரட்டிவிட்டார். வாங்கிக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் ஒரே நடையாக வீட்டை அடைந்தார் பூசாரி.


முகத்தில் சாதித்த மகிழ்ச்சி, நேராக மனைவியிடம் சென்று அடுத்த செலவு வர்ரதுக்குள்ள வா போய், பிள்ளைக்குப் பாவாட எடுத்து வந்திடலாம் என்று துரிதபடுத்தினார். பணம் கிடச்சுதா? எப்படி கொடுத்தார் என்று கேட்டாள். அதெல்லாம் உனக்கு எதுக்கு கிளம்பு போலாம் என்றார்.


தொட்டி தண்ணீரில் முகத்த அலம்பிவிட்டு, முன் சுவரில் மாட்டி இருந்த பச்சை பிரேம் கை அளவு கண்ணாடியைப் பார்த்துத் தலையை ஒதுக்கிவிட்டு. வீட்டு நிலையில் ஒட்டி வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்து ஒட்டிக்கொண்டாள். திரும்பிக் கணவனைப் பார்க்கும்போது அவர் சரி சரி வா என்று சொல்லிப் பூத்திருந்த பட்டு ரோசாவை பார்த்தார். புரிந்தவளாய் அதைக் கிள்ளி தலையில் வைத்துவிட்டு பூரித்து அவரைப் பார்த்துச் சிரித்தாள். இளையதை எடுத்து இடுப்பில் வைத்து விட்டு நடந்தார்கள்.


“பெருசு எப்போ பள்ளிக்கூடத்திலிருந்து வரும்” என்றார். “அது வரச் சாயங்காலம் ஆகும். நாளைக்கு ஆட்சியர் வர்ரதுனால இராத்திரி ஆயிரும்னிச்சு”. வேகமாகக் கடை வீதிக்கு நடந்தார்கள்.


கடைக்காரர் பட்டுப்பாவடைகளை எடுத்துக் காட்ட, நானூறு ரூபாயை அளவாக வைத்துத் தேடினார்கள். நானூறு ரூபாய்க்கு ஒரே ஒரு பாவாடை சட்டை தான் இருந்தது அது பார்க்கச் சிறப்பாக இல்லை. ஐனூற்று ஐம்பது ரூபாய்க்கு முத்துக்கள் பதித்த முழங்கால் இறக்கமுள்ள அழகான பட்டுபாவாடை சட்டை இருவரது கண்களையும் பிடித்துக்கொண்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பூசாரி தன்னிடம் நானூறு தானே இருக்கிறது அதனால் குறைந்த விலை துணியையே எடுத்துக்கொள்வதாகக் கடைகாரரிடம் சொல்ல. வேண்டாம் “இதுவே இருக்கட்டும்” என்று ஐநூற்று ஐம்பது ரூபாய்க்கான துணியை எடுத்துத்தந்தாள்.


இதை எதிர்பார்காத பூசாரி “என்ன செய்யுத”? என்று கேட்கத் தன் புடவை மடிப்பிலிருந்து நூற்றைம்பது ரூபாயை எடுத்து அவரிடம் தந்தாள். “இது ஏதுட்டீ” என்று அவர் கேட்க,


“சின்னவளுக்கு காதுக்கும், மொட்டைக்கும் சேத்தேன்” மறுபடியும் சேத்திட்டா போகுது என்றாள். இருவரும் மகிழ்ச்சியாக விலை அதிகமான பட்டுபாவடை சட்டையை வாங்கிக்கொண்டார்கள்.


இரவுப் பள்ளி பயிற்சி முடித்து வேக வேகமாக வீட்டுக்கு வந்த மலர் யார் முகத்தையும் பார்க்காமல் வீடு மூழுவதும் நின்ற இடத்திலிருந்து நோட்டமிட்டாள். எங்கும் புது துணிக்கான அறிகுறிகளே இல்லாமல் இருக்க, முகம் தொங்கி, கண் நிறைந்து


“எனக்குப் பாவாட சட்ட வாங்கலயா?” அம்மா கஞ்சி வடித்துக்கொண்டே திரும்பாமல் “இல்லயே” என்று சொல்லி உள் உதட்டில் சிரித்தாள்.


மலருக்கு அழுகை முட்டிக்கொண்டு ஓவென்று அழத்துவங்க சட்டென்று வீட்டின் நடு பகுதியில் இருந்த விலை ஸ்டிக்கரை பார்த்தாள். மனதிற்க்குள் ஒரு வேளை வாங்கிவிட்டார்களா என்று நினைக்க. மனதில் ஏங்கிக்கொண்டே திண்ணையிலிருந்த அப்பாவைப் பார்த்தாள். அவர் மவுனமாகத் துணியை ஒழித்துவைத்த இடத்தைக் கைகாட்டினார். வேகமாகச் சென்று எடுத்து மனசோடு அணைத்துக்கொண்டாள். புது மாம்பழ நிற பட்டுபாவாடையின் வாசத்தை நுகர்ந்து கொண்டாள். கன்னத்தில் இடுக்கி பிடித்து நம்பமுடியாதவளாய் அம்மாவைப் பார்க்க அம்மா


“அத அங்க வை முதல்ல அழுக்கு பண்ணாத". காலைல குளிச்சிட்டு போடு” என்றாள். அவளுக்கு ஆசைக்கு ஒருவாட்டி போட்டுப் பார்க்க வேண்டும் என்று துடித்தாள். அளவு சரி பாக்கிறேம்மா என்று சொல்லிப் பதில் கூட எதிர்பார்க்காமல் வேகமாகப் புத்தாடையை அணிந்தாள்.


மகளை முதல் முறை பட்டுப்பாவாடை சட்டையில் பார்த்துக் கண்ணில் நீர் நிறைத்துக்கொண்டனர். மலர் ஓடி கைஅளவு கண்ணாடியில் தன் முழு உருவம் தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டாள். அப்பாவிடம் கண்ணாடியைப் பிடிக்கச் சொல்லித் தள்ளி நின்று மனதிலேயே பார்த்துக்கொண்டாள். அப்பா மகளின் கொஞ்சலை பார்த்துக்கொண்டு இன்னும் எத்தனை ஆயிரம் ரூபாய் வேண்டுமானாலும் கடன் வாங்கிவிடலாம் என்று மனதில் எண்ணினார்.


பாவடை சட்டை மாற்றி இரவுணவு முடித்து அப்பா அருகில் படுத்திருந்த மலர். “அப்பா நாளைக்கு ஆட்சியர் ஐயா கார்லேர்ந்து இறங்குவாராம் அவரு வாரபாதைல சிவப்பு கம்பளம் போடுவாங்களாம்பா, நானு, அனன்னியா, ஆயிஷா எல்லா பிள்ளைங்களும் இரண்டு பக்கமும் புது துணி எல்லாம் போட்டு வரிசயா நின்னு பூவ எடுத்து வீசணும்பா. அவரு கோவிலுக்கும் வருவாராம் டீச்சர் பேசிகிட்டாங்க. உங்க பக்கத்துல அவரு வருவாரில்ல, நீங்க அவர்ட்ட பேசுவீங்களாப்பா?” என்று கேட்டாள்.


“ஹ்ம்ம்ம்ம், தெரியலயே, எனக்கே படப் படணுதான் இருக்கு. நானும் ஆட்சியர் ஐயாவ இதுவர பாத்ததில்லயே அவரு என்கிட்ட பேசினா நானும் பேசுறேன். அவரு பக்கத்துல நிக்கிறது எம்புட்டு கெளரவம், பண்ணையாரெல்லாம் நாளைக்கு மலச்சு போகப் போறாங்க. அம்மா கூட நம்மள திரையில தான் பாக்க முடியும்”.


“அப்பா உனக்குப் பயமா இருக்கா? எனக்கு வயிறு எல்லம் ஏதோ பண்ணுது. நெஞ்சு காரம் பிடிச்சமாதிரி இருக்குப்பா” என்றாள் மலர்.


“இதுக்கு எதுக்கு பயம் உன் கூடப் படிக்கிறதுங்க எல்லாம் சேந்து தானே நிப்பீங்க, உனக்குப் பாடம் எடுக்குற பெரியவரும் கூடத் தான் வருவாங்க, பயப்படாம நில்லு. அப்பாவும் நீ நிக்குறதுக்கு பக்கத்துல கோவில்ல தான் இருப்பேன் சரியா. சரி ராசாத்தி இப்போ போய்த் தூங்கு” என்று அம்மாவிடம் அனுப்பி வைத்தார்.


இந்த உரையாடல்களை எல்லாம் வீட்டிற்க்குள் கேட்டுக்கொண்டிருந்த மலரின் அம்மாவுக்கு நாளைய தினத்தை நினச்சு பூரிப்பாக இருந்தது. பல முறை ஊர் திருவிழாக்களில் நடந்த அவமானங்களுக்கு வடுவாய் இருக்கும் என்று மனம் விரிய பெருமூச்சு தந்தாள். தூக்கத்தில் தாய் அமிர்தம் குடித்துக்கொண்டிருந்த பிள்ளையின் கன்னத்தை ஈரமாக்கியது.


விழாவுக்கு மொத்த ஊரும் ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. அரசு அதிகாரிகள் முன் இரவிலிருந்தே ஆட்சியர் வரும் பாதை துவங்கி, ஊர் முழுவதும் புழுதி பறக்க அலசிச் சோதனைகளைச் செய்து தயார் செய்தனர். குறித்த நேரத்தில் ஆட்சியர் வந்தார், பெரியவர் அவரை வரவேற்று சிகப்பு கம்பளத்தில் அழைத்து வர. சிறுவர்கள் பூத்தூவ தயாராக இருந்தார்கள், மலரும் புது பட்டுப் பாவாடை சட்டை அணிந்து தன் கையில் கொடுத்திருந்த பூக்கூடையை பிடித்துக்கொண்டு தயராக இருந்தாள். கவர்னர் தூரத்தில் நடந்து வர அதிகாரிகள் படப் படத்தபடி அவருக்குப் பாதுகாப்பு வளையம் அமைத்தப்படி வந்துகொண்டிருந்தனர்.


மலருக்கு அதைப் பார்த்ததுமே இதயம் பல மடங்கு வேகத்தில் துடித்துக்கொண்டிருந்தது. எச்சில் வரண்டு, வேர்வை வர, கண்ணை முழித்தபடி நின்றிருந்தாள். அருகிலிருந்த ஆயிஷாவிடம் “எனக்குப் பயமா இருக்கு டீ” என்றாள். அதை அவள் கேட்டுப் பதில் சொல்லக் கூட நேரம் இல்லாதபடி ஆட்சியர் வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தார். மனதில் அப்பா நியாபகம் வரவே கோவிலை நோக்கி அப்பாவைத் தேடினாள், கோவில் பகுதியில் அப்பா இல்லை அவரைத் தேட இனியும் நேரம் இல்லை. என்ன செய்ய என்று உச்சபச்ச பதட்டத்தில் நிற்கும்போது ஆட்சியரும் பெரியவரும் அருகில் வந்தார்கள், அவளை அறியாமலேயே கைகள் பூவை எடுத்து வீசியது. ஆனால் கண்கள் அப்பாவையே தேடிக்கொண்டிருந்தன. ஆட்சியரும், பெரியவரும் வேகமாகக் கோவிலுக்குள் நுழைய அங்கே வழக்கமான பூசாரியான மலரின் அப்பா இல்லாமல், வேறு அய்யர்கள் அக்கிரகாரத்திலிருந்து வந்து நின்றிருந்தார்கள், பூசை செய்து வரவேற்ப்பு தந்தார்கள். பூசாரிகள் புதிதாய் இருப்பதை பெரியவர் உட்பட அங்கு யாரும் கவனிக்கவும் இல்லை,


மலர் தான் மலர் தூவியதை அப்பா பார்த்திருப்பார், அப்பா ஆட்சியருக்கு பக்கத்தில் இப்போது பேசிகிட்டு இருப்பாரென மனனிறைவடைந்து, ஆயிஷாவிடம் தனது அனுபவத்தையும், ஆட்சியர் மற்றும் பெரியவரின் நடையையும், அதிகாரிகளின் கெடுபிடிகளையும், துப்பாக்கியையும், பற்றிப் பேசத் துவங்கி சிரித்துக்கொண்டிருக்க. அப்பா அவர் புறக்கணைக்கப்பட்டதையும் மறந்து, வெளியே ஒரு ஓரமாக நின்று தன் பிள்ளை புது பட்டுப் பாவாடை சட்டையில், அலங்கரமாக ஜொலிப்பதை, சிரிப்பதை பார்த்துக் கண்ணீர் ஒற்றிக்கொண்டிருந்தார்.


அவர் ஒற்றிய கண்ணீர் அதற்குத் தானா என்பதை அவர் மட்டுமே அறிவார்.


-லி

writerlivin@gmail.com

average rating is 4.5 out of 5, based on 150 votes, People love it
Comments

Share Your ThoughtsBe the first to write a comment.
bottom of page