top of page

நாணயம்

துள்ளிக்குதித்து, காற்றில் கொடிபோல் ஆடியபடி, மனதின் மகிழ்ச்சியை அலை அலையாக எழுதிய வரிகள்போலப் பறந்தும், ஓரங்கள் சிறிது கிழிந்தும், கை நூலால் தைக்கப்பட்டிருந்த அந்தக் கணுக்கால் நீளச் சாயம்போன அழுக்கு அடை பிடித்திருந்த நீல நிற பாவடைக்குள் கீழ் இருந்து, தாவித் தாவி நடக்கும் வேகத்தில் ஓடியபடி வெளிப்பட்டது அந்தச் சிறுமியின் கால்கள். கருந்தோலும், சேற்றழுக்கும், ஆறிப்போன புண்ணும், சொறிந்த நக அடையாளமும், வெட்டாத நகமும், அதில் நிறைய அழுக்கும், காய்த்து போயிருந்த கணுக்காலும், செதும்பும் என்று சிறு கால்கள் அழகாகத் தாவிக்கொண்டே நடந்து கொண்டிருந்தது.


நகர பேருந்து நிலையத்திற்குள், எவருக்கும் வேண்டாமல், யார் நினைவிலும் ஒரு பொருட்டாக நினைக்கப்படாமல், குப்பையோடு குப்பையாகக் காற்றில் அங்கும் இங்கும் பறந்து அலைந்து கிடக்கும் அடையாளம் இல்லாத கிழிந்த, உபயோகமற்ற பாலித்தீன் நெகிழிப் பைப் போன்று, அந்தச் சிறுமி பேருந்து நிலையத்தில் நடமாடிக்கொண்டிருந்தாள். தினமும் பயணிக்கும் பல்லாயிரம் மனிதர்களின் கதைகளில் ஒரு எழுத்தாய் கூட எழுதப்படாத, நினைக்கப்படாத அவள், வரிகளின் நடுவில் வரும் வெற்று இடத்தில் கண்களுக்குப் புலப்படாமல் வாழும் அமைதியை போல இருந்தாள், தினமும் வயிற்றின் தேவைக்கோ, இல்லை பொழுதுபோக்காகவோ வார்த்தைகளில் உள்ள ஒற்றெழுத்தின் புள்ளிகளைச் சேகரிப்பதுபோல நாணயங்களைப் பிச்சையாகச் சேகரித்தாள்.


கையில் ஒரு ஐந்து ரூபாய் நாணயமும், இரண்டு இரண்டு ரூபாய்களும், ஒரு பழய மற்றும் ஒரு புதிய ஒரு ரூபாய் நாணயங்களை வைத்துக் குலுக்கி குலுக்கி, ஒரு நபர் விட்டு ஒரு நபர் என்று மாற்றி மாற்றி, சிலரை தட்டி அழைத்தும் சிலரை முன்பு சென்று வழி மறித்தும், சிலரை அவளுக்குக் கொடுக்கப்பட்ட அம்மா, அய்யா, அண்ணே, அக்கா, என்ற நான்கு மந்திரங்களைச் சொல்லிப் பிச்சை கேட்டாள்.


பாவமாக, பசிப்பதாக, ஒரு ரூபாயாவது, இல்லையா, கேவலமாக, கிண்டலாகத் தன் முகபாவங்களை ஆட்களுக்கு ஏற்றது போல மாற்றிக்கொண்டாள். இல்லை என்று யார் சொன்னாலும் அடுத்த நொடி அவர்களை விட்டுக் கடந்து சென்றுவிடுகிறாள். அதற்கு மேல் அவர்களிடம் கேட்பது அவமானம் என்றோ?, அது தர்மம் இல்லை என்றோ? அவளுக்கென்று ஒரு கோட்பாடு உள்ளவள் போல வெடுக்கென்று தலையைக் குனிந்து அடுத்த நபரிடம் சென்றுவிடுகிறாள். இதனால் வருமானம் குறைவு என்று அவள் அம்மா என்று சொல்லிக்கொள்ளும் பெண்ணிடம் சாபப்பேச்சும், அடி உதையும் வாங்காத நாள்களே கிடையாது.


மழை வெயிலால் நரைத்துப்போன அவள் மேல்சட்டையில் தன் முகத்தைத் துடைத்துக்கொண்டாள், கழுத்தில் ஒரு சிகப்பு நூல் தவிர வேறு அணிகள் எதுவும் இல்லை, அவ்வபோது எண்ணெய் இல்லாமல், செம்பட்டையாகி பின்னப்பட்டு கிடந்த தலைமுடியை சொறிந்து அழுக்கு உருளையை எடுத்துக் கீழே போட்டுக்கொண்டே நடந்தாள். வெயிலும் நிழலும் அவளுக்கு ஒன்று போலவே பழக்கப்பட்டிருந்தது.


வேகமாக நடந்து கொண்டிருந்த கால்கள் சட்டென்று ஒர் இடத்தில் நின்றுவிட்டது. எங்கும் நகராமல் அங்கேயே நின்றிருந்தாள். கையில் வைத்திருந்த சில்லரைகளை இடது கையில் வைத்துக்கொண்டு, வலது கையால் தலை சொறிந்தபடி அவள் முன் தரையில் கிடந்த ஐநூறு ரூபாய் தாளைக் கருவிழி விரித்து, உண்மைதானா என்பது போலச் சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தாள். மெல்ல காற்று அவளை உரசி சுயநினைவிற்கு கொண்டுவந்தது. காற்றில் ரூபாய் நோட்டு மெல்ல நகரந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பறந்து விடலாம் என்பது போல் அதிர்ந்து ஆடிக்கொண்டிருந்தது.


அவள் சட்டென்று நின்ற இடத்திலேயே திரும்பிக்கொண்டாள். இதயம் பலமாகத் துடித்தது, எந்த முடிவானலும் அடுத்த பலமான காற்று வருவதற்குள்ளோ, அல்லது வேறு நபர் அதைப் பார்ப்பதற்க்குள்ளோ எடுத்தாக வேண்டும். மனம் படபடத்தது. அவள் தன் சுயத்தின் ஆழத்தில் எண்ணங்களைப் புதைத்தாள், அதை அலசித் தரம் பார்த்தாள். தர்மமாகப் பெறுவது நேர்மை, அடுத்தவர் பொருளை எடுப்பது சரியல்ல என்று எண்ணும்போதே காற்று மரத்தை அசைக்கத் துவங்கியிருந்தது. பணம் அடுத்த நொடி பறந்துவிடும் என்று எண்ணினாள், ஒருவேளை அதைத் தொலைத்தவர் தேடி வரக் கூடுமே என்று எண்ணம் கொண்டு, காற்று ரூபாய் நோட்டை தொட்டு எடுக்க நினைத்த சரியான கணத்தில் அதை வேகமாகத் தாவிக் கையில் எடுத்துக்கொண்டாள்.


முதல் முறை ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை கையால் தொட்டு பார்க்கிறாள், ஏதோ நினைப்பு வந்தவளாய் சட்டென்று அதைக் கிள்ளி பிடித்துக்கொண்டு ஒவ்வொரு கைகளாகப் பின்னால் துணியில் தேய்த்து தன் கைகளைச் சுத்தம் செய்து கொண்டு. ரூபாய் நோட்டை தெய்வீக தன்மையோடு கையில் பிடித்துக்கொண்டாள். தோகை மயில் பீலியை வருடுவது போல் இருக்கும் என்று இன்று வரை நம்பி இருந்தவள், சற்று சொரசொரப்பு இருக்கு என்று தடவிபார்த்துக்கொண்டே எண்ணினாள், காந்தியின் சிரிப்பைப் பார்த்துத் தன் சொந்த தாத்தா கொஞ்சி சிரிப்பது போல் சிரித்தாள், திருப்பித் திருப்பி முழுமையாக விழி விரித்துப் பார்த்தாள், அவள் முக பூரிப்பால் நிறைந்து கண் இமையை அடைக்க முடியாதபடி தசைகள் இறுகிக்கொண்டது.


மனம், கோணி நிறைய சில்லறைகளை வீசி எறிவதை போல, பகல் கனவுகளை, ஆசையின் விதைகளாய் விரித்து எறிந்தது. பஸ் ஏறி ஊரைவிட்டு ஓடிவிடலாமா? பேக்கரி சென்று எல்லா கேக்குகளையும் மொத்தமாய் ருசி பார்த்துவிடலாமா? அன்று ரோட்டண்ணா கடையில் பார்த்த கட் ஷூ வாங்கலாமா? அப்படியே இடுப்பு பாவாடையில் முடிந்து வைத்துவிடலாமா? ஏஜெண்டு எடுத்திடுவான் வேண்டாம் என்று நினைக்கும்போது, உடல் எல்லாம் நடுங்கி அவள் ஓடி அருகிலிருந்த அரச மரத்தின் பின் ஒளிந்துகொண்டாள்.


சுற்றி தனது தாய் என்று சொல்லிக்கொள்ளும் பெண்ணோ, அந்த ஏஜென்றோ இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டாள், உடல் பதைத்ததில் கண்கள் நீர் கட்டி கனத்திருந்தது. சட்டென்று ஒரு கை அவள் தோளில் பட, தண்டவாளம் அருகில் ஒரு நாள் நடந்தபோது, பின்னால் வேகமாக வந்த அதிவிரைவு வண்டி உரசியும் உரசாமலும் கடந்தபோது அடைந்த பீதி போல உறைந்து திரும்பினாள். அவளோடு பிச்சை எடுக்கும் கண் தெரியாத ஒரு சிறுவன் நின்றிருந்தான்.


“நீ தானா? பயந்திட்டேன் தெரியுமா”


என்று சொல்லிக்கொண்டே கையில் இருந்த ரூபாயை அவள்பின் தலை முடி சிக்கிற்க்கு உள்ளாக, பின்னலின் அடியில் நுளைத்து ஒழித்து வைத்தாள். சிறுவனைப் போகச் சொல்லிவிட்டு மரத்தடியில் அமர்ந்து என்ன செய்வது என்று சிந்தனையைத் தொடர்ந்தாள். பணத்தை தொலைத்தவர் எப்படியும் தேடி வருவார், அப்படி யாரவது தேடுவதை பார்த்தால் திரும்பக் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்து, பேருந்து நிலையத்தைச் சுற்றி ஒரு நோட்டமிட்டாள்.


பேருந்து நிலையம் வழக்கம்போலப் பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது. வாகனங்கள் உள் நுழைவதும், வெளியேறுவதும், வியாபாரிகள் வண்டி வண்டியாய் ஏறிப் பூ, பழம், பாப்கார்ன் என்று பலவித பொருட்களை நிற்கும் வண்டியில் ஏறி ஓடும் வண்டியில் இறங்கி விற்பதும், திரு நங்கையர் கல கல வென்று சிரித்துக்கொண்டு ஒரு நடத்துனரின் தோள்களைத் தடவிக்கொண்டு வாகனத்திற்குள் ஏறுவதும், பிச்சைகாரர்கள் பிச்சை எடுப்பதும், டீக்கடைகள், உணவகங்களில் ஆட்கள் பசியாறுவதும், சிலர் புகைப்பதும், சீருடையில் நடத்துனர், ஓட்டுனர், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் என்று அரசு இயந்திரத்தின் துருபிடித்த சக்கரத்ரை நகர்த்திக்கொண்டிருந்தனர். காகங்கள், நாய்கள், எலிகள், பெரிச்சாளிகள், எறும்புகள், ஈக்கள், கொசுக்கள், புழுக்கள், மாடுகள் என்று பேருந்து நிலையம் எப்போதும் போல எந்த வித மாற்றமும் இல்லாமல் இயங்கிக்கொண்டிருந்தது.


இன்னும் அமர்ந்திருந்தால் உதை விழும் என்று அறிந்து, பயணிகள் கூட்டத்தை நோக்கி நடந்தாள். போகும் வழி எல்லாம் யாரவது எதையாவது தேடுக்கிறார்களா? என்று பார்த்துக்கொண்டே நடந்தாள். கண்ணில் கண்ட மனிதர்களின் பயணத்தை, அவர்கள் வாழ்க்கையின் கதையைக் கற்பனையில் எண்ணிப்பார்த்தாள். தாத்தாக்கள் என்றால் நீ என் தொலைந்து போன பேர குழந்தை என்று தன்னை யாரவது சொல்லுவார்களா என்று நினைப்பாள், அவள் வயதிற்கு ஒத்த பிள்ளைகள் நிற்குமானால் அவர்கள் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்கள் அவள் அணிந்து நின்று பாத்தால் எப்படி இருக்கும் என்று எண்ணுவாள், ஆசிரியர்கள்போல யாரவது தென்பட்டால் பாடம் சொல்லித் தரமாட்டார்களா என்று ஏங்குவாள், அரசு அதிகாரிகளைக் கண்டால் அவர்களைப் போல ஆக வேண்டும் என்று எண்ணும்போதே இல்லை வேண்டாம் என்று முடிவு செய்வாள், அரசியல் தலைவர்கள் கூட்டம் கண்டால் ஒரு முறையாவது அவளும் இந்த நாட்டின் குடிமகள் தான் என்று அவர்கள் எண்ணுவார்களா? என எண்ணிக்கொள்வாள். அவளின் சிந்தனைகள் இந்த உலகில் தலைசிறந்த பேனாவின் முனை வழி வடிந்து காகிதத்தில் படிந்து காய்ந்த மகத்தான பல்லாயிரகணக்கான வார்த்தைகளைவிட அரிதானது. பெரும்பாலும் கண்களிலேயே மனிதர்களை எடை போட்டு விடுவாள்.


ஒவ்வொறு மனிதராகத் தேடி அலுத்து நேரம் கடந்தது தான் மிச்சம், யாரும் எதையும் தேடவுமில்லை அவளை ஒரு நபராகக் கணக்கு பண்ணவும் இல்லை. மாலை மஞ்சள் வெயில் கோணலாய் பேருந்து நிலையத்தில் விழத் துவங்கியிருந்தது. சில பேருந்து கண்ணாடியிலும், பேக்கரி பெட்டி கண்ணாடியிலும் பட்டுச் சூரிய ஒளி தங்கம் போல ஜொலித்துக்கொண்டிருந்தது. கலைந்து எழும்பி நின்ற அவள் தலை முடி ஓரங்களில் பழுப்பு மஞ்சள் நிறத்தில் ஒளி ஊடுருவி ஒரு வெளிச்ச வரியை உருவாக்கியிருந்தது. வெளிச்சத்தின் எதிரே நடப்பவர்கள் நிழல்போல் மாறி இருந்தார்கள், அவர்கள் நிழல் அவர்களைவிட பல மடங்கு நீளத்தில் தரையில் ஊர்ந்து சென்றது.


இனிமேலும் தொலைத்தவர் வருவார் எனும் நம்பிக்கை இல்லை, என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தவள் கண்ணில் தொலைவிலிருந்த கடவுள் உண்டியல் பட்டது. வேகமாக அதைப் பார்த்து ஓடினாள். உண்டியலின் அருகில் வரும்வரை அதில் பணத்தை போட்டுவிடுவது என்று முடிவு செய்திருந்தவளின் மனதில், சாமிக்குத் தர அது என் பணமில்லையே, நான் எப்படி முடிவு செய்ய முடியும் என்று எண்ணியபடி, அவள் கையிலிருந்த இரண்டு ரூபாய் நாணயத்தை உண்டியலில் போட்டாள். ஆனால் எதையும் வேண்டிக்கொள்ளவில்லை, சாமியிடம் அவள் என்றுமே எதையுமே கேட்டதில்லை, அவள் கேட்டாலும் சாமி தராது என்றே அவள் முடிவு செய்திருந்தாள். திரும்பிப் பண்ம் கிடந்த இடத்தின் அருகே இருந்த அரச மரத்தின் அடியில் வந்து அமர.


மூன்று காலில் ஒரு வயதான பெரியவர், இடது கையின் முட்டி மடிப்பில் ஒரு பையைத் தூக்கியபடி, அதே கையில் தடியை பிடித்துக்கொண்டு. வலது கையால் சூரிய ஒளியை மறைத்துக்கொண்டு தரையையே பார்த்தபடி, அடி அடியாய் எதையோ தேடிக்கொண்டே தள்ளாடியபடி நடந்து வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் அவர் பணத்தை தான் தேடுகிறார் என்று முடிவு செய்தாள். ஒருவேளை இல்லாமல் இருந்தால். கொஞ்சநேரம் நின்று பார்ப்போம், இல்லை பரவாயில்லை அவரிடமே குடுத்துவிடலாம் பாவம். இந்த வயதில் அவர் என்ன செய்வார்? என்று தனக்கு தானே பேசிக்கொண்டாள்.


பெரியவர் நடக்கவே முடியாமல், அரசமரத்திற்கு சற்று அருகே இருந்த கல் இருக்கையின் ஒரு ஓரத்தில் அமர்ந்து சாய்ந்தார், அவளும் மெதுவாக நடந்து அதே இருக்கையின் மறு ஓரத்தில் சென்று அமர்ந்தாள்.


“தாத்தா, எதையாவது தொலச்சிட்டியா?” என்றாள்.


“ம்” என்று மூக்கு வழி பதில் தந்தார்.


“என்ன?” என்றாள்.


அவர் எதுவும் பேசவில்லை அமைதியாகவே அமர்ந்திருந்தார்.


“தாத்தா, எங்க போறீங்க?”


எதுவும் பதிலில்லை, அவர் உடல் களைப்பால் கூனி மூச்சிரைத்துக்கொண்டிருந்தார், கண்ணில் வலிகளும், எண்ணங்களும் குளமாய் நிறைந்து வெளிவரத் தயாராக இருந்தது. எச்சில் இறக்கி தாகத்தை தணித்துக்கொண்டார். சிறிது நேர அமைதிக்குப் பிறகு தழுதழுத்த குரலில் அவர் மெதுவாக…


“இங்குக் குடி வெள்ளம் எங்க இருக்கு மோளே? என்று தமிழ் கலந்த மலையாளத்தில் கேட்டார். சிறிது நேரம் குழம்பிய அவள், அவர் தண்ணீர் குடிப்பதுபோல் தன் கட்டைவிரலை கைச்சூப்பும் பிள்ளைபோல் சைகை காட்டியதும். தெய்வம் ஆசீர்வாத வரம் தருவதுபோல் அவள் ஐந்து விரல்களையும் இணைத்து இருங்க என்று சைகை செய்து விட்டு. வெடுக்கென்று ஓடிக் கடையில் தன் கையிலிருந்த சில்லறைகளைக் கொடுத்து ஒரு டீ வாங்கி வந்தாள்.


அவருக்குத் தான் பசியாய் இருப்பது அவளுக்கு எப்படி தெரிந்தது என்ற ஆச்சரியம் வந்து முடிவதற்குள் பசியின் ஓலம் காதையும் மனதையும் அடைத்து வேகமாக டீயை வாங்கி சூடாற்ற இடம் கொடாமல் முதல் வாய் குடித்தார்.


இப்போது தான் கவனித்தார் அவள் கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட் இருந்தது. குவளையை அருகில் வைத்துவிட்டு பிஸ்கட்டை பிரித்துச் சாப்பிட்டார்.


“போதுமா தாத்தா?” என்றாள்


என்கிட்ட பைசா இல்லா என்று அடுத்த பிஸ்கட்டை எடுக்கப் போன கையின் வேகத்தைக் குறைத்துக்கொண்டே சொன்னார்.


“தெரியும் தாத்தா” என்றாள்.


“என்கிட்ட இருந்த 500 ரூவா நியான் எவடயோ போட்டாச்சு. ஊருக்குப் போற பஸ்ஸுல இருந்து இறக்கி விட்டுட்டேன். 5கிலோமீட்டர் நடந்நு இவட எத்தி. இங்க தேடி பாத்தாச்சு, காற்று கொண்டு போயாச்சு” என்று விசும்பினார்.


“இனி உன் கூட பிச்சைஎடுக்க என்னயும் கூட்டிட்டா சகாயமாக்கும்” என்றார்.


அடுத்த கணமே அவள் தன் தலை முடியில் ஒளித்து வைத்திருந்த பணத்தை எடுத்து அவரிடம் நீட்டினாள்.


“உன் காசுதான் தாத்தா” என்றாள். அவருக்கு அதை மனதில் நம்ப சில வினாடிகள் பிடித்தது.


“என்றதானோ? என்ற பகவானே?” என்று உடல் நரம்பெல்லாம் மகிழ்ச்சியின் உச்சம் பொங்க அதைத் தன் கரத்தில் வாங்கிக்கொண்டார்.


அவள் தன்னை ஏமாற்றி இருக்கலாம், செலவு செய்திருக்கலாம் ஏன் இவ்வளவு நேரம் காத்திருந்து தன்னிடம் தந்தாள் என்று அவர் எண்ணங்களில் சில வினாடிகள் புதைந்தார். அவர் பணத்தில் டீப்பிஸ்கட் வாங்கியிருக்கலாமே? சில்லறை மாற்றிக் கொடுத்து விடலாம். அவருக்கு முன் நின்றிருந்த சிறுமியின் கரம் பிடித்து எதையுமே பேசாமல், தன் கண்ணீர் உதிர்த்து நன்றி சொன்னார்.


“அழாத தாத்தா? அதான் காசு கிடச்சிடிச்சில்ல” என்றாள். அவர் “ம்” என்று சொல்லிவிட்டு அமைதியாய் இருந்தார்.


அவளும் எதுவும் பேசாமல் சில வினாடிகள் அங்கு நின்றுவிட்டு நகர்ந்து சென்று அரச மரத்தடியில் சென்று அமர்ந்தாள். கையில் மீதமிருந்த நாணயத்தின் இரு பக்கங்களையும் பார்த்தவாறே இன்று அடி வாங்குவது உறுதி என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே ஏஜென்டும் அவளின் தாயெனச் சொல்லிக்கொள்ளும் பெண்ணும் வந்து அவளிடம் மிச்சமிருந்த நாணயத்தைப் பார்த்து நரம்பில்லா வார்த்தைகளால் திட்டி அடித்து அவளை, உபயோகமற்ற கிழிந்த பாலித்தீன் நெகிழிப் பையென உறுதி செய்தனர். பெரியவராவது ஆறுதல் சொல்ல வருவாரா என்று கல் இருக்கையின் திசையைப் பார்த்தாள். யாரும் அங்கில்லை. அடுத்தகணமே மீண்டும் கிழிந்த அவள் பாவடையை இணைத்துப்பிடித்து ஊக்கால் பிணைத்துவிட்டு, தன்மேல் இருந்த மண்ணை தட்டி விட்டாள்.


காற்றில் மண் பறந்து சென்றது போல நொடியில் அவள் சோகமும் பறந்தது. எதுவுமே இல்லாத அவளுக்குச் சோகத்தையோ, அல்லது பெருமையையோ வைத்துக்கொள்ளத் தெரியுமா என்ன?


-லி

writerlivin@gmail.com

average rating is 4.5 out of 5, based on 150 votes, People love it
Comments

Share Your ThoughtsBe the first to write a comment.
bottom of page