top of page

டக்கர்

காலை 7:50 313b திருவரம்பு - நாகர்கோவில் வழி தட அரசுபேருந்து, திருவரம்பு பேருந்து நிறுத்தத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. கடைசி நிறுத்தமான திருவரம்பு சந்திப்பிற்கு முன் இருக்கும் கடைசி வளைவில் பேருந்து திரும்பும் சத்தமும் அதன் கார்ன் சத்தமும் கேட்டதும், அதுவரை சாவகாசமாக நின்றிருந்த அந்த டக்கர் புறப்படத் தயாரானது. இயேசு படம், மசூதி படம், ஐயப்பன் படங்கள் கண்ணாடியில் ஒட்டபட்டிருந்தது. அந்தப் படங்களுக்கு முன்பாகச் சைக்கிள் அகர்பத்தி ஒன்று விழும்பின் கனலில் புகையை காற்றில் ஓவியமாக வரைந்துகொண்டிருந்தது. பின்னால் பார்க்கும் கண்ணாடியில், குதிக்கும்போது கீச்சுஒலி வரும் ஒரு கிழி பொம்மை தொங்கவிடப்பட்டிருந்தது.


கன்னியாகுமரி மாவட்டதில் சில பகுதிகளில் இந்த டக்கர் பயணத்தைக் காண முடியும் நாகக்கோடு - திருவரம்பு ஊர்களை இணைக்கும் ரோட்டிற்கு சொந்தமான டக்கர் பயணம் உண்மையில் ஒரு வித்தியாசமான ஒரு பயணம் என்றே சொல்லலாம். இப்பொதும் இந்த டக்கர் பயணம் உண்டு. சேர் ஆட்டோவைப் போல் ஆட்களை ஏற்றி வசூல் செய்வது தான் இதன் தொழில் அம்சம், இது ஜீப்பை போன்ற வடிவத்தில் ஆனால் வேறு விதமாக உள்ளூரில் வடிவமைக்கப்பட்டு திருவரம்பு சந்திப்பிலிருந்து நாகக்கோடு சந்திப்பிற்கும் மேலோட்டும் கீழோட்டும் சண்டிங் அடிக்கிற தேர் அது. வண்டியின் பெயர் டக்கர். இப்போது அருமனை வரை இந்தப் பயணம், தூரம் நீட்டப்பட்டிருந்தது.


டக்கர் பல சிற்றூர்களை இணைத்துப் பயணப்படும். சிறுவர்களுக்கு டக்கர் ஓட்டும் அண்ணன்களைக் கண்டாலே ஒரு தனி குதுகலம். எப்படியாவது பழக்கபடுத்தி அவர் அருகில் அமர்ந்து ஆவர் ஓட்டும் அழகை பார்ப்பதே கனவாக இருக்கும். டக்கர், ஓட்டுறாரு இல்ல வச்சிருக்கிறார் என்றால் யோசிக்காமல் பெண் குடுத்த நாட்களும் உண்டு, ஜெ. ஹேமசந்திரன் அவர்கள் நான்காவது முறை சட்டமன்ற உறுப்பினரான காலம். சமூகம் மெல்ல மெல்ல கல்வி அறிவும், சமூக சமனிலையிலும் முன்னேறிக்கொண்டிருந்தார்கள். வியாபாரமும், தொழிலும் மேம்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது இருந்த தொழில்களில் டக்கரும், பிளசரும் (Ambassador taxi) நல்ல முதலீட்டு தொழிலாகப் பார்க்கப்பட்டது. அந்தப் பகுதியில் போலீஸ் வாகனமாகக் கூட டக்கர் தான் உபயோகத்தில் இருந்தது.


313B திருவரம்பு ஜங்சன் வந்து ரவுண்டானரை சுற்ற ஆரம்பித்ததும், புறப்படத் தாயார் நிலையில் இருந்தது அந்த டக்கர், இரு முறை கார்ன் செய்தார் ஒட்டுனர் சுந்தர். நாவகோடு நாவகோடு என்று வட்டார மொழியில் கிளி என்று அழைக்கபடும் உதவியாள் கூவிக்கொண்டிருந்தார். கிளி என்பது அவர் பெயர் அல்ல அந்த வேலைக்கான பெயர். டிரைவருக்கு உதவியாள் கிளீனர் பதவியின் பெயர். பஸ் திரும்பி நிற்பதற்குள் டக்கரில் முன்னமே ஏறி அமர்ந்திருந்த ஆட்கள் இறங்கிவிட கூடாது என்பதற்காக வண்டியை மெதுவாய் முன் நகர்த்துவது போல் ஆக்சிலேட்டரை அழுத்திப் பாவனை செய்துகொண்டிருந்தார் ஓட்டுனர். பஸ் நிறுத்தப்பட்ட அடுத்த நொடி வண்டி அந்த டிரிப்பை துவங்கியது. பஸ்சிலிருந்து ஒரு இளம் வயது கல்லூரி மாணவன் இறங்கி ஓடி வந்து. டக்கரில் தொங்கி ஏறிப் பின் இருக்கையில் இடதுபுறமாக அமர்ந்தான். ஆள் பார்க்கப் புதிதாக இருக்கானே என்று கண்ணாடியில் பார்த்துக்கொண்டார் டிரைவர் சுந்தர்.


வண்டிக்குள் அந்தப் பையனைத் தவிர இருவர் அமர்ந்திருந்தனர். முன் சீட்டில் ஒரு பாலிஸ்ட்டர் வேட்டிசட்டை அணிந்து தலையில் ஒரு வெள்ளை துண்டால் முண்டாசு கட்டியிருந்த பெரியவர் முத்தையன் ஒரு நீட்டமான கறுப்பு குடையை கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தார். நடு சீட் பகுதியில் நாகக்கோடு சந்திப்பில் இருந்த மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருந்த செவிலியர் ராணி அமர்ந்திருந்தார்கள். பத்தியின் வாசம் வண்டியில் நிரம்பி இருந்தது.


கிளி, “போட்டுப் போட்டு” என்று பின்னால் தொங்கியபடி வண்டியின் மேல் பகுதியில் டப் டப் என்று இரண்டு தட்டு தட்ட, பஸ் நடத்துனரின் இரு விசில் சத்தத்திற்கு நிகராய் அது ஒலித்தது.


(அந்தப் பகுதிக்கே உரித்தான மலையாளம் கலந்த தமிழில்).


ராணி: “இண்ணு நாரோயிலு வண்டி பிந்திருக்குனு துவானுது"


முத்தையன்: “ஒஅ டேய் பிள்ளே, இன்னு நேரம் பிந்தியிருக்கு"


சுந்தர் ஓட்டுனர்: “இட்டேலி ரேசன் கடைக்ககிட்ட ராத்திரி பெஞ்ச மழையில மரம் முறிஞ்சி கிடக்காம், அதுகொண்டு நேரமாயிகாணும். இந்த வண்டி வரலேங்கி நான் வண்டிய எடுக்கண்டாம்னு நினச்சேன் கேட்டியளா. இப்போ செரியாயிருக்கும்".


என்று சொல்லிக்கொண்டே வண்டியில் இருந்த கேசட் பிளேயரை இயக்கினார். வண்டியின் இருபக்கமிருந்த டிவீட்டரிலும், பின்னால் இருந்த பாக்ஸிலும் சத்தமாகக் காதலுக்கு மரியாதை படத்தின் ஆனந்த குயிலின் பாட்டு பாதியிலிருந்து ஒலித்தது.


வண்டி கொல்வேல் டி ரோடு முக்கு கடந்ததும் ஒருவர் ஒரு சின்ன சாக்கு மூட்டையுடன், வண்டியை நிறுத்தும் படி கையை நீட்டி நின்றிருந்தார். டிரைவர் அவர் முன்னால் ஏறிக்கொண்டால் கூட்டமாக இருப்பது போல் வெளியே தெரியும் என்பதாலும், கையில் சாக்கு மூட்டை இருந்ததால், வண்டியை அவரைத் தாண்டிச் சற்று முன்பாக நிறுத்தினார். கிழி வண்டி வேகத்தைக் குறைக்கும் போதே தாவி இறங்கி வேகமாக மூட்டையை வாங்கிபின் பகுதியில் வைத்துக் கதவைத் திறந்து அவரை வேகமாக ஏற,


“பெட்டன்னு ஏறனும்" என்று துரிதப்படுத்தினான்.


அவர் குனிந்து ஏறி அந்தக் கல்லூரி பையனின் எதிரே அமர்ந்ததும், “போட்டுப் போட்டு” என்று கதவை அடைத்து, வண்டி நகர்ந்ததும் ஓடி ஏறி ஸ்டெப்பினி டயரில் அமர்ந்தான்.


ஏறினவர் உள்ளே வந்ததும், “இய்யாளு இங்கயா இருப்பு? சுகம்தேனா?" என்று முன் சீட்டில் இருந்த பெரியவரிடம் கேட்டார்.

“ஓஅ டேய் ராஜுவே” என்று இழுத்து பதில் சொன்னார் முத்தையன்.


இப்போது சாக்கில் என்ன இருக்கு என்று கேட்பார் என்று ராஜூவும், எங்க போகிறோம் என்று கேட்பான் என்று முத்தையனும் மனதில் நினைத்துக்கொண்டனர்.


ராஜூ கேட்க வேண்டாம் என்று அமைதியாகவே இருந்தான். முத்தையன் பெரியவர் என்பதால். “சாக்குல என்னடேய்” என்றார்.


ராஜூ: “எள்ளுபோல நல்லமொளவு, சந்தைக்குக் கொண்டு போறேன்”. எங்க போறீங்கணு கேட்டா போற காரியம் கெட்டுவிடும் என்று. “ தூரம்மா யாத்திர”? என்று கேட்டார்.


முத்தையன்: “மொவுளுக்க வீட்டுக்குப் போறேன். வயிட்டு வருவேன் என்றார்”.


டக்கரில் பாடிக்கொண்டிருந்த பாட்டு முடிந்து அடுத்த பாட்டிற்கு மாறியது. குருவிக்காடு கோவிலுக்கு முன்பிருந்து சேவியர் ஏறினார். முன் சீட்டில் பெரியவருக்கு அருகில் அமர்ந்துகொண்டார். சற்று தூரம் தள்ளித் திருவரம்பு அரசுப் பள்ளி பேருந்து நிறுத்தத்திலிருந்து, இரண்டு கல்லூரி பெண்கள் ஏறிக்கொண்டனர். அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த அந்தப் பையன் முகத்தில் ஒரு பரவசம். அவளுக்காகவே காத்திருந்தவன் போல, திறந்திருந்த தன் சட்டை காலரை ஒன்று சேர்த்துவிட்டு, தலையைக் கையால் கோதிக்கொண்டான். அவள் எட்டுமணி டக்கரில் தான் தினமும் வருகிறாள் என்று அறிந்து. அவளைப் பார்ப்பதற்காவே முன்னமே வண்டியில் ஏறி வந்திருந்தான் விஜின்.


“ஓய் பஸ்ஸு வருதுன்ணு தோணுது, வெரட்டி போட்டு” என்று கிளி சொன்னதும், டக்கர் விரைவாகக் கிளம்பியது.


விஜின் அமர்ந்திருப்பதை கண நேரத்தில் அறிந்துகொண்டாள் ஷைனியும் அவள் தோழியும். ஷைனி விஜினின் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறாள். அவனைப் பார்த்துச் சற்று அதிர்ந்தாள். ஆனாலும் “எவன் வண்டியில இருந்தா எனக்கென்ன” என்று மனதில் நினைத்துக்கிண்டு அவள் நெற்றியில் கையை வைத்து அலட்சியமாய் தேய்த்தாள். டிரைவர் அதைக் கண்ணாடியில் கவனித்தார். விஜின் இப்போது அவன் சட்டை பையில் இருந்த கடிதத்தை அவளிடம் தர மனதில் திட்டமிடலானான்.


டக்கர் சற்று வேகமாகவே வழியில் சில நபர்களை ஏற்றிக்கொண்டு, பஸ் முந்திச் செல்லாதபடி சானல் முக்கு வந்து சேர்ந்தது. வண்டி கூட்டமாக இருக்கிறதா இல்லையா எனக் கண்ணாடி வழி ஊடுருவிப் பார்த்து ஆட்களை எண்ணிக்கொண்டார்கள் சிலர். வண்டியின் எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் நிரம்பி இருந்தனர்.


டிரைவர் தன் அருகிருந்த பெரியவரை. “ஆளே இஞ்சோட்டு சேந்து இருங்கா” என்று வண்டியின் கியர் கம்பிக்கு இருபுறமும் கால் வரும் படியாக அவரோடு சேர்த்தபடி அமரசெய்தார்.


அவரும் இருக்கையின் ஓரத்திற்கு நகர்ந்தார். முன் சீட்டில் இரண்டு பேர் சாய்வாகவும், இருவர் முன் தள்ளியும் அமர்ந்தபோது ஒருவர் வந்து இடது புறம் இருக்கையின் ஒரத்தில் இருந்த தடை கம்பியில் ஏறி ஆமர்ந்தார். அதேபோல நடு இருக்கையில் இருந்த பெண்களிடமும்,


“அக்கோவ் உள்ள மாறி இருங்கா, பிள்ளையளே மின்னொட்டும் பிறமோட்டும் இருங்கா”

என்று சொல்லி ஒருவருக்கான இருக்கையைத் தயார் செய்தார். ஒருவர் அமர இரண்டு மாணவிகளும், ஒரு இளம் பெண்ணும் நடுவில் ஏறித் தங்கள் தலையைக் குனிந்து, வில் போல வளைந்து நின்றனர். பஸ் மாம்பள்ளிவிளையில் வருகிறது என்பதை கார்ன் மூலம் அறிந்துகொண்டனர் டிரைவரும், கிளியும்.


சுந்தர் கிளியிடம் “பெல்ல ஆழு ஏறியாச்சா?” எனச் சீறினார். உடனே கிளி ஆண்களை வேகமாக ஏறும் படி அவசரபடுத்தினான். ஆண்களும், இளைஞர்களும் பின்னால் இருந்த டயரில் ஒருவர் அமர, பம்பர் மற்றும் அதில் இணைத்திருந்த இரும்பு படியில் ஏறித் தொங்கி நின்றனர்.


கிளி, “போட்டுப் போட்டு என்று சொல்லிக்கொண்டே வண்டியின் பக்கவாட்டில் இரண்டு தட்டு தட்டி. பம்பரின் ஓரத்தில் இருந்த இரண்டு விரல் கன இடத்தில். தன் முன்னங்காலை பதித்து தொங்கினான். பேருந்து, பஸ்டாப் வருவதற்குள் டக்கர் வேகமாகப் பறந்தது.


முடிப்பெரை அம்மன் கோவில் காணிக்கைபெட்டி அருகில் ஒருவர் கையை நீட்ட, இடமே இல்லாத அந்த டக்கரில் எங்காவது அவரை ஏற்றி விட முடியுமா எனச் சுற்றி சுற்றி பார்த்தார் டிரைவர். சட்டென்று நியபகம் வர, அவரைத் தன் அருகில் வரக் கைகாட்டி அழைத்து அமரச் சொன்னார். அவர் டிரைவருக்கு வலது புறம் வெளியே ஒரு காலை மடக்கி, ஒரு கையை டிரைவர் சீட்டில் பொருத்தப்பட்டிருத கம்பியில் பிடித்து, குத்தவச்சு அமருவது போல வண்டியின் ஓரத்தில் தொங்குவது போல் அமர்ந்தார்.


வண்டியில் பாட்டு கேசட்டில் ஒரு புறம் ஓடி முடிந்ததும், அதை எடுத்துத் திருப்பி உள் நுழைத்தார். விஜின் இப்போது எப்படியாவது அவளிடம் கடிதம் கொடுத்துவிட வேண்டும் என்று யோசித்தான். யாரும் பார்க்காமல் அதைச் செய்வது மிகவும் கடினம். ஒருவேளை அவள் எதிர்வினையாற்றினால் ஊர்காரர்கள் நடுவில் சிக்கி என்னவேணுமானலும் நடக்கலாம் என்று ஒரு வித படப்படப்புடன் காணப்பட்டான். ஊர்கார்கள் மாற்றி மாற்றிக் கதைகள் பேசிக்கொண்டிருந்தனர். இட்டகவேலி ரேசன் கடையிலிருந்து ஒருவர் பக்கவாட்டில் ஏறித் தொங்கி நின்றார். டக்கர் பாரத்தை சுமக்க முடியாத கழுதை போல அமிழ்ந்து ஒரு பக்கம் சாய்ந்து போய்க்கொண்டிருந்தது.


இதற்கு மேல் வண்டியில் யாரையும் ஏற்ற முடியாது. உட்புறத்திலும், வெளியிலும் ஆட்கள் நிரம்பிவிட்டார்கள். ஒருவேளை இடம் இருந்திருந்தாலும் இதற்கு மேல் உள்ள ஊர்களில் மக்கள் வண்டிக்குக் காத்திருப்பதில்லை. மக்கள் நடந்தே நகக்கோடு செல்வதும், வருவதும் வழக்கம். மழை காரணமாக ரோட்டு பள்ளங்களில் தண்னீர் நிரம்பி நின்றதால் டக்கரை மெதுவாகத் தான் இயக்கமுடிந்தது. உள்ளிருந்த பெரியவர்,


“மரம் முறிஞ்சது என்ன ஆச்சு” என்று இட்டகவேலியில் ஏறிய நபரிடம் விசாரித்தார்.

“அது காலத்தே மரம்வெட்டுகாறா வந்து வெட்டி எடுத்துண்டு போச்சுனும். லையினு கம்பி அறுந்து கிடக்கு, தாயோளிய இனி எப்போ செரி பண்ணுவுனுமோ. ரோடு எல்லாம் தொளி பொதைஞ்சு கிடக்கு, கள்ளிய வெட்டிச் சாரின இடத்துக்கு ஒரு நாளும் விடிவு காலம் வராது”


என்று அங்கலாயித்துக் கொண்டிருந்தார். வண்டியை இட்டகவேலி அரசுப் பள்ளிக்கூடம் தாண்டிக் குளமாக நிரம்பியிருந்த தண்ணீரில் எங்கும் சிக்கிக்கொள்ளாதபடி மெதுவாக வளைத்து லவகமாக ஓட்டிக்கொண்டிருந்தார் டிரைவர்.


“இந்தப் பய கொஞ்ச நாளா என்ன பாக்கியான் பாத்துக்க, எனக்குப் பிடிச்சவே இல்ல, என்ன செய்யேதுன்ணும் தெரியல. இன்ணு திருவரம்பிலேயே வண்டியில ஏறி வந்திருக்கியான்” என்று தோழியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் ஷைனி.


“நல்லமொளவு, நல்ல வெல உண்டா? மழ சமயம் எப்படி காய வைக்கிதியா? பழையது போல மொளவு பெருசா வரல்ல இல்லியா?” என்று நல்லமிளகு சாக்கு பெரியவரிடம் பேசிக்கொண்டிரிந்தார் ஒருவர்.


லேய் கால கொறய அங்கோட்டு மாற்றி வை, இஞ்ச நிக்கமுடியல” என்று தொங்கிக்கொண்டிருந்த பையன் கேட்டுக்கொண்டான்.


வெள்ளசாரி தொளி ஆவுமோ என்னவோ, இன்ணு நேரம் பிந்திப்போச்சு அடுத்த மழைக்கமின்ன பெய்சேந்தாமதி என்று செவிலியர் ராணி அக்கா மனதில் நினைத்துக்கொண்டாள்.


ஸ்டீபனுக்கு அருகில் இருந்த வெள்ளை ஏமான், அவருக்கு அருகில் இருந்த பாலசிடம்,


“நம்மட வெளையிலு தேங்கா பறிக்கான் சமயமாயி, பின்னப் பில்லும் பறைக்கணும் மற்றே அய்யப்பனில்லே அவனே நியான் விளிச்சுன்னு பறையனும்”. என்று மலையாளத்தில் சொல்லிக்கொண்டு மீண்டும் தன் முகத்தை விறைப்பாக வைத்துக்கொண்டார்.


“செரி ஏமானே” என்றார் பாலிஸ்.


டக்கரின் உள்ளேயும் வெளியேயும் எல்லா சாதி, மத மக்களும், பேதங்கள் இல்லாமல் கதைகளைப் பரிமாறிக்கொண்டு, அந்தப் பயணத்தில் இணைந்திருந்தார்கள். டக்கர் சேரில் இறங்கி மழை ஓய்ந்த வாசமும், அணைந்து கொண்டிருந்த பத்தியின் வாசமும், ஏமானின் சென்று வாசமும், நல்லமொளவும் அதைக் கட்டி வைத்திருந்த சாக்கின் வாசமும், பலர் சோப்பின் வாசமும், பெண்கள் தலையிலிருந்த, ரோஜா, மல்லி, கனகாம்பரப்பூவின் வசமும், வியர்வையும், மழையில் காயாத துணியின் வாசமும், தேங்காய் எண்ணையும், காச்சிய எண்ணை வாசமும், காயத்திரிமேனி எண்ணை வாசமும், டக்கர் சீட்டின் சவுரியின் வாசமும் நிரம்பி நிறைந்திருந்தது.


இப்போது கிளி பின்கதவில் திரும்பி வெளிப்புறம் பார்த்து அமர்ந்து கொண்டு,


“பைசா எடுங்க, பைசா எடுங்க என்றான். சில்லற இல்ல எல்லாரும் சில்லறயா தாருங்கா” என்றான்.


பின் சீட்டில் இருந்தவர்கள் முதலில் ஆளுக்கு இரண்டு ரூபாயை அவனிடம் தந்தார்கள். சில பெண்கள் கொடுக்கமுடிந்தவர்கள் கொடுத்தார்கள். நின்று கொண்டிருந்தவர்கள் பையிலிருந்து எடுக்கமுடியாமல் போய்ச் சேர்ந்த பிறகு தரலாம் என்று நின்றிருந்தனர். முன் சீட்டில் இருந்தவர்கள் டிரைவரிடம் தந்தார்கள்.


வண்டி நாகக்கோடு அந்தோணியார் ஆலயம் தாண்டும்போது. 313b பேருந்து டக்கரை முந்திப் போனது. டக்கர் மெதுவாக இரண்டாம் கியரில் ஏற்றம் ஏறத்துவங்கியது, பாதி வந்ததும் முதல் கியர் மாற்ற வேகமாகக் கியர் கம்பியைப் பிடித்துப் பின்னுக்கு தள்ள, பெரியவர் வைதிருந்த குடையில் இடித்து அரை நொடி தாமதமானதால், வண்டி நிற்பதுபோல் நின்று ஒரு உந்துதலுடன் மெல்ல மேல் நோக்கி நகர்ந்தது. வளைவுகள் தாண்டி, நாகக்கோடு ஜங்சனில் வந்து சேர்ந்தது.


வண்டி நின்ற நொடியில் ஆட்கள் இறங்கும் அவசரத்தில் இருக்க விஜின், ஷைனியை மெல்ல அவளுக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் அழைத்தான். அவன் கடிதத்தைக் கையில் எடுக்க அவள் திரும்பிப் பார்க்காமல் வேகமாக இறங்கி சென்றுவிட்டாள். ஏமாற்றத்துடன் வண்டியிலிருந்து கடைசியாக இறங்கினான் விஜின். டிரைவர் சுந்தர் அவனை அழைத்து,


“லேய் மக்கா இது செரியில்லனா, பிள்ளியளுக்கு இஷ்ட்டம் இல்லேங்கி இப்படி பெறமேண்டு நடக்கப்பிடாது. இனி திருவரம்பில உன்ன பாத்தனேங்கி அம்மயாண அடி விழுமே. பைசா குடுத்தியா? போ, போ” என்று பேசும் பாவனையிலேயே மிரட்டி அனுப்பினார்.


எல்லாரிடமும் வாங்கிக்கொண்ட சில்லறைகளைப் பணப்பெட்டியில் இட்டு, தனக்கு அருகிலிருந்த ஒரு டிராயர் கதவைத் திறந்து உள்ளே வைத்தார். டக்கரை நகர்த்தி அடுத்த டக்கருகளுக்கான வரிசையில் சென்று நிறுத்தினார். அடுத்த டக்கர் திருவரம்பு நோக்கிச் செல்லத் தயாராக இருந்தது.


டக்கர் அது வெறும் வண்டி பயணம் அல்ல, அந்த ஊர்களின் அன்றாடத்தின் தள்ளமுடியாத ஒரு வரலாற்று நாயகன்.




-லி


writerlivin@gmail.com

average rating is 4.5 out of 5, based on 150 votes, People love it
Comments

Share Your ThoughtsBe the first to write a comment.
bottom of page