top of page

கைவிலங்கு

கைவிலங்குகள் ஆணியில் தொங்கியபடி ஒன்றோடு ஒன்று சத்தமில்லாமல் சிறைச்சாலை அறையில் மெளனப் பேச்சில் பேசிக் கொண்டிருந்தன. வேலைக்குச் செல்லும்போது பிரிவின் விடை கூறுதலை அவைகள் ஒருவருக்கொருவர் காதுகளில் சொல்லிக்கொண்டன. அறை கதவருகே பூட்ஸ் சத்தம் கேட்டதும் இரண்டுமே பேச்சை நிறுத்திக்கொண்டன.


தலைமை ஏட்டு ரவீந்திரன். சராசரி உயரம், தடிமனான உடல். மேல் வழுக்கைத் தலை. வட்டமான, வீங்கிய முகம். கனமான நரைத்த மீசை, கிருதாவில். மிச்சமிருக்கும் உடல் ஆரோக்கியத்துக்கான அடையாளமாக சில கருப்பு முடி. கழுத்தில் ஒரு வெட்டுக்காயம். அதைத் தடவிக்கொண்டே உள்ளே நுழைந்தார். சாதுவான மனிதனின் தோற்றம். முகத்தில் உழைப்பின் பிசுபிசுப்பு நிழலிட்டிருந்தது. கைகடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு எதையோ ஆலோசித்து, தனக்குள் முடிவு செய்தார்.


வெளியிலிருந்து, “ஏட்டு, வேகமா வா யா, என்ன பிரசாதம் வாங்கவா போறோம்? எல்லாம் ரெடியா? வண்டி எடுக்க சொல்லிட்டியா?” என அதிகாரியின் குரல் மட்டும் அறைக்குள் வந்தது. உதடு கடித்துக்கொண்டு, வாய்க்குள்ளேயே எதையோ முணுமுணுத்துக்கொண்டார்.


விலங்குகள் சிரித்தன. ஏட்டு ரவீந்திரன், சுருக்கமாக ரவி, தன் காலை எட்டி மேலிருந்த இரண்டு கைவிலங்குகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு, தான் எடுக்கும் போது தொப்பையிலிருந்து கீழே இறங்கிய கால்சட்டையை மீண்டும் தொப்பை மேட்டில் மூச்சு அழுத்தத்தில் நிறுத்தினார். பிறகு, மீண்டும் கழுத்து வெட்டுக் காயத்தை தடவிக்கொண்டு வெளியேறினார்.


மேலே தனியாக தொங்கிக்கொண்டிருந்த கைவிலங்கு பெருமூச்சு விட்டது. ஏட்டு ரவி வெளியே வரவும், வாகனம் ஓட்டும் நந்தன் காவல் ஆய்வாளரை சந்தித்து வாகனம் தயார் என சொல்ல உள்ளே வந்தார். ரவி அவரை குறுக்கிட்டு, "நந்தா, இண்ணைக்கு குறுக்கு ரோடு தானே?" "ஆமா." "திரும்பும்போது நம்ம முக்கு டீ கடையில நிப்பாட்டு. காலையில சாப்பிடல. ஏதாவது வாங்கிக்கணும். நான் போய் அந்த மணியை கூட்டிட்டு வாறேன்."


நந்தன்: அவன் கதைக்கு ரெண்டுல ஒண்ணு இண்ணைக்கு தெரிஞ்சிடும். ரவி பதில் சொல்லவில்லை “ம்" என மட்டும் சொல்லி கைவிலங்கை மேலும் கீழுமாக உதறிக்கொண்டு வேகமாக சிறை கைதிகளின் அறையை பார்த்து நடந்தார்.


சிறை குளிர்ந்திருந்தது, சிறையின் நேரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக நகர்ந்தது. பூட்ஸ் கால்களின் சத்தமும், அடக்கும் குரல்களும், முணுமுணுப்புகள். புறாச் சிறகுகளின் சுதந்திரமும் என நொடிகள் சொட்டும் நீர் துளிகள் போல விழுந்து காலத்தை கரைத்துக்கொண்டிருந்தது. 


மணி கைதி அறையில், கால் மேல் காலிட்டு திண்டில் படுத்திருந்தான். அவனுக்குள் எந்த கவலையும் இருக்கவில்லை. கோர்ட்டில் அவனுக்கு இன்று ஜாமீன் வர வாய்புண்டு என்று வக்கீல் சொல்லியிருந்தார். மணி சின்ன வயசு, காக்கி மொழியில் சிறுவன் என்கிற பட்டம் மாறி இரண்டு வருடங்கள் கடந்திருந்தது. அவன் சாதிக்கு அவன் தான் காவல்காரன் என்று நம்பவைக்கப்பட்டிருந்தான். சாதி, கட்சி கூட்டங்களுக்கு முன் நின்று கோசமிடுவதும், கொடிகள் கட்டுவது, வேறு சக ஆட்களை வீம்புக்கு சண்டைக்கு அழைப்பது, சட்டையை தூக்கிவிட்டு ஊரை சுற்றுவது, சாதி கொடிக்கு ஒன்று என்றாலே தீக்குளிக்கவும் தயராக அவன் மனதை மழுங்க செய்திருந்தார்கள். கத்தி வைத்து தன் வலிமையை உறுதி செய்து தன்னை பெருமையாக காட்டிக்கொள்வதாக நினைத்துக்கொண்டிருந்த அறிவு வளராத மடையன். மணி அவன் துடிதுடிப்புக்கு அறியப்பட்டதால் அவனை முன் வரிசையில் நிறுத்தி ஆதாயம் பார்த்தனர் அந்த சாதிக்காரர்கள். அவனால் ஏதாவது நடக்க வேண்டும் என்றால் காசு கொடுப்பதும், பின் அவனை ஒரு நாயை விட கேவலமாக நடத்துவதும் கூட அவனுக்கு அறிந்து கொள்ள அறிவில்லை. கெத்து என்கிற ஒற்றை வார்த்தையின் பெருமையை இரத்தத்தில் கலந்து கொண்டு போதையோடு போதையாக அடிமையாக இருந்தான். திரையில் அவனை கவருவதற்காகவே அவன் உடல் மொழியில் உருவாக்கப்பட்ட, கதாநாயகனின் அறிமுக பாடல்களை பாடிக்கொண்டும் அது போல தன்னை கற்பனை செய்துகொண்டும் நிழல் வாழ்க்கையை பிரிக்க தெரியாமல் தினமும் சோறும், குடியும், சாதியும் சண்டையும் என ஊருக்குள் ஒரு கேடுகெட்ட ஒரு தற்குறி அவன்.


ஆனாலும் அவனுள் ஒரு நல்லவன் இருந்ததை அவன் கூட அறிந்திருக்கவில்லை, ஊருக்குள் யார் என்ன கேட்டாலும் முதல் ஆளாக உதவுவான். வயதானவர்களுக்கு அவனே ஆதரவாளி, கதை பேசுவான் அவர் அவர் தனிமையை சற்று விலக்கி நிறுத்துவான், முடியாதவர்கள் ஏதாவது வாங்கிவரச் சொன்னால் மறுபேச்சற்று செய்துவிடுவான். அவனிடம் இருக்கும் பட்சத்தில் அவன் கைகள் இல்லாதவர்களிடம் பணம் கூட வாங்குவதில்லை. சாவு வீடு என்றால் இறுதி சடங்கு வரை நின்று வேலை செய்து, சுடுகாட்டில் பிணம் எரிந்து முடியும் வரையோ இல்லை கல்லறை கடைசி மண் இட்டு மூடி மேலே ஓலை சொருகும் வரையோ நின்று முடித்துவிட்டுதான் செல்வான். பலரும் அவன் குவாட்டருக்கு நிக்கிறான், பணத்திற்கு வந்திருக்கிறான் என சிரிப்பதுண்டு, அவனை தள்ளிப் போக சொல்வதுண்டு. உண்மையில் அவன் மனதில் அதன் தேவைகள் இருந்தாலும். அதற்காக வந்திருந்தாலும் ஒருவேளை அவைகள் கிடைக்காத பட்சத்தில் அவன் விட்டு செல்வதில்லை. அப்போதும் மனதில் மனிதர்களை அணைத்துக்கொள்வான். 


கோவில் திருவிழா என்றால் சொல்லவே வேண்டாம். இவன் இல்லாமல் எதுவும் நடக்காது என்பதாக பம்பர சுழற்ச்சியில் பக்தி நிரம்பி ஓடிக்கொண்டிருப்பான். எல்லா நல்லது கெட்டதுக்கும் முதல் ஆளாக இருப்பவன். அன்று நடந்த சாதி சண்டையிலும் முதல் ஆளாக இருந்தான். எந்த முன் பின் சிந்தனையும் இல்லாமல் மூர்கமாக நடந்துகொண்டதன் விளைவு இன்று சிறை அறை பல்லிகளோடு பழகிக்கொண்டிருகிறான். 


ஏட்டையா இரவீந்திரன் வந்ததும், டேய் மணி.. என கூப்பிட்டுக்கொண்டே வெளியே சிறை கதவின் பூட்டை திறந்துகொண்டிருந்தார். மணி, ரவி ஏட்டை பார்த்ததும் மரியாதையாக, தோழமையாக ஒரு வலது கையை நெற்றிக்கு கொண்டுபோய் தலை குனிந்து வணக்கம் வைத்தான். ரவி ஏட்டு கனத்த அதேநேரம் கண்டிப்பான சத்தத்தோடு உள்ளே வந்து. “கைவிலங்கு போடணும் மணி” எனச் சொல்லி கைவிலங்கை அவன் கைகளுக்குள் நுழைக்க முயற்சிக்கையில். அந்த விலங்கு தன்னை எதனாலோ முடக்கிக்கொண்டு பூட்ட மறுத்தது. 


“சனியன் நேரத்துக்கு இது இப்படித்தான் செய்யுது” என கைவிலங்கை திட்டிக்கொண்டே அதை சரி செய்து மணியின் கைகளில் விலங்கு பூட்டினார். மணி எதுவும் சலனப்படவில்லை, ஏட்டு ரவி மெதுவாக மணியிடம் 


“உன்ன வேற கேசுல முடிச்சு வைக்க பிளான் பண்ணுதானுவ டே… அனேகமா உன்ன இண்ணைக்கு கொன்னு போட்டிருவானுவனு பேசிக்கிறாங்க”. மணி பதறினான், முதல் முதலில் அவன் முகம் இருண்டு சந்தேகமும், குழப்பமும், கோபமும், பயமும் ஒருங்கே வந்து சேர்ந்தது. 


“ஏட்டு சார் என்ன சொல்லுதீங்க நான் தான் ஒண்ணும் பண்ணலயே சண்டை போட்டதுக்கு எப்படி சார்? நீரு சும்மா சொல்லிதீரும்” என அதை பொய்யாக்க நினைத்தான். “இல்ல மணி, நிசமா கேசு ஒண்ணு முடிச்சு வைக்க மேலிடத்துலேந்து உத்தரவு நீ தான் பண்ணுன மாதிரி முழுசா கதைய எழிதிட்டானுவ, உன்ன இண்ணைக்கு போட்டுட்டா யாரும் எதுவும் கேக்க மாட்டாவனு முடிவு பண்ணிருக்காங்கடே… நீ வேணா பாரு கோர்ட்டுக்கு போறவழியில இண்ணைக்கு முக்கு ரோட்டில வேற ரோட்டுலதான் போவாங்க. என்ன இறங்கி அந்த ரோட அடைக்க சொல்லிட்டாங்க டே… நீ என் சாதிக்கார பய, எனக்கு நீ நிறைய உதவி செஞ்சிருக்க அதனாலத்தான் சொல்லுதேன்” என குறைவான ஒலியில் பேசிக்கொண்டே மணியை வெளியே கூட்டிக்கொண்டு வராந்தாவில் நடந்து கொண்டே பேசினார்.

“ஏட்டையா… என்ன எப்படியாச்சும் காப்பாத்துங்க ஏட்டையா… உமக்கு என்ன வேணாலும் செய்யுதேன், என சற்று சத்தம் அதிகமாக கெஞ்சினான்…


“உச்ச்…. சத்தம் போடாத, நான் சொல்ற மாதிரி கேளு. இல்லேணா இது தான் உனக்கு கடைசி நாளா இருக்கும்” என் இரகசிய குரலில் சொன்னார்.


மணி பதிலற்று கண்களில் கருணையை யாசித்தான்.


“நான் உன்ன என் பக்கத்துல உக்காரவச்சிருக்கேன்.. முக்கு ரோட்டு திரும்பின பிறகு, கைவிலங்க கழற்றிட்டு ஏதாவது வாங்க போற மாதிரி போயிட்டு வந்திடுறேன். வந்த பிறகு விலங்க போடாம வச்சுக்கிறேன், அப்புறம் தப்பிக்கிறது உன் சாமர்த்தியம்” என பேசிக்கொண்டே இருவரும் காவல் வாகனத்தை வந்தடைந்தார்கள். சற்று பழைய வாகனம், வெள்ளை நிற பொலிரோ. மணியும் ஏட்டையா ரவியும் பின்னால் ஏற. காவல் அதிகாரி முன் இருக்கையில் அமர்ந்தார். நந்தன் வாகனத்தை இயக்கினான்.


முக்கு ரோட்டில் வண்டி நிறுத்தப்பட்டதும், கைவிலங்கை களற்றிக்கோண்டு மணியை பார்த்து கண் காட்டிவிட்டு கீழே இறங்கி ஏட்டையா ரவி கடைக்கு சென்றுவிட்டு, சாலை தடுப்பை ரோட்டின் குறுக்கே வைத்துவிட்டு உள்ளே வந்து கைவிலங்கை போடாமல் அமர்ந்துகொண்டார். சில மைல்கள் கடந்ததும் ஒரு ஆற்றுப்பாலம் தென்பட்டதும். 


“என்னய்யா இங்க சரியா இருக்குமா?” என காவல் ஆய்வாளர் திரும்பாமல் கேட்டார். மணியும் “இருக்கும் சார்” எனச் சொல்லிக்கொண்டே மணியின் காலை தன் காலால் தட்டினார். மணி என்ன செய்வதென்றே தெரியாத ஒரு பதட்ட நிலையில் வியர்த்து ஊற்றிக் கொண்டிருந்தான். இன்று இது தான் கடைசி நிமிடம் என அவன் மனம்  பயத்தில் தொண்டை வறண்டு பேச்சு வராமல் அமர்ந்திருந்தான். வண்டி பிரேக் போடும் உந்துதலில் நினைவு வந்து பயந்து மணி “எப்படியாச்சும் காப்பற்றுங்க” என காலில் விழுவது போல வார்த்தைகளற்று சொன்னான். 


ஏட்டையா தன் அருகில் இருந்த விலங்கை கண் காட்டி, கழுத்தை சுற்றும் படி சைகை செய்தார். மறு நொடி வேறு எதுவும் யோசிக்காமால். இவ்வளவு நேரம் தப்பிக்க வழிதேடிய முளையின் சிந்தனைக்கு விடை கிடைத்தது போல வேகமாக கைவிலங்கை எடுத்து ஏட்டையா ரவீந்திரனின் கழுத்தை சுற்றி இறுக்கமாக பிடித்துக்கொண்டான். 


காவல் வாகனம் பிரளயத்தின் காற்றில் நிரம்பிக்கொண்டது. காவல் ஆய்வாளர் பதறி அடித்து தன் கை துப்பாக்கியை எடுத்துக்கொண்டார். மணி ஏட்டையாவின் காதுகளில் “இப்போ என்ன செய்ய? நான் ஓடிடட்டா” என கேட்டுக்கொண்டே பின் கதவை திறந்து கீழே இறங்கிய அடுத்த நொடி உயிர் பயத்தில் ஓடத் தொடங்கினான். அவன் கால்கள் இரண்டு அடிகள் அவன் உயிருக்கு ஓட முயன்றபோது ஒரு பெரும் கூச்சலோடு ஏட்டையா, 


“சார் ஓடுறான் சார் சுடுங்க” என ரவீந்திரன் தன் முழு பெலத்தில் கத்த. அதிகாரியின் கையிலிருந்த துப்பாக்கியின் தோட்டா மணியின் பெயரை மூன்று முறை சொல்லிக்கொண்டு சீறி பாய்ந்து அவன் கழுத்தை துளைத்தது. மணி, தன் நொடிகள் முடிந்து சுருண்டு கீழே விழுந்தான்.


எல்லோருக்கும் என்ன நடந்தது என மனம் ஒப்புக்கொள்ள சில நிமிடங்கள் பிடித்தது. காவல் அதிகாரி தன் தலையில் கை வைத்துக்கொண்டு “இவன் ஏண்டா இப்போ இப்படி ஓட பாத்தான். இன்னைக்கு எப்படியும் ஜாமீன் கிடச்சிருக்குமே என குழப்பத்தில் புலம்பிக்கொண்டே, நாம இப்போ முடிக்கிற மாதிரி எந்த கேசும் இல்லையே. 


ஏட்டையா, இப்போ என்ன செய்ய.? பேசாம முன்விரோதத்தில் மறுபடியும் உன்ன கொல்லப்பாத்தான் அப்போ நடந்த சண்டையில பாதுகாப்புக்காக சுடவேண்டிய நிலை ஆயிடிச்சுனு சொல்லிடலாம். அவன் கால்ல சுட்டிடு, கழுத்து கீழே விழுந்து கல்லோ இல்ல  மரக்கொம்பொ குத்தி கிழிச்சிடிச்சுனு முடிச்சிடு ஏட்டு, ரெண்டு புல்லட் கணக்க நான் காட்டிடுறேன்” என நடந்த சம்பவத்த எழுத சொன்னார்.


ஏட்டு ரவீந்திரன் சிறிது நடந்து ஆற்று பாலத்தில் ஒரு கையில் கைவிலங்கை பிடித்துக்கொண்டு ஒரு கையில் தன் கழுத்தில் இருந்த வெட்டு காயத்தை தடவிக்கொண்டே யாரும் பார்க்காமல் மனதிற்குள் சிரித்தார். ஓட்டுனர் நந்தன் அருகில் வந்து ஏதோ நன்கு அறிந்தது மாதிரி “ஏன் சார்? அவன் இன்னைக்கு ரிலீஸ் ஆகிருப்பான்ல?


“அது எப்படி? அண்ணைக்கு மார்க்கெட்டுல நடந்த சாதி கலவரத்துல நான் விலக்க தானே போனேன். நான் போலீஸ்காரன்னு கூட பாக்காம என் கழுத்துல வெட்டிட்டான். என் சாதிக்குள்ள என் மரியாதையே போச்சு.”


“அவனும் உங்க சாதிதானே ஏட்டையா”


“ஏது இந்த நாயா? என் சாதில பொறந்தா என் கூட சமம்மாகிடுவானா?” எனச் சொல்லிக்கொண்டே மணியின் பிணம் கிடந்த திசையை பார்த்து, காறி எச்சில் துப்பிக்கொண்டே மீண்டும் தன் கழுத்தில் இருந்த காயத்தை தடவி பெருமூச்சு விட்டார்.


கைவிலங்கின் கண்ணீர் துளி சிவப்பு நிறத்தில் வடிந்தது.

average rating is 4.5 out of 5, based on 150 votes, People love it
Comments

Share Your ThoughtsBe the first to write a comment.
bottom of page