
ஓலை கூரை
இரவின் இருட்டை வானம் இடி முழக்கத்துடன் மின்னலை கொண்டு கிழித்துக்கொண்டிருக்க. விசாலத்தின் எண்ணங்கள் அவளைச் சுற்றி ரிங்காரம் செய்துகொண்டிருந்தது, மனதில் நாளைய தினத்தின் ஒவ்வொரு வினாடியையும் நினைத்து எண்ணங்களைத் தென்னை ஓலை முடைவதுபோல முடைந்து அடுக்கிக்கொண்டிருந்தாள்.
மழைத் துளிகள் மெல்ல மரங்களின் இலைகளில், வீட்டின் கூரை ஓலையில், ஓட்டை ஒழுக்கில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில், வீட்டு அங்ஙனத்தில் விழுந்து சத்தம் தந்தது. விசாலதிற்கு “மழை இன்று இப்போது உரத்து பெய்தாலும் பரவாயில்லை நாளைக் கூரை வெய்யும்போது தடையாகப் பெய்யாமால் இருக்கணும்ணு” மனதில் வேண்டிக்கொண்டாள்.
சீட்டில் சேர்த்த ஒவ்வொரு பணத்தையும், கடனை வாங்கியும், வயல் வேலைகளுக்குச் சென்று திரும்பும் போதும், வேலையில்லா நாட்களில் மாற்றான் தோப்புகளுக்கு சென்று சிறிது சிறிதாகச் சேர்த்த தென்னை ஒலை மட்டைகளைக், காயவைத்து, அவளும் பிள்ளைகளுமாகவே முடைந்து, அவள் வீட்டின் கூரையை வெய்வதற்காகச் சேகரித்திருந்தாள்.
நான்கு சுற்று அங்ஙனம், திண்ணை கொண்ட கூரை வீடு அது, கணவனும் அவளும் ஒரு பாடு பட்டுச் செம்மண்ணை உருட்டிச் சுவரெழுப்பி, பனை உத்திரம், களிக்கோல் வைத்துச் சட்டகம் செய்து, தென்னை ஓலைகளைவைத்து கூரை வேய்ந்திருந்தார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன் கள்ளசாராயம் குடித்து கணவன் இறந்து போனபிறகு மூன்று பிள்ளைகளையும் அவளே கூலி வேலை செய்து வளர்த்தாள், பெரியவன் பதின் வயதும், சின்னதுகள் இரண்டும் பெண்பிள்ளைகள் எட்டும், பத்தும் என விசாலத்தின் பசியையும், கடனையும், வேலையையும், பகிர்ந்துகொண்டு வளர்ந்தனர்.
நான்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் வீட்டின் கூரையை வெய்ய ஓலைகள் சேர்ந்திருந்தது, வேலைக்கூலி இல்லாமல் வெய்ய அக்கம்பக்கத்தில் இருந்த அண்ணன்கள், சிற்றப்பன்கள் மற்றும் கொழுந்தன்களை அழைத்திருந்தாள், வெய்ந்து முடித்ததும் சாப்பாடிட அரிசி காய்கறிகள் வாங்கியிருந்தாள். எல்லாம் தயாராக இருக்க, கூரைவெய்யும் கனவை இயற்க்கை தான் இனி தடை செய்யாமல் இருக்க வேண்டும். மழைக் கோள் இருந்தால் கூரையைப் பிரிக்கமாட்டார்காள், ஒரு வேளை பிரித்ததும் மழை பெய்தால் வீடே நாசமாகி இடிந்துவிடும்.
மழை தூற்றலின் சத்தம், விசாலத்தின் எண்ணங்களின் மத்தளச்சத்தமாக அவள் தூக்கத்தை கெடுத்தன. மனம் அங்கலாய்த்தது. மழை மெல்ல வேகமெடுத்து கொட்டி தீர்த்தது, எப்போது உறங்கினோம் என்று கூட நினைவில்லை, காலை வேத கோவில் மணி ஓசையில் கலைந்து எழுந்தாள். எழுந்ததும் ஒழுக்கில் வைத்திருந்த பாத்திரத்தில் நிறைந்திருந்த தண்ணீரை எடுத்து அங்ஙனத்தில் ஊற்றி வானத்தை அண்ணாந்து வெள்ளி தெரிகிறதா, கார் மேகம் கலைந்ததா என்று பார்த்தாள். வானம் சற்று தெளிவடைந்திருந்தது, வீட்டு சேவல் விடிஞ்சாச்சு கூரை மேய வாருங்கோஓஓஓஓஓ என்று கூவியது.
வானத்திலிருந்து கடவுளின் ஆசி பூமியை நிரப்புவது போல வெளிச்சம் நிரம்பத்துவங்கியது, வீட்டுச் சாமான்களையும், பாத்திங்களையும் முன்னேற்பாடாக வெளியேற்றியிருந்தாள், மழை நனைத்துவிடாதபடி ஓலையும், தார்ப்பை வைத்து மூடிவிட்டிருந்தாள். பாதி வெளிச்சத்தில் பாத்திரங்களைத் தடவி எடுத்து. விசாலம், பால் இல்லாத டீயை வெளியடுப்பில் வைத்தாள். டீ யை இறக்கவும் இராசு கையில் பீடியுடன் முதல் ஆழாக வந்து சேர்ந்தார். இராசு கூரை வெய்வதில் கெட்டிக்காரர், ஊரில் எந்த வீடாக இருந்தாலும் இராசுவின் மேற்பார்வையில் செய்வது தான் வழக்கம். அவர் வேலை திறனுக்கான அங்கீகாரம் அது.
புகையை இழுத்துக்கொண்டே “இந்தா மழைகோளு மாறி மாறிக் கிடக்கு, இப்போ பெய்ய வாய்பில்ல ஆனாலும் உறுதியா சொல்ல முடியாது, என்ன செய்வோம்? என்றார்.
விசாலம், “இங்கபாருங்க மழை வராது, நேற்றும் உச்சைக்கு மேல தான் பெய்ஞ்சிச்சு”. ஆர்வமிகுதியாலும், மழை வந்து விடும் என்ற பய உணர்வின் அவசரத்தாலும்
“இந்தாளு ஓல வாட்டச் சூட்டு பற்ற வச்சணும்” ணு என்று சொல்லிக்கொண்டே டீயைத்தந்தாள்.
“முதல்ல பயலுவ வரட்டும், பழைய ஓலைய கீழ இறக்கீட்டு தான் சூட்டு வாட்டணும்” என்று தன் அனுபவத்தின் அறிவை சொல்லிவிட்டு, அவர் டீயை குடித்து முடித்தார்.
இருட்டு இப்போது காணாமல் போயிருந்தது, சிறிது நேர இடைவெளியில் சார்லசும், தவசு மற்றும் அண்டை வீட்டு சொந்தங்களும் வந்து சேர்ந்தனர்.
சார்லஸ் வந்ததும் “என்ன ஓய் காலத்த புகைவண்டி கிளம்பிடிச்சு போல இருக்கு” என்று இராசு பீடி குடிப்பதை நக்கல் செய்து கொண்டு வந்தான்.
“தொடங்கண்டாமா? என்று தவசு கேட்டான்.
“தொடங்குவோம். போயி, ஏணியும் அறுபத்தியும் எடுத்துத்திட்டு வாங்க” என இராசு சொன்னதும், இருவரும் ஏணி எடுக்கப் போனார்கள்,
விசாலத்தின் மகனிடம் “அம்மாட்ட போயி புல்லு அறுக்குற அறுப்பத்திய வாங்கிட்டு வால" எனக் கட்டளை பிறப்பித்தார்.
ஏணி வந்தது, அதை இரண்டு பக்கங்கள் வந்து மோடு கூடும் இடத்தில் சாய்த்து வைக்கச் சொன்னார் இராசு, மற்ற இடங்களைவிட இது தான் மேலே ஏறுவதற்குப் பெலனாக இருக்கும் என்னும் அனுபவத்தைச் சொன்னார்.
“பெல்ல என்னவல பாத்துகொண்டு நிக்குதிய ஏறி ஓலைய பிரியுங்கல என அதட்ட”, சார்லசும், தவசும், இனும் சில ஆண்களும் மேல ஏறிக் கூரை முகடை அடைந்தார்கள்”.
“இய்யாளே பிரிச்சுதோம்” என்று உத்தரவு சொல்லிவிட்டு ஓலையை வளைத்துச் சொருகியிருந்த குச்சியையும், காற்றில் பறக்காமல் இருக்க கனத்திற்க்கு போடப்ட்டிருந்த ஓலை மட்டையையும் அகற்றினார்கள்.
பின்புறத்து வெளிஅடுப்பில் தீ மூட்ட ஊத்தாங்குழலில் ஊதிக்கொண்டிருந்த விசாலம் அதை நிறுத்திவிட்டு ஓலை பிரிப்பதை ஆசையாகப் பார்த்தாள். வானத்தை அண்ணார்ந்து பார்த்து மழையிடம் பெய்துவிடாதபடி மனதில் கெஞ்சிக்கொண்டிருந்தவளை “மைனியே என்று குரல் கேட்க, மனமகிழ்ச்சியில் கண்களில் நிறைந்திருந்த கண்ணீரை தன் சேலையில் ஒற்றிவிட்டு, அடுப்பின் விறகை ஆட்டிக் கனலை தட்டினாள் தீப்பொறி காற்றில் ஓவியமிட்டு மறைந்தது.
அன்றுள்ள வானிலையின் மந்தமான சூழ்நிலையை அறிந்தவர்களாய், வேகமாகக் கூரை ஓலைகளைப் பிரித்துக்கொண்டிருந்தார்கள் சார்லசும், தவசும் உடன் இருந்தவர்களும். இரண்டு மூன்று வரிகள் பிரிக்கப்பட்டு மேல் உத்திரம் தெரிந்தது. பிரித்த ஓலைகளைக் கீழே தள்ள இராசு அதை இழுத்தெடுத்து பிரித்து, ஈர ஓலைகளைத் தனியாகவும், காய்ந்ததை தனியாகவும் அடுக்கினார். அதிலும் நல்ல ஓலைகளை எதற்காவது உபயோகப்படலாமெனத் தனித்து ஒதுக்கினார்.
சூரியன் வெளிச்சத்தை தந்ததே தவிர அவர்களைப் பார்க்க இன்று வரவில்லை. மேகங்கள் மறைத்து மங்கலான ஒளியே நிறைந்திருந்தது. விசாலத்தின் மகனுக்கு மேலே ஏற ஆசைவந்து மாமா நானும் ஏறட்டா? என உத்தரவு கேட்டு மெலே ஏறிப் பிரிப்பவர்களுடன் இணைந்துகொண்டான். ஓரளவுக்கு ஓலைகள் பிரித்ததும் இராசு, காய்ந்த ஓலைகளை ஒரு குவியலாகக் குவித்து வைத்தார்.
விசாலமும், மைனிமாரும் சேர்ந்து மரிச்சினி கிழங்கை உரித்து இளங்குடிக்கு உணவு தயார் செய்துகொண்டிருந்தனர். கூரை பிரித்த ஓட்டை வழி வெளிச்சம் வீட்டை நிரப்பியதும், எலிகளும், கரையான்களும், பாச்சாக்களும் உலகம் அழிவதாக எண்ணி இருட்டையும், நிழலையும் தேடி ஓடிக்கொண்டிருந்தது. தவசு ஓலைகலை பிரித்து இறக்கும்போது சில இடங்களில் மழை நீரால் களிக்கோல்கள் நஞ்சிருப்பதை பார்த்தார். உத்திரத்தில் கரையான் புற்று பிடித்துச் சில இடங்களில் செதில் ஏறித் தின்றிருந்தது. தூரமாய் காய்ந்த ஓலை குவியலருகில் நின்றிருந்த இராசுவை, “கூய்ய்ய்” என்று கூவி அழைத்தான். இராசு பதில் எதுவும் சொல்லாமல் வீட்டிற்குள் சென்று உதிரங்களையும், களிக்கோல்களையும் பார்த்து.
“தொறப்ப வச்சு அடுச்சு தூத்து, பீரிடான் பொடி தூவணும், அவளட்ட இருக்காணு கேக்கேன்” என்று சொல்லி வெளியே வந்து விசாலத்திடம் எறும்புப் பூச்சிகளுக்குத் தூவும் பீரிடான் பொடியைக் கேட்டார். விசாலம் அடுத்திருந்த மைனிகளிடம்.
“யாரட்டயெங்கிலும் இருக்கா பிறகு வாங்கி தாறேன்" எனக்கேட்க.
மைனியில் ஒருத்தி. “நான் எடுத்துகொண்டு வாறேன்” என்று வீட்டைப் பார்த்து வேகமாக நடந்தாள்.
நான்கு சுற்றும் ஓலைகள் பிரித்து இறக்கப்பட்டிருந்தது. அக்கம் பக்க துடப்பங்களும் வந்து சேர்ந்திருந்தன. மேலே இருந்தவகளுக்கு ஆயுதங்கள் இப்போது மாற்றிக் கொடுக்கப்பட்டது. அடுப்பங்கரை பக்கம் தவசும், பிறர் மற்ற இடங்களில் தூசியை, கரையானை, செதிலை, வேட்டுவாளி கூடை, பல்லி முட்டைகளை, வலையான்கலையும் வலையான் கூடுகளையும், பாச்சா, குளியான் என்று சகலவித பூச்சிகளையும் அப்பற படுத்தினர். தவசு அடுப்பங்கரை புகையால் நிரம்பியிருந்த இடங்களைச் சுத்தம் செய்தார். உறிகளை இறக்கி கயிறுகளை மாற்றினார்.
சாணம் மொழுகியிருந்த வீட்டுத் தரை எல்லாம் காய்ந்த ஓலை துண்டுகளும், தூசியும், அழுக்கும் நிரம்பி கிடந்தன. மேகத்தின் நிறம் மெல்ல மாறி இருட்டத் துவங்கியிருந்தது.
வெளியிலிருந்து விசாலம் “வாருங்க இளங்குடி தின்னலாமென” அழைத்தாள்.
கூடவே இராசுவின் குரல் வருகிறதா என் கவனித்தார்கள். இராசு வீட்டிற்க்குள் வந்து எல்லா இடங்களையும் பார்த்துக்
“களிக்கோல் எல்லாம் தூத்திட்டு, பொடி தூவிவிட்டு வாருங்க” என்று சொல்லிச் சென்றார். வானத்தின் மாறுதலைக் கவனித்தவராய் “பெட்டன்னு நடக்கட்டு” என்று வேலையைத் துரிதபடுத்தினார்.
வெளியில் சென்று குவித்து வைத்திருந்த கீழ் இறக்கிய காய்ந்த ஓலைகளைத் தீ மூட்ட அதில், பச்சை மட்டை தென்னை ஓலையைக் கையில் லாவகமாகப் பிடித்துத் திருப்பியும், சுழற்றியும் அதைத் தீயில் காட்டி வாட்டினார். தீச்சூடு பட்டுப் பச்சை நிறம் மாறிக் கருமையானதும் அதைக் கீழே வைத்துவிட்டு அடுத்தடுத்த ஓலைகளை வாட்டினார். எல்லா ஓலைகளும் வாட்டி முடித்ததும். பின்னால் இடுப்பில் தன் வேட்டியில் தொங்கவிட்டிருந்த ஆக்கத்தியில் கீற்றுகளை சீவி தனி தனியாக்கினார். பின் அவைகளை சேர்த்து ஒரு பிடி கீற்றுக்கு ஒரு கட்டு என்று கட்டி வைத்தார். இந்த இடைவெளி நேரத்தில் சுத்தப்படுத்துதல் முடிந்திருக்கும் என அவதானித்து.
“பெலே வாருங்கா” எனக் குரல் கொடுத்தார் சில நேர இடைவெளியில் எல்லோரும் சேர்ந்து, மரிச்சினி கிழங்கும், தேயிலையும் அருந்தி வேகமாக இளங்குடியை முடித்தார்கள்.
இருவரை ஓலை எடுத்துக் கொடுக்கவும், நான்கு பேரை மேலே ஏறி ஒலை கட்டவும் இராசு சொல்லிவிட்டு, வாட்டி வைத்திருந்த பச்சை ஓலை கீற்றுக்கட்டை இருவருக்கு ஒரு கட்டு என்று கொடுத்தார். முதல் இரண்டு வரிகளைக் கீழே நின்று கட்டிவிட்டு அடுத்த வரி ஓலைக்கு மேலே ஏறினார்கள்.
வடக்கிலிருந்து குளிர்காற்று விழுந்து கிடந்த சருகு இலைகளை அள்ளிக்கொண்டு முற்றத்தை சுற்றி இராசுவை கடந்து போனது, காற்றின் திசையயையும் குளிரையும் அறிந்து வானத்தைப் பார்த்து அளவீடு செய்து மழை இன்னும் சில மணி நேரத்தில் வரலாம் என் யூகித்தார். திரும்பி விசாலத்தை பார்த்தார். விசாலம் அவர் ஏன் தன்னை பார்த்தார் என்பதை அறியாமல் என்னவோ என்று பார்க்க, இராசு அவளுக்கு மழையின் கவலையைத் தர வேண்டாமென “முறுக்கான் டப்பா எனக் கூறி எங்கே என் கைகளில் கேட்டார்? அது அவள் காதில் விழவில்லை, அவர் இன்னும் சத்தமாக “வெற்றையும் பாக்கும் எங்க இருக்கு எனக் கேட்டார்" அவள் சைகையிலே திசையைக் காட்டினாள்.
இராசு, “பெண்டாடிக்கு தாலியா கட்டுதியா வேகமா கட்டுங்கல எனச் சீறினார்" அவர் அதட்டல் மழைக்கு தானெனப் புரிநது கொண்டு “ஓலைய குடுங்கடே” யென அவர்கள் வேகத்தை அதிகப்படுத்தினார்கள்.
விசாலம் வானத்தைப் பார்த்தபடி கஞ்சிப்பானையில் அரிசியை கழுவியிட்டு, கூட்டானுக்கு வேண்டிய காய்கறிகளை அண்டை வீட்டு சொந்தங்களோடு பகிர்ந்து நறுக்கி உச்சை கஞ்சிக்கு தயார்செய்துகொண்டிருந்தாள்.
“ஓய் சூட்டு தீரபோவுது என்று தாசு மேலிருந்து குரல் கொடுத்தான். மிதமிருந்த வாட்டிய ஓலை சூட்டை கட்டி மேலே எறிந்து கொடுத்துவிட்டு. வேகமாக நடந்தார் இராசு. விசாலத்திடம் “நம்ம தெங்குல ஓல வேட்டுதேன்னு” விசாலத்திடம் சொல்லிவிட்டு. கால்களில் திளாப்பு அணிந்து தென்னையின் தண்ணீர் வழுக்கை உறுதி செய்துவிட்டு விறு விறுவெனத் தென்னையில் ஏறினார். இரண்டு மூன்று பச்சை மட்டை ஓலைகளை வெட்டிவிட்டு. மூன்று கருக்கையும் வெட்டினார்.
வெட்டிய ஓலைகளை நேரம் கடக்காமல் தீயில் வாட்டி மீண்டும் அடுத்த கெட்டு ஓலை சூட்டுக்கட்டை தயார்செய்தார். அதற்குள்ளாகக் கூரை பாதியை மறைத்து முடித்திருந்தார்கள்.
கீழ் இருந்து முடைந்த ஓலைகளைக் குடுத்துகொண்டிருந்த மணிக்கு இப்போது கை எட்டவில்லை. அவன் இரண்டு ஓலைகளை ஒன்றாகப் பிடித்துத் தூக்கிஎறிய அது பிரிந்து இரண்டு பக்கங்களாக வந்து விழுந்தது. இராசு வேகமாக வந்து
“பெல்ல ஒரு ஓலய குத்தி எறிய தெரியல நீ எல்லாமென” வார்தைகளை நிறுத்தினார்.
மணி சற்று வெட்கி விலகி நின்றான். ராசு இரண்டு ஓலைகளை எடுத்து மேல் முனையை ஒன்றோடு ஒன்றாகக் குத்தி பிணைத்து ஈட்டி எறிவதை போல மேலே எறிந்தார், அது ஓடுபாதையில் சரியாகச் சென்று தவசுவின் கையில் சேர்ந்தது. அடுத்த ஓலையை மணியை எறிய சொல்லிச் சரியாக எறிகிறானா எனக் கண்காணித்து
“அப்படி எறிடேய்" எனப் பாராட்டிச் சென்றார்.
வெட்டியிட்ட கருக்குகளை உடைத்து தண்ணீரை சுற்றி நின்ற பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு. கருக்கை வழித்தெடுத்து அதில் கருப்பெட்டி வைத்து எல்லாருக்கும் சாப்பிட தந்தார். விசாலத்தின் மகன் எல்லோருக்கும் பரிமாறினான்.
மேலே இருந்தவர்கள் வெயில் இல்லாததை நினைத்து மகிழ்ந்தாலும், மழை வந்துவிடுமோ என அய்யப்பட்டவர்களாய் வேகமாக ஓலைகளை வரிசை வரிசையாக வைத்து, கட்டு ஓலையைக் கீற்று இடைவெளியில் நுழைத்து, களிக்கோலுடன் சுற்றி, இடது கையால் கிள்ளி பிடித்து, இரண்டு தும்புகளையும் சேர்த்துபிடித்து திருகி முறுக்கி ஓலை மடிப்பில் சொருகி வைத்து ஓலையின் உறுதியை அசைத்துப் பார்த்தார்கள்.
மதியத்திற்கு முன்பாகவே நாலு சுற்றையும் ஓலைகளால் மறைத்தார்கள், மழை மெல்ல சாரல் எடுத்தது. மேல் முகடு மட்டும் மீதமிருந்தது. இராசுவும் வேகமாக ஓலைகளைத் தர, கட கடவென முகடையும் ஓலைகளை வளைத்து மறைத்துக் குச்சியைப் பக்கவாட்டில் சொருகி நுறுத்தினார்கள். அதுவரை அடக்கினது போல மழை இடி இடித்துக் கூரையை நனைத்தது. கட்டு ஓலைக்கு இட்ட தீயில் மழை துளிகள் விழுந்து சத்தம் தந்து, புகைவந்து அணைந்தது.
படபடத்திதிருந்த விசாலத்தின் மனம் புது ஓலை வீட்டைப் பார்த்து மழை போல நிறைந்து மகிழ்ந்தது. கண்களில் வடிந்த கண்ணீர் மழை நீரில் கலந்து ஒழுகியது. இராசு அவளைப் பெருமையாகப் பார்த்தது அவளுக்கு நெகிழ்ச்சியை தந்தது. அக்கம்பக்க மைனிகளும், அக்காக்களும், அவள் கைப்பிடித்து மகிழ்ச்சியை பகிர்ந்தனர். மழை அவளுக்காக நின்று பெய்ததை நினைத்து அண்ணாந்து பார்த்து நன்றி சொன்னாள்.
கூரை வேய்ந்தவர்கள், கட்டு ஓலைக்காகக் கீற்று சீவி எடுத்த மட்டைகளைக் கூரைமேல் காற்று ஓலைகளைத் தூக்கிவிடாதபடி வரிசையாகப் போட்டுவைத்தார்கள். இரண்டு மட்டைகளைச் சார்லசும், தவசும் அளவுகோல்களாகப் பிடித்து நிற்க, இராசு தன் மடக்கு கத்தியால் நீண்டு நின்ற முதல் வரி ஓலை தும்புகளை அறுத்துத் தள்ளினார். முன் வரிசை சீராக நேர்த்தியாக இருந்தது.
வீட்டிற்குள் சென்று மழை நீர் எங்காவது வடிகிறதா என் ஒரு முறை சுற்றி பார்த்து விசாலத்திடம் வந்து
“உள்ள போய்ப் பாரு” என்றார்.
விசாலம் வேகமாக உள்ளே சென்று முன்னிரவு மழை ஒழுக்குகாகப் பாத்திரம் வைத்திருந்த இடத்தைப் பார்த்தாள், மழை நீர் ஒழுக்கின் சொட்டு நின்றிருந்தது.
அவள் கண்களில் மகிழ்ச்சியிலூறின கண்ணீர் சொட்டு வழிந்து வீட்டு தரையில் விழுந்து புனிதப்படுத்தியது.
-லி
