top of page

ஆடை

“என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என்று தன் தற்கொலை கடிதத்தை எழுதி முடித்தான் சேகர்.


இரண்டு துளி கண்ணீரை கையெழுத்தாய் உதிர்த்தான். அவன் அறை சுவரில் இவனின் கடைசி நொடிகளை எண்ணிக்கொள்வது போலக் கடிகாரம் சரியாக இரவு 10:10 ஐ காட்டியது. கடிகார கடையில் ஓடாமல் இருக்கும் அலங்கார கடிகாரங்கள் இந்த நேரத்தைத் தானே காட்டும். சரிதான், நானும் இப்போது ஒடாத உதவாத கடிகாரம் போல் தான் இருக்கிறேன் என்று தனக்குள்ளே நொந்து கொண்டான். அருகே இருந்த பல்லி. தூக்கு தண்டனை நிறைவேற்றும் அதிகாரிபோல அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.


இது சாவதற்க்கு சரியான நேரம் தான் என்று எழுதிய தாளை மூன்றாய் மடித்து தன் மேசையில் அவன் கைபேசியின் அடியில் பாதி வெளியே தெரியும்படி வைத்தான். கைப்பேசி அதிர்ந்து கொண்டு வெளிச்சம் தர. புதிய குறும் செய்திக்கான சிறு அறிவிப்பு மணி ஒலித்தது. எடுக்க மனதில்லாதவனாய் எடுத்துப் பார்த்தான். சிறு ஆர்வமாய் இருந்த முகம் சுருங்கியது. ஒரு நல்ல ஊக்கம் தரும் செய்தியாக இருந்திருக்கலாம், அது என்றும் போல இன்றும் பூப்போட்டு அலங்கரித்த ஆங்கில குட் நைய்ட் பகிரப்பட்ட படம்.


“ஆமாம் இன்று எனக்கு நல்ல இரவு தான் கடைசி இரவு” என்று,


நினைத்துக்கொண்டே கைபேசியை மேசைமேல் இருந்த கடிதத்தின் மேல் வைத்து. முதலில் வந்து தான் தூக்கில் தொங்குவதை பார்ப்பவர் எளிதில் பார்த்து எடுக்கும்படியாய் அந்தக் கடிதம் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொண்டான்.


சன்னல் இல்லா அறை என்பத்தால் மின் விசிறியை நிறுத்தியதும் அறை சூடும், படபடப்பாலும் அவன் முகம் வியர்த்திருந்தது. தான் போட்டிருந்த கை இல்லா பனியனில் முகத்தைத் துடைத்துக்கொண்டு, கட்டியிருந்த லுங்கியை மடித்து கட்டி விட்டு அவன் சாகத் தயாராய் மின்விசிறியில் கட்டி வைத்திருந்த நாண் கயிற்றை மேலே பார்த்தான். காப்பியங்களில் போர் கொடி ஆடும்போது வேண்டாம் என்று செய்தி சொல்லுமாம். ஆனால் இந்தக் கயிறோ


“எப்போ வருவ?”


என்பது போல அல்லவா நிற்க்கிறது. மனதில் சற்று பயம் சூழ வயிற்றை கலக்குவது போல் இருந்தது. நெஞ்சும் படப் படவென அடித்துக்கொண்டது. அருலிருந்த சொம்பு தண்ணீரை மடக் மடக்கென ஒரே மூச்சில் குடித்தான்.


“இந்தத் தண்ணி வெசமா இருந்திருக்கலாம், இல்ல விக்கியாவது செத்துபோகலாம். கயிறுச் சாவு எப்படி இருக்குமோ? ஒரு ஒத்திகை பார்க்கக் கூட வழியில்ல” என எதை எதையோ பினாத்திக்கொண்டான்.


நேரம் உன் சாவைப் பார்த்துத் தான் நகர்வேன் என்பது போல் மெதுவாக நகராமல் நகர்ந்தது. சாவது நிச்சயம் என்று முடிவெடுத்தவனாய் நாற்காலியை நகர்த்தி நாண் கயிற்றுக்கு நேராக வைத்து மேலே ஏறினான். கயிறை கையில் பிடித்துக்கொண்டு தன் அறையைச் சுற்றி பார்த்தான்.


அது புறநகருக்கு வேலைக்குச் செல்ல வசதியாயிருக்கும் என்று வாடகைக்கு எடுத்துச் சேகரும் அவனுடன் வேலை பார்ப்பவரும் தங்கி இருந்தனர். அந்த வீடு ஒரு வாசலுக்குள் வந்து பின்னர் வாடைகைக்காகப் பிரித்துப் பாகம் பாகமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. உள்ளே வந்ததும் இடது பக்கத்தில் முதல் கதவில் ஒரு குடும்பம். நேராக இருந்த அறையில் சேகரும். வலது புறம் மாடி ஏறுவது போலச் சென்று மீண்டும் இரண்டு குடும்பங்கள் என்று ஒரு வீடு தான் ஆனால் நான்கு வீடு என்பதாய் இருந்தது. எல்லோருக்கும் ஒரே களிப்பறை, ஒரே குளியல் அறைதான். அதுவும் சேகரின் வாசலுக்கு அருகிலேயே இருந்தது. எல்லாரும் அவர் அவர் வேலைகளில் பரபரப்பாக இருந்தாலும் பார்க்கும் போதெல்லாம் விசாரித்துக் கொள்வதும், வீட்டு விழாக்களுக்குத் தின்பண்டங்களைப் பகிர்வது என்று இணக்கமாகவே இருந்தனர்.


சேகர் தன் இறுதி நொடிகளை, இறுதி எச்சிலை முழுங்கிக்கொண்டான். கழுத்து வலிக்கும் என்ற பயத்தில் ஒரு கையைத் தன் கழுத்துக்கும் கயிறுக்கும் நடுவிலே தன் சுய நினைவில்லாமலே வைத்துக்கொண்டான். மெல்ல தன் வலது காலை முன்பாக நகர்த்தி நாற்காலியைப் பின் நகர்த்தி கீழே தள்ளப் பெருவிரலால் அதன் ஓரத்தைக் கவ்விக்கொண்டான். வெளியே இரு சக்கர வாகனம் வந்து நிற்க்கும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு யாரவது பார்த்து விடப் போகிறார்கள் என்று அவசரமாகக் கதவின் தாழ்பாளை பார்த்தான். தாழ்பாள் போடப்பட்டிருந்தது. நாற்காலி சற்று பின் சென்று ஆடி மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. நேரத்தை வைத்துப் பக்கத்து வீட்டுக்காரர் தான் என்று யூகித்துக்கொண்டான். வண்டி நிறுத்தப்பட்ட சில நிமிடங்களில்,

“சேகர் சேகர்” என்று கூப்பிடும் சத்தம் வந்தது. சத்தம் பக்கத்து வீட்டுக்காரரோடது தான்.


“அய்யோ நிம்மதியாகச் சாகக் கூட விடமாட்டாங்க” என்று சலித்து கொண்டு, “என்னணா? என்று குரல் குடுத்தான்.


“ஒண்ணும் இல்ல தம்பி உன்னோட ஒரு குடம் தண்ணி நான் எடுத்துக்கிறேன் நாளைக்கு உனக்கும் சேத்து புடுச்சு தறேன்னு” சொன்னார் அவர்.


“நாளைக்கு என்ன குளிப்பாட்ட தேவைபடும்” என்று நொந்துகொண்டு,


“சரிணா”


என்று சொல்லிச் சில வினாடிகள் அமைதி காத்தான். மறுபடியும் பேசவேண்டி வருமோ என்று எண்ணிக்கொண்டான். குளியல் அறை கதவு திறந்து மூடும் சத்தமும், பின்னர் தண்ணி ஒழுகும் சத்தமும் கேட்டது. சரி போய் விட்டார், நாமளும் போய்ச் சேந்திருவோம் என்று நினைத்துகொண்டே நாற்காலியைப் பின்னுக்கு தள்ள எக்கினான்.


சிறிது நேரத்தை மெதுவாக நகர்த்தி வேகத்தைக் குறைத்து பார்போம் என்றால். அவன் முகத்திலிருந்து வடிந்த வேர்வை துளி கீழே விழ மெதுவாகத் தரையை பார்த்துப் பயணித்துக் கொண்டிருந்தது, அவன் கயிற்றில் பிடித்திருந்த கை மெதுவாகக் கயிறை இறுக்கமாகப் பிடிக்க, எக்கிய வயிறு உள்ளே சென்று வெளியில் வர, நாற்காலி மெதுவாகப் பின்வாக்கில் சாய்ந்து, இரண்டு காலில் நின்று, சற்று சுளன்று ஒரு காலில் மாறிக் கீழே விழ அவன் பற்றியிருந்த காலிலிருந்த பிரியும் கடைசி நகர்வு வர, கழுத்தில் கயிறு கொஞ்சம் கொஞ்சமாக இறுகி நரம்புகள் புடைக்கும் அந்த இறுதி ஒரு பாதி நொடியின் நேரத்தில்.


அவன் கட்டியிருந்த லுங்கி இடுப்பிலிருந்து அவிழ்ந்தது. அவன் உள்ளாடை அணியவில்லை என்று அப்போது தான் அவன் நியாபகத்திற்க்கு வந்தது.


அவன் வேர்வைதுளி நாற்க்காலியை கவ்வியிருந்த கால் பெருவிரலில் விழுந்தது. ஆயிரம் மடங்கு வேகத்தில் அந்த வலது கால் பெருவிரல் நாற்காலியைக் கிழேவிழாமல் பிடிக்க முயற்சித்தது. அவன் இடது கை மின்னல் வேகத்தில் அவன் லுங்கியின் கீழே விழுந்துகொண்டிருந்த கடைசி ஓரத்தைப் பிடிக்க முய்ற்ச்சி செய்ய, நாற்காலி கீழே விழ இன்னும் சாய்ந்தது. தன்னை சமநிலைப்படுத்திக்கொண்டே இடது காலைப் பின்னுக்கு மடித்து லுங்கியை பிடித்துக்கொண்டான். அது மூட்டி தைக்கப்பட்ட லுங்கி என்பதால் அவன் காலில் சட்டைமாட்டியில் மாட்டி வைப்பது போல மாட்டிக்கொண்டது. இப்போது அவன் ஒற்றை காலில் நடனமாடும் மங்கை போல ஒரு கால் மடித்து, வலது கையைக் கயிற்றில் பிடித்து, இடக்கையை சமனிலை படுத்த விரித்து வழைந்து வழைந்து கயிற்றில் தொங்கியும் ஆடிக்கொண்டே நின்றிருந்தான்.


வெளியே குளியலறை கதவு திறந்து சாத்தும் சத்தம் கேட்டது. சேகர் பக்கத்துவீட்டுகாரரை அழைக்கலாமா? வேண்டாம என யோசித்தான். அழைத்தால் மானம் போய்விடும். உள்ளே வந்ததும் நம்மைக் காப்பாற்றுவாரோ இல்லையோ விழுந்து விழுந்து சிரித்துவிடுவார். என்ன செய்ய அவரும் போய்விட்டால் அங்கு உதவ வேறு யாரும் இல்லை. உயிரா மானமா? என்று நொந்து கொண்டான். அவன் யோசித்து தன் அடிவயிற்றின் காற்றுப்பையிலிருந்து சிறிது காற்றை இழுத்து.


“அண்ணா” என்று கூப்பிட எத்தனித்தப்போது. வெளியே வெளிச்சம் நிறுத்தப்பட்டு. வீட்டின் கதுவு தாழிடும் சத்தம் கேட்டது. பாதி மனதுடன் அழைத்த நாவும் ஓசை தராமல் நிறுத்திக்கொண்டது.


இப்போது நாற்காலியைச் சீர் செய்து நிறுத்தி, கயிற்றை அவிழ்க்க வேண்டும். அது அவ்வளவு சுலபம் அல்ல, சிறிது நிலை மாறினாலும் மரணம் நிச்சயம். அதற்க்கு தானே ஆசைப்பட்டேன் ஆனால் இப்போது இப்படி அம்மணமாகச் சாக நேருமோ என்று,

 

“அய்யோ வேண்டவே வேண்டாம்”.


 செத்தாலும் மானத்தோடு தான் சாக வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். கதவைத் திறந்து முதலில் வருபவர் கடிதத்தைப் பார்க்க வேண்டும் என்றல்லவா நினைத்தேன் இப்போது… சீ இப்படி என்னைப் பார்ப்பார்களே என்று, மனதில் நொந்துக்கொள்ள. கயிறு இறுகி கழுத்து நெரிந்து வலி அதிகமாகிகொண்டே இருந்தது.


 ஒற்றை காலில் நாற்காலியை விழாமல் பிடித்திருப்பதால் பெருவிரல் துடங்கி, முட்டி, முதுகுதண்டு, கழுத்து, இரத்த ஓட்டம் குறைந்ததால் தலை, கண் என்று உடலெல்லாம் உயிர் போகும் வலியை உணர்ந்தான். ஆனால் உயிர் மட்டும் போகவில்லை. ஒவ்வொரு நொடிக்கும் வலி அதிகமாகிக்கொண்டே இருந்தது.


மணி இப்போது இரவு 10:30. பக்கத்துவீட்டுக்காரரை கூப்பிடகூட நாவு எழும்பவில்லை. மெதுவாகப் பின் காலைத் தூக்கி இடது கையில் லுங்கியை பிடித்துக்கொள்ள மெல்ல அசைந்து காலைத் தூக்கினான். கைக்கும் லுங்கிக்கும் சிறிது தூரம் தான். நாற்காலில் நகர்ந்து விடாமல் மெல்ல மெல்ல அங்குலம் அங்குலமாய் கையை நகர்த்தினான். கழுத்தில் கயிறு இறுக அரம்பித்தது வலது கைக் கொக்கறையை குரல் வளையை உடையாமல் தடுத்துக்கொண்டிருந்தது. இடது கையின் ஆள்காட்டி விரலும் நடு விரலின் நுனியும் லுங்கியை தொட மிக அருகில் வர. சட்டென்று அவன் சிறூனீரகப்பை உடைவது போல் உணர்ந்தான். குடித்த ஒரு சொம்பு தண்ணீர் இப்போதே வெளியேறிவிட வேண்டும் என்று முழுகொள்ளவை எட்டி அணைஉடைக்க எத்தனிக்கும் பல லட்ச கன அடி தண்ணீரின் உந்துதலை தந்தது. அவன் இடது கால் இப்போது சட்டெனக் கீழ் சுருங்கி தொடையை இறுக்கி அணை உடைவை தடுத்தது. அவன் கண்ணீர் மட்டும் தடுப்பணை எதுவும் இல்லாமல் வெளியே ஒழுகியது. சாவதை தவிர வேறு வழி இல்லை என்று எண்ணிக்கொண்டான்.


நாற்காலியின் தரையில் ஊன்றியிருந்த ஒற்றை கால், பலகை நெரிந்து முறிவதற்கு முன் நடுங்கும் ஒரு சிறு அதிர்வொலியை தந்தது. சேகர் கயிற்றில் பிடித்திருந்த வலது கையில் சிறிது பெலனை கொடுத்துத் தன் உடலை மேலே தூக்க முயர்சித்தான். நாற்காலியின் கால் சற்று தளர்வு பட்டு ஒரு காலில் நின்ற நாற்காலி இப்போது சுற்றி இரண்டு காலில் நிற்க்கும்படி வந்து முன்னும் பின்னும் ஆடித் தொங்கலில் நின்றது.


சுவரில் இருந்த பல்லி இவனின் கூத்தைப் பார்த்தது போதும் என்று. “இது உனக்குத் தேவையா? என்பது போலச் சத்தம் செய்துவிட்டு. சற்று தொலைவிலிருந்த சிறு குளவியை உணவாக்கலாம் என்று குடு குடு என்று நகர்ந்தது. குளவிக்கு சற்று தொலைவில் நின்று சிறிது நேரம் நோட்டமிட்டுவிடு ஒரே பாய்ச்சலாக முன்னேறியது. குளவி தனக்கு வரும் ஆபத்தை உணர்ந்துகொண்டு பெரிதாய் ஒன்றும் அலட்டிக்கொள்ளாமல் அந்த இடம்விட்டு பறந்து சேகரின் அருகில் வந்தது.


ஏற்கனவே பாதி உயிர் போனதுபொல் தொங்கிகொண்டிருந்த சேகர் குளவி தன் அருகில் வருவதை பார்த்ததும் திடுக்கிட்டுத் தான் நிற்வாணச்சாவு அடைவது நிச்சயம் என்று தனது இடது கையால் அதைத் துரத்த முயல நினைத்தான். குளவி சேகரின் கணுக்கால் அருகில் பறந்து இரண்டு ஒரு முறை வட்டம் அடித்து. காலிற்க்கு முன்புன் பின்புமாகப் பறந்து உலங்கு வானூர்தி எப்படி மேல் நோக்கி எழும்புமோ அப்படியே மேல் நோக்கிப் பறந்து உயர ஆரம்பித்தது. அவன் முட்டியின் அருகில் வந்து ஒருமுறை அமர்ந்து கொட்டலாமா எனறு இடம் பார்த்த்தது. வேண்டாம் என்பது போல் மீண்டும் மேல் நோக்கி நகர்ந்து உயர்ந்தது.


சேகர் குளவியின் விளையாட்டு தாங்காது அங்கும் இங்குமாக ஆடிக்கொண்டிருந்தான். குளவியை தட்டி விடும் முயற்ச்சியில் காலில் மாட்டியிருந்த லுங்கியை தவற விட, அது கீழே விழுந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் பிதிங்கி நின்ற விழியில் முழித்துக்கொண்டிருந்தான். குளவி இப்போது அவன் அந்தரங்கத்தின் அருகில் வர. சேகரகுக்கு மூச்சே நின்று போனது. கொட்டி விட்டால் ஊருக்கு இன்னும் பேசிச் சிரிக்க விடயங்கள் சேர்ந்து விடுமே.


“அய்யோ பல்லியே அந்தக் குளவியை நீ தின்றிருக்கலாமே? இல்லை சும்மாவாவது இருந்திருக்கலாம். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றல்லவா எழுதினேன். உன் பெயரை அல்லவா எழுதி இருக்க வேண்டும். இது இனி தற்க்கொலை அல்ல இனிமேல் இது திட்டமிட்ட படு கொலை. கொலைகாரன் குளவி, கொலை செய்யத் தூண்டியவன் பல்லி. இவர்களையும் என்னைப் போல் தூக்கிலிட்டு கொல்லுங்கள். இதுவே என் கடைசி ஆசையும் கூட என்று புலம்பினான்”.


பல்லி கேட்டதோ என்னவோ வேகமாகக் குழல்விளக்கின் பின்னால் சென்று ஒழிந்துகொண்டது. குளவி இன்னும் மேலே பறந்து அவன் இடுப்பில் சென்று அமர்ந்தது. சேகர் கூச்சத்தால் நெழிய நாற்கலியை பிடித்திருந்த கால் நழுவியது. நாற்காலி இபோது அவன் காலில்லிருந்து விடுபட்டுக் கீழே விழாமல் நேராக நின்றது.


நாற்க்காலி கீழே விளுந்தது என்று நினைத்துப் பதற்றத்தில் இரண்டு கைகளையும் கயிறில் பிடித்துத் தொங்கினான். குளவி அவனை விட்டபாடில்லை. மேலே சென்று அவன் கைகளில் ஒரு குட்டு குட்டியது. வலிதாங்காமல் கையைவிட. அவன் செத்தேன் என்று தன் காலைக் கீழே விட, தன்னை அறியாமலே நாற்க்காலியில் நின்றான். ஒரு நிமிடம் அவனுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. தன் சுய நினைவைச் சுதாரித்துக்கொள்ள சில நிமிடங்கள் பிடித்தது.


மெதுவாய் கழுத்திலிருந்து நாண்கயிறை கழற்றி மெல்ல கீழ் இறங்கி நாற்க்காலியில் நிற்வாணமாகவே அமர்ந்தான்.


இப்போது அவனுக்கு அவசரமாய் லுங்கி தேவைபடவில்லை.




-லி

writerlivin@gmail.com

average rating is 4.5 out of 5, based on 150 votes, People love it
Comments

Share Your ThoughtsBe the first to write a comment.
bottom of page