
அதீத சிந்தனை
இரவில் எனது அறையில், போர்வையின் அணைப்பில், தூக்கத்தின் கைகளுக்குள் மயங்கிக்கிடந்தேன். உடலும் மனமும் முழு நிம்மதியாய் எந்தச் சலனமும் இல்லாமல், அலைகளில்லா ஏரியில் அசைவிலாமல் கிடக்கும் தோணிபோல இருட்டுக்குள் மிதந்துக்கிடந்தது.
சட்டென யாரோ, வீட்டு அழைப்பு மணியை அடிக்கும் சத்தம் கேட்க, தூக்கத்தின் அணைப்பு மெல்ல நழுவிக்கொண்டது. எங்கள் வீடு இரண்டு மாடி வீடு. எனது அறை மேலே முதல் தளத்தில் அமைந்திருந்தது. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஒரு அறையும், தங்கைக்கு ஒரு அறையும் எனக் கீழ் மாடியில் இருந்தது. இப்போது இரண்டாவது முறை அழைப்பு மணி மிகத் துல்லியமாகக் கேட்டது. தூக்கம் கலைந்திருக்க வேண்டும். ஆனால் கண்கள் இன்னும் மூடித்தான் இருந்தது. மணி என்னவிருக்கும் என மனம் நினைத்தது. ஆனாலும் அறிந்து கொள்ள கண்கள் விரும்பவில்லை. வேறு யாராவது சென்று பார்பார்கள் இன்னும் சிறிது நேரம் தூங்கலாமென மனமும் உடலும் ஒருமனதாக முடிவு செய்தது.
மீண்டும் அழைப்பு மணி, கண் அதுவாகத் திறந்தது, தலையைத் தூக்கி அலமாரியில் இருந்த டிஜிட்டல் கடிகாரத்தை பார்த்தேன். சிகப்பு நிற ரேடியம் ஒளி, மங்கலாகத் தெரிந்து பின் தெளிவடைந்தது. யாமம் கடக்க இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. 1:50 மணிக்கு யார் வந்திருப்பார்கள் என நினைக்கும் போதே மீண்டும் அழைப்பு மணி அடித்தது.
“அப்பா அம்மா எல்லாம் என்ன பண்றாங்க, ச்சை… நிம்மதியா தூங்க விடுறாங்களா, நான் எழும்பிப் போகப் போறதில்ல”
என்று முனங்கிக்கொண்டே கட்டிலில் அமர்ந்திருந்தேன். மீண்டும் இரண்டு முறை மணி அடித்தது. கடுப்பாகி பொர்வையை தூக்கி வீசிவிட்டு. வேகமாகப் படி இறங்கி கிழே சென்றுகொண்டிருந்தே. அடுத்த அழைப்பு வருவதற்கு முன் திறந்துவிட வேண்டும் என வேகமெடுத்தேன்.
கீழே இரு அறைகளும் அடைக்கபட்டு இருந்தது. வேகமாகச் சென்று, முன் வாசல் கதவின் பிடியில் கையை வைத்துத் தாள் திறக்க என் கையை நகர்த்தும் பொது. ஒரு வேளை திருடர்களாக இருந்தால், இந்த நேரத்தில் யார் வருவார்கள்? என்று வெளி பார்க்கும் துவாரம் வழியாகப் பார்த்துவிடலாமென முடிவு செய்தேன்.
அறைமுழுதும் எதிரொலி வரும் அளவுக்கு இருதய துடிப்பின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மெதுவாக என் இடது கண்ணைத் துவாரத்தில் பதித்து யாரெனப் பார்கிறேன், அங்கு யாருமே இல்லை. ஒருவேளை போய்விட்டார்களா எனக் கண் எடுக்காமலே நினைத்துக்கொண்டிருந்தேன்.
மீண்டும் அழைப்பு மணி கேட்டது.
உலகின் ஒட்டு மொத்த குளிரும் எனக்குள் வந்துவிட்டது. கைக்கால்கள் வெடவெடத்து நடுக்கத்தில் தள்ளாடிக்கொண்டிருந்தது. கீழே அமர்ந்து விடலாமா வேண்டாமா என மனம் எண்ணி. மீண்டும் ஒரு முறை உறுதி செய்துவிட நினைத்தது. கண் எடுக்காமலே மீண்டும் சுற்றி நோட்டமிட்டு பார்த்தேன். எவரும் அங்கில்லை. வேகமாக அறைக்கு மீண்டும் ஓடி விட நினைத்தேன்.
இல்லை வேண்டாம், அப்பாவை எழுப்பி விடலாமென முடிவு செய்து. அப்பா எனக் கூரல் எழுப்ப முயற்சித்தேன். இறுக்கி அடைக்கப்பட்ட ஊறுகாய் குப்பி போலத் தொண்டை அடைத்துக் குரல் வெளிவரவில்லை. என் கழுத்தை பிடித்துக் கத்தி பார்க்கிறேன். காற்றடைத்த ஊதற்பை கட்டப்படாமல் இருந்தும் அதில் காற்று வெளியேறாத நிலை.
நேராகவே எழுப்பிவிடலாமென அறையைப் பார்த்து நடக்க துவங்கினேன். பின்னாலிருந்து எதாவது பிடித்துவிடும் என்ற பயத்தில் ஒரு அடிக்கு ஒருமுறை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி முதல் அறைக்கு நடந்தேன். அறைக்கு அருகே சென்றதும் மீண்டும் ஒருமுறை, அம்மாவை அழைத்துப்பார்த்தேன் குரல் வெளிவரவே இல்லை. உடல் எல்லாம் வியர்வையால் ஈரப்பட்டு இன்னும் குளிர்ந்தது. திகில் முழு கொள்ளளவை எட்டியது. அப்பா அறையின் கதவருகில் நின்று திரும்பி முன் வசலை ஒருமுறை பார்த்துக்கொண்டேன். பின் திரும்பி அப்பாவின் அறையின் கதவைத் திறக்க நினைக்க அதிரிந்துவிட்டேன்.
இப்போது நான் நின்றிருந்தது முன் வாசல் முன்பு, எப்படி இது சாத்தியம்? நான் அப்பா அறையின் முன் நின்றிருந்ததில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்புவதற்குள் எப்படி இங்கு வந்தேன். குழப்பம் என்னைக் கயிறுகளால் கட்டி இறுக்கிக்கொண்டது. மீண்டும் மீண்டும் பல முறை அப்பாவின் அறைக்குச் செல்ல முயன்று பார்த்தேன். அத்தனை முறையும் மீண்டும் என்னை முன் வாசலுக்கு முன்பாக நுறுத்தியது சுழற் காலம்.
திரும்பி மாடிக்குப் போய்விடலாமென நினைத்தாலும் அதே நிலை படிகட்டு ஏறி முடிவில் நான் வந்து நிற்பது முன் வாசல் தான்.
பித்து பிடித்ததுபோலகிவிட்ட்து. இனி பொறுமை இல்லை, நான் என்ன செய்ய, எங்கும் போகவும் முடியவில்லை, யாரையும் அழைக்கவும் முடியவில்லை. முடிவு இல்லாமல் விழுந்து கொண்டே இருக்கும் பாதாளம் போல இது நடந்தேறிக்கொண்டே இருக்கிறது.
மீண்டும் அழைப்பு மணி கேட்டது.
ஒருவேளை முன் கதவைத் திறந்தால் தான் இதிலிருந்து மீள முடியும் என மனம் சொல்ல, மெதுவாகத் தாளை இறக்கி, பின் கைபிடியை சரித்து கதவை இதைவிட மெதுவாக எவரும் திறந்திருக்க முடியாது என்பதை போலத் திறந்தேன்.
நள்ளிரவின் இருட்டை தவிர அங்கு யாருமே இல்லை. வெளி தெருவில் நாய் ஒன்று வழக்கத்தைவிட அதிக சத்தமாகக் குரைத்தது. பின் ஊளையிட்டது. என் நாக்கு வரண்டு இல்லாத எச்சிலை விழுங்குவது போல விழுங்கித் தொண்டை வலித்தது. வெளியே போய்ப் பாக்கலாமா வேண்டாமா எனத் தயக்கத்தில் கால் எடுத்து வெளியே வைக்க முயல்கையில். ஒரு ஏடிஎம் அட்டை போன்று சிகப்பு நிறத்தில் ஒரு அட்டை கிழே வைக்கப்பட்டிருந்தது. இது என்ன அட்டையாக இருக்கும். எடுக்க மனம் தயங்கியது.
இரவு ஏன் இவ்வளவு பயம் கொள்ள செய்கிறது. பேசாமல் போய்ப் படுத்திடலாம். ஆனால் மீண்டும் காலம் சுழன்று இங்குத் தானே வந்து நிற்கும். வெறு வழி இல்லையென, நடப்பது நடக்கட்டும் இதற்கு ஒரு முடிவு அறிந்தே ஆக வேண்டும் என முடிவு செய்து. குனிந்து அந்த அட்டையை எடுத்தேன்.
முன் பகுதியில் ஆங்கில எழுத்து “x” எனப் பதிந்திருந்தது. அல்லது பெருக்கல் குறி. அந்த அட்டையைத் திருப்பிப் பார்த்ததும். குலை நடுங்கி பின்னால் விழுந்து விட்டேன்.
சில வினாடிகளுக்கு என்ன ஆனது என்று புரியவில்லை.
எழுந்து பார்த்தபோது, என் அறையின் கட்டிலுக்கு கீழே விழுந்து கிடந்தேன். அது கனவு என நான் உணர்ந்து கொள்ள சில நிமிடங்கள் பிடித்தது. என்னைச் சற்று சுயனினைவுக்கு கொண்டு வந்து நேரத்தைப் பார்த்தேன். அதே சிகப்பு டிஜிட்டல் கடிகாரம், இப்போது யாமம் கடந்து வைகரைவந்தாயிற்று என்று 2:02 எனக் காட்டியது. எனக்குள் பெரும் அங்கலாயிப்பு வெறும் பத்து நிமிடம் தான் கனவு கண்டிருக்கிறோமா? கனவில் வெகுநேரம் இருந்த உணர்வு எனக்குள் இருந்தது. நான் 01:50 எனப் பார்த்த மணி கனவில் தானே?. நிசத்தில் எத்தனை மணி நேரம் என்பதை எப்படி கண்டுபிடிப்பது என என் எண்ணங்கள் சிதறிக்கொண்டே இருந்தது. நிச்சயமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாகக் அடைபட்டிருந்தேன் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
இரவின் குளிரை தோல் மெல்ல அறிவது போலக் கனவின் காட்சிகள் ஒவ்வொன்றாக எனக்குள் விரிய அரம்பித்தது. என் காதுகளில் வீட்டின் அழைப்பு மணி நினைவில் கேட்டது. தண்ணீர் வற்றி காய்ந்து போன தொண்டையை சரி செய்ய. கட்டிலுக்கருகில் மேசையில் இருந்த தன்ணீர் டப்பாவை எடுத்து. மூடியை திறக்க முயற்சிக்க அது இறுகி திறக்க கடினமாக இருந்தது. வெளியே கனவில் கேட்ட அதே நாயின் குரல் எந்தத் தொனி மாற்றமும் இல்லாமல், அப்படியே கேட்டது. முதலில் சத்தமாகக் குரைத்துவிட்டு பின் ஊளையிட்டது.
பயத்தில் இன்னும் நாவரண்டு உடைந்துவிடும் போலானது. வேகமாகப் போர்வையின் துணியை வைத்து மூடியை பிடித்துத் திறந்து. எதையும் சிந்திக்காமல், டப்பாவை மேல் தூக்கி, வாய்க்கு இடைவெளிவிட்டு, மட மடவெனத் தன்ணீரை என் வாய்க்குள் ஊற்றினேன். குடிக்கும்போது என்னை அறியாமலே கண்களை மூட. கனவில் நான் கையில் வைத்திருந்த அட்டை கண் முன் தெரிந்தது. அதன் பின்புறத்தில்.
“நீ இன்று மாலைக்குள் இறந்துவிடுவாய், இதை நீ யாரிடமாவது சொல்வாயெனில், உனக்குப் பதிலாக அவர்கள் இறந்துவிடுவார்கள்" என அச்சிடபட்டிருந்தது.
அது கண் முன் தோன்றியதும், தண்ணீரின் வேகம் தவறி, நாசியில் விக்கி, தண்ணீர் மூக்கு வழியாக வடிந்தது. கடினமாகப் பல முறை இருமி அப்போதே செத்துப்போனது போல உணர்ந்தேன், தலையில் அடித்துப்பார்த்தேன். கண்கள் கண்ணீரில் நிறைந்து சிவந்தது. இப்போதே செத்திருப்பேன் என மனம் சொல்லிக்கொண்டது. கனவில் கண்ட அட்டையில் காட்சி தெளிவாக நினைவில் பதிந்திருந்தது.
இப்போது என்ன செய்ய?
இது வெறும் கனவு, தூங்கிடலாமென முடிவு செய்து மீண்டும் படுத்துவிட்டேன், வெகுநேரம் கடந்தும் தூக்கம் வரவில்லை. சிகப்பு அட்டை மீண்டும் மீண்டும் நினைவில் வந்துகொண்டிருந்தது. மனம் உண்மையில் இன்று இறந்து போவேனோ என ஒவ்வொரு நொடியும் கேட்டுக்கொண்டது, மன சஞ்சலத்தின் நடுவில், எப்போது உறங்கிவிட்டேன் என்பது அறியாமல் உறக்கத்தின் போர்வையில் மூடப்பட்டேன்.
காலை விடிந்து,
இன்று இறந்துவிடுவோமோ? என்னும் கேள்வி தான் என் முதல் எண்ணமாக மூளை உணர்ந்தது. இது வெறும் கனவு நிச்சயம் இருக்காது என மனம் ஆறுதல் சொல்லியது. கனவு இவ்வளவு தத்ரூபமா வருமா? எனச் சிந்தித்துக்கொண்டே நேரம் அறிய திரும்பிக் கடிகாரத்தை பார்தேன். கல்லூரிக்கு நேரமாகிவிட்டிருந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் தயாராகி ஓடினால் தான் 08:30 க்கு வரும் கல்லூரி வாகனத்தைப் பிடிக்க முடியும்.
வேகமாகக் கிளம்பி, பையை எடுத்துக்கொண்டு படிகளில் கீழே அவசரமாக இறங்கினேன். படிகள் ஒன்றன் பின் ஒன்றாக மாறுகையில் என் கால்கள் வேகத்தைக் குறைத்துக்கொண்டே வந்தது. சிகப்பு அட்டையும் நேற்று நடந்த கால சுழர்ச்சியும் நினைவில் வந்து நான் கடைசி படி அருகில், முன் வாசலைப் பார்த்தபடி நின்றிருந்தேன்.
“எத்தனவாட்டி கூப்பிடறது, எருமை மாதிரி தூங்குற. கலையில கல்லூரி நேரமாச்சில்லையா? வேகமா வந்து சாப்பிடு”
என அம்மாவின் குரல் எண்ணங்களைக் கலைத்து என்னை அழைத்தது. வேகமாக அம்மாவிடம் சென்று. “அம்மா நேற்று ஒரு கனவு பார்தேன். அதுல… “
எனச் சொல்லி வார்த்தைகளை விழுங்கினேன், ஒரு வேளை சொல்லி அம்மாவுக்கு ஏதாவது நடந்திச்சிண்ணா? அய்யோ வேண்டாமென மனம் முடிவு செய்து.
“அதுல நீங்க எனக்கு வண்டி வாங்கி குடுத்திட்டீங்க எனச் சொல்லிச் சமாளித்துவிட்டேன். அவசரமாகத் வார்த்தைகளுடன் தோசையையும் விழுங்கிக்கொண்டேன்.
ஆசை தான், பேருந்து போயிடபோகுது, சாப்பிட்டு சீக்கிரம் கிளம்பு என அம்மா துரத்தினாள்.
அப்பா தங்கச்சிய பள்ளிக்கூடத்தில விடப் போயிருப்பாரு, மீண்டும் எண்ணங்கள் தேனிக்கள் போல வந்து மொய்த்தன, ஒரு வேளை உண்மையில் இன்று நான் இறந்துவிடுவேனோ என மனம் படபடத்தது. அரை சாப்பாட்டில், “இல்ல இன்று நான் கல்லூரி போகல மா எனச் சொல்லிவிட்டு வேகமாகக் கையைக் கழுவிவிட்டு. மீண்டும் அறைக்குள் சென்று கதவைச் சாற்றிவிட்டேன்.
நேரத்தை நிறுத்தி வைக்க முடியுமா? என்று கூட யோசித்துவிடேன். மனம் ஆள்மனதில் இன்று கடைசி நாளென நம்ப துவங்கியிருந்தது. வெளியே வாகனம் நிறுத்தும் சத்தம் கேட்டதும். அப்பா தானென உறுதி செய்தேன். நான் என் அறை கதவை லேசாகத் சத்தம் இல்லாமல் திறந்து என்ன சொல்லபோகிறாரெனக் கவனிக்க காதுகளை வெளி நீட்டிக்கேட்டேன். என் காலணியைப் பார்த்துவிட்டு,
“இன்னும் கல்லூரி போவலயா அவன் என அம்மாவிடம் கடிந்து கேட்டார்.”
“என்ன ஆச்சுனு தெரியல, தயாராகி வந்தான், திடீரென்று பொகலனு மேலே போயிட்டான்”
“மேலே போயிட்டான் என்னும் வார்த்தைகள் ஏன் எனக்கு எதிரொலியாகக் கேக்குது?” அய்யோ இன்னைக்கு எதுவோ நடக்க போகிறது. என நினைக்கும்போது யாரோ மாடி படி ஏறும் சத்தம் கேட்டது. அப்பாவாகத்தான் இருக்கும். வேகமாகக் கட்டிலில் உடல்நிலை சரி இல்லாதது போலப் படுத்துக்கொண்டேன்.
அப்பா உள்ளே வந்து, “என்னடே அச்சு உனக்கு? ஏன் கல்லூரி போகல?
என்ன சொல்ல எனச் சில நொடிகள் குழம்பி போய். பழைய கதையாக “வயிறு வலிக்கு” எனச் சொன்னதும் அப்பா சிரித்து விட்டார்.
“இவ்வளவு வயசாகியும் உனக்கு இன்னும் வயிறு வலி போகல" என்னிடம் ஏதோ ஒரு படபடப்பை உணர்ந்த அவர். இன்னும் தீவிரமாக,
“ஏதாவது செய்யுதா டே, என்னனு சொல்லு?”
ஒண்ணும் இல்லப்பா வயிறு வலிதான். கண்டத தின்னாதன சொன்னா கேக்கணும்” னு முறுமுறுத்துக்கொண்டே அறையை விட்டு வெளியேறினார்.
அவரை அழைத்துச் சொல்லிடலாமா? எப்படி சொல்றது “கனவு கண்டேன். இண்ணைக்கு நான் இறந்திடுவேன்னு சொன்னா, பயித்தியம் னு நினைப்பாரு. ஒருவேளை உண்மையா இருந்து அவருக்கு ஏதாவது ஆகிட்டா மனம் சுழல் தண்ணீரின் குமிழிகள் போல வடிவங்கள் மாறி உடைந்தும், பிறந்தும் மீண்டும் உடைந்தும். இரணப்பட்டுக்கொண்டிருந்தது.
கடிகாரம் நேரத்தைத் துல்லியமாகக் கடத்தி அதன்வேலையை சரியாகச் செய்தது. எனது அறையின் கதவுகளும் ஜன்னலும் காணாமல் போய்ச் சுவர் மட்டும் இருப்பதை போல உணர்ந்தேன். ஒரு கன சதுரத்திற்குள் அடைபட்டவனானேன். என்னால் நேராகச் சிந்திக்க இயலவில்லை. உடல் நடுக்கம் கொண்டு குளிர்ந்து போனது. நான் சாகக் கூடாது என நினைக்கிறேன். சாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.
யாரோ பெரிய சுத்தியல் எடுத்துச் சுவரை அடிப்பது பொல ஒரு சத்தம். அதைப் புரிந்துகொள்ள முயன்றபோது அம்மா கதவைத் தட்டுகிறாளெனப் பட்டது. நிசம் தான், அம்மா ஏதோ ஒரு கசாயத்தை எடுத்துவந்திருந்தாள், குடித்தால் வயிறு வலி சரியாகிவிடும் எனச் சொல்கிறாள். நான் இவங்க ஏன் தண்ணீருக்குள் இருந்து பேசுகிறார்கள் என நினைக்கிறேன். எதுவும் பதில் சொல்லவில்லை, வாங்கி குடித்துவிட்டேன் எனக்குத் தனிமை தேவைபட்டது. அம்மா வெளியேறினாள்.
அதிகமாக மனஅழுத்தம் வந்திருக்கும் என நினைக்கிறேன், இப்போது வாந்தி வருகிறது. வேகமாகக் கழிப்பறை சென்று கோப்பையில் வாந்தி எடுத்துவிட்டேன். இந்தக் கனவை யாரிடமாவது சொல்லியாக வேண்டும் இல்லை என்றால் இந்த மன உளைச்சலாலே இன்று நான் இறந்துவிடுவது உறுதி. அப்பொது கனவு நிறிவடைந்துவிடும், கனவு உண்மையாகும் என மனம் உறுதி செய்தது.
எவ்வளவு மணி நேரம் நடந்தேன் எனத் தெரியாமல் அறைக்குள்ளே நடந்து நடந்து கால்கள் வலிக்க நடந்துகொண்டிருந்தேன். அந்தச் சிகப்பு அட்டையிலிருந்த வாசகம் எனக்குள் எப்படி பதிவாகிவிட்டது, ஒரு வார்த்தை மாறாமல் மனம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தது. நான் பயித்தியமாகிவிடேனோ? என நினைத்துக்கொண்டேன். கனவு எப்படி நிசம் ஆகும். நான் அதீத சிந்தனை கொள்கிறேன், தேவையற்று யோசிக்கிறேன் என அறிவு சொன்னாலும். மனம் கேட்க மறுக்கிறது. சிந்தனைகளைக் கட்டுபடுத்த இயலவில்லை. வாழ்க்கையில் எதை எல்லாமோ கனவு கண்டு கொண்டிருந்தேன். இப்படியொரு கனவு என்னைத் திசை திருப்பும் என நினைக்கவே இல்லையேயென மனம் புலம்புவது வெளியே அறை முழுதும் நிரம்பிக்கொண்டிருந்தது. புலம்பலிலான நீர் இந்த அடைபட்ட அறையை நிரப்பி என்னை மூழ்கடித்தது. நான் மூச்சு விட முடியாதவனாக உள்ளே அமிழ்ந்துகொண்டிருந்தேன். என் கண்கள் பிதுங்கி வெளியே வந்துகொண்டிருந்தது. நரம்புகள் முழுதும் முறுகி புடைத்து வெடிப்பதாக உணர்ந்தேன். ஒரு மெல்லிய நொடியில் உயிர் என்னை விட்டுப் பிரிந்தது.
காதில் அழைப்பு மணி கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தேன். கனவில்லை, மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தேன். செவிலியர் ஒருவர் அருகில் எனது இரத்த அழுத்த நிலை, இதயதுடிப்பை எழுதிக்கொண்டிருந்தார். அவசர சிகிச்சை அழைப்பிற்காக அழைப்பு மணி மாட்டியிருந்தார்கள். செவிலியரிடம் கை அசைவில் நேரத்தை விசாரித்தேன் இரவு 8:30 என்று சொன்னார்கள்.
சிகப்பு அட்டை எண்ணம் இப்போது வெறும் நகைச்சுவையாகத் தெரிந்தது.
-லி
