top of page
Filter by Tags

இரு துருவங்கள்

சில நாட்களில்

வரும் மேகங்களுக்கு

என்னை அடையாளம்

தெரிகிறது, அவை

உருவங்களை

மாற்றி மாற்றி

என்னோடு பேசுகிறது.


அதை பூமி இறங்கி

மடியில் வந்துவிடு

என்கிறேன்.

நீயும் எனக்கு மேகம்தான்

ஏன் நீ வானில் இருக்கிறாய்

எனக்கேட்கிறது.


—லி

வீடும் நானும்

ஒரு வித இருட்டு

இறுக்கமாக என்னை

எப்போதும் மூடியிருக்கிறது

பல நூறு சங்கிலிகள்

உடல் முழுதும் இறுக்கி

கட்டியிருக்கிறார்கள்.

சிந்தனைகளையும்

ஆயுள்கைதியாக

மாற்றிவிட்டார்கள்.


எதுவுமே எனதில்லை

உறக்கம் கூட

என் முடிவில் இல்லை.

என் வீட்டில்

நேரம் கிழித்த

நாள்காட்டியில்

பிறந்தநாள் தேதி மட்டும்

அடிக்கடி வந்து

போகிறது.


-லி

பேசு

காலத்தை முடிந்தவரை

தள்ளி, அந்தி பார்த்து

சங்கதிகளை சேர்த்து

பேச முயல்கிறேன்.


களைப்பு என்கிறாய்

ரிமோட் என்கிறாய்

தண்ணி என்கிறாய்

பசி என்கிறாய்

பிள்ளை என்கிறாய்

சார்ஜர் என்கிறாய்


எனக்கு நீ நிச்சயமாய்

ஒரு பதில் தந்துவிடு

அதற்கும் என்ன

என்கிறாய்.


-லி

நுண் மொழி

இயந்திரங்களும்

தனிமையடையும்

துணைதேடும்

இ-காதல் மொழி

படைக்கும், உரையாடும்

ஒரு குளிரூட்டியின்

இத கணத்தில்

கலவி செய்ய நினைக்கும்

மனிதர்களிடமிருந்து

கவிதை கொள்ளும்

அதன் உலகில்

பெரும் புலவனாகும்

பின் மெல்ல

புலம்பெயரும்.


-லி

உறங்கும் மனம்

வேடிக்கையாக இன்று

மனம் உறங்குகிறது.

எந்த எண்ணங்களும்

எங்கும் பிறக்கவில்லை

என்னவாயிற்றோ?

கரும்துளையின் ஆழத்தில்

அடைபட்டுகிடக்கிறது அவைகள்.


உறங்கும் மனதை

எழுப்பி விடாதீர்கள்

அது எண்ணங்களை

நிரப்பிக்கொள்ள

எஞ்சிய என் ஆன்மாவை

மீண்டும் சாப்பிட துவங்கும்.


-லி

bottom of page