top of page
Filter by Tags

எவரும் கவனிக்கப்படாத பூ

எத்தனை கவிதைகளை 

இந்த உலகம் கடந்திருக்கும் 

எவரும் கவனிக்கப்படாத 

பூவாக அது 

சிறு வாசனையுடன் 

காற்றில் ஆடி 

சாலையோரம் 

விளையாடிக்கொண்டு 

ஒரு தொடுதலுக்காக 

காத்திருக்கும் தானே? 

 உலகம் சில நேரம் 

கருணையற்றது தான்.


-லி

பேனா உறவு

எழுதும் பேனாவும்

துரோகம் செய்கிறது

பிரிந்து தொலைகிறது

மனதை அறிந்து

நடந்துகொள் பேனாவே

என்கிறேன்.

மனதைஅறிந்ததால் தான்

மறைந்து கொள்கிறேன்

என்கிறது.


-லி

திசை

பல முக்குரோட்டின்

நடுவே நிற்கும்

தானியங்கி சமிக்கை

விளக்குகள் ஏதோ ஒரு

திசைக்கு வழிகாட்டுகிறது.


மனம் எல்லா நேரங்களிலும்

திரும்பி வந்தவழிபோகும்

ஒரு யூ திருப்ப

ஒளிக்காவே காத்திருந்து

திசைகளை நிராகரிக்கிறது.


நிராகரிக்கபட்ட திசைகள்

எதையோ முறுமுறுத்து

சிலரை தனதாக்கிகொள்கிறது.

அதிலும் அதே வாழ்வும் சாவும்

மனிதர்களை விழுங்குகிறது.


-லி

சில வீடுகள்

விளையாடி ஓய்ந்த

காலியான மைதானம்

கொள்ளும் அமைதியாக

கல்லியாணமான

பெண்பிள்ளைகள்

வீடுகள்


அலமாரியில்

அடுக்கி வைக்கப்பட்ட

வாழ்க்கை, நகரும்போது

அச்சு கொள்ளும்

நினைவுகளும்,

திளைத்து ஆறும்

கண்ணீர்களும்


பெண்பிள்ளை வீட்டின்

கால கடிகாரத்தில் பதிந்த

பிரிவின் நேரம் முதல்,

திரும்பி சுழன்று

முன்னும் பின்னும் சென்று

நினைவுகளை கொண்டு

இயங்குகிறது.


-லி

நிலைமாற்றம்

மணலைமூடிக்கிடக்கும்

ஒட்டகக்குட்டிகள் கடக்கும்

கால்தடங்களை

காற்று மூடிவிடுகிறது,

ஒட்டகக்குட்டிகள்

வழி அறியாமல்

தொலைந்து போகிறது.

பயத்தில் குட்டிகள்

மணலை மூடிக்கொள்கிறது.


-லி

bottom of page